முகிலன், கவின் இருவரும் தொடக்கநிலை ஐந்தில் படிக்கிறார்கள். அன்று அவர்களுக்கு மிக முக்கியமான இறுதித் தேர்வு. வகுப்பில் உள்ள அனைவரும் தேர்வெழுதத் தயாராக இருந்தார்கள். ஆசிரியர் தேர்வுத்தாளைக் கொடுக்கத் தொடங்கிவிட்டார்.
கவின் தேர்வுத்தாளை வாங்கிப் பார்த்த பிறகு தன் பையில் இருந்த எழுதுகோலைத் தேடினான். அவனுக்குப் பயத்தில் வியர்த்துவிட்டது. ஏனென்றால், அவசரத்தில் எழுதுகோலை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டான்!
“கடவுளே! இப்போது எப்படித் தேர்வு எழுதுவது?” என்று கவின் பயத்தில் நடுங்கினான். அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.
அவன் அழுதுகொண்டிருப்பதை அவன் அருகில் அமர்ந்து இருந்த முகிலன் பார்த்துவிட்டான். முகிலன் உடனே தன்னிடம் வேறு எழுதுகோல் இருக்கிறதா என்று தன் பையில் தேடினான். அவனிடம் இரண்டு எழுதுகோல்கள் இருந்தன.
முகிலன் சற்றும் யோசிக்காமல், ஒன்றை எடுத்து கவினிடம் கொடுத்து, “கவலைப்படாமல் தேர்வு எழுது கவின்!” என்றான்.
கவினுக்கு உயிரே திரும்பி வந்தது போல இருந்தது. அந்த எழுதுகோலை வைத்து கவின் தேர்வை மிகச் சிறப்பாக எழுதி முடித்தான்.
தேர்வு முடிந்ததும் கவின் முகிலனைக் கட்டிக்கொண்டு, “நீ மட்டும் எழுதுகோல் எனக்குக் கொடுக்கவில்லையென்றால், நான் இன்று தேர்வு எழுதியிருக்க முடியாது. மிகவும் நன்றி முகிலா!” என்றான்.
நீதி: நாம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது நமக்குக் கைகொடுப்பவரே நம்முடைய சிறந்த நண்பர்.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
காலத்தினால்: ஒருவருக்கு உதவி தேவைப்படும் சரியான நேரத்தில்
செய்த நன்றி: செய்யப்படும் உதவி
சிறிது எனினும்: மிகச் சிறியதாக இருந்தாலும்
ஞாலத்தின்: இந்த உலகத்தை விட
மாணப் பெரிது: மிகவும் பெரியதாகும்
ஒருவருக்கு நெருக்கடியான அல்லது உதவி தேவைப்படும் சரியான நேரத்தில் நாம் செய்யும் உதவி, அளவால் மிகச் சிறியதாக இருந்தாலும் அதன் சிறப்பை ஆராய்ந்து பார்த்தால் அது இந்தப் பூலோகத்தை (உலகத்தை) விட மிகப் பெரியதாகும்.

