வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சிறுமிக்குப் பாராட்டு, அங்கீகாரம்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சிறுமிக்குப் பாராட்டு, அங்கீகாரம்

2 mins read
abec2957-5e13-40c8-9fdb-80e64927e137
தொண்டுக்காகப் பரிசு பெறும் சிவதாரணி.  - படம்: சிவதாரணி பார்த்திபன்
multi-img1 of 2

உயர்நிலை மூன்றாம் ஆண்டு மாணவி சிவதாரணி பார்த்திபன் தொடங்கிவைத்த ‘புரோஜெக்ட் கைண்ட்’ (Project KIND) என்ற திட்டத்தால் பலர் பயனடைந்துள்ளனர்.

மாதத்திற்கு ஒருமுறையாவது யாருக்காவது நல்லது செய்ய வேண்டும் என்பதே அந்தத் திட்டத்தின் நோக்கம்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிவர் வேலி (River Valley) பகுதியில் உள்ள கடை ஒன்றில் தீ விபத்து நேர்ந்தது. அதன் பிறகு, ஜூலை மாதம் தஞ்சோங் காத்தோங் சாலையில் திடீரென ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டு அங்கும் விபத்து நேர்ந்தது.

இந்த இரண்டு ஆபத்தான நேரங்களிலும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பலரைக் காப்பாற்றினர்.

ஊழியர்களுக்கு நன்றிகூற நினைத்த சிவதாரணி, உடனே, வேறு பள்ளிகளில் படிக்கும் தம் நண்பர்கள் நான்கு பேரையும் சேர்த்துக்கொண்டு குழு ஒன்றை உருவாக்கினார்.

அந்த வெளிநாட்டு ஊழியர்களுக்காகச் சிறப்பு அன்பளிப்புகள் அடங்கிய பைகளைத் தாங்களே சொந்தமாகத் தயாரித்துக் கொடுத்தனர். சிங்கப்பூரின் அதிபர் மாளிகையான இஸ்தானாவில் அந்த ஊழியர்களை நேரில் சந்தித்து, “காப்பாற்றியதற்கு மிக்க நன்றி அண்ணா!” என்று கூறி அவர்களைச் சிறப்பித்தனர்.

சிஎச்ஐஜே செயின்ட் ஜோசப் கான்வென்ட் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சிவதாரணி, தம் சமூகச் சேவைக்காக இந்த ஆண்டு மாணவர்களுக்கான அறியப்படாத நாயகர்கள் விருதைப் பெற்றார்.

81 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 194 மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பரிவு, துணிச்சல், சேவை ஆகியவற்றுக்காக அந்த விருது, தொடக்கப்பள்ளி முதல் தொடக்கக் கல்லூரி வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

“இவ்விருதைப் பெறுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. நான் செய்த சமூகப் பணிகள் இவ்வளவு பெரிய அளவில் கவனிக்கப்படும் என்று எதிர்பார்க்கவில்லை. என்னுடன் இருந்த என் குழுவினர், குடும்பத்தினர், உறவினர், தொண்டூழியர்கள் எல்லாருக்கும் இவ்விருது பெருமை சேர்க்கிறது. இது எனக்கு இன்னும் தொடர்ந்து சமூகத்திற்காக வேலை செய்ய ஊக்கம் அளிக்கிறது,” என்றார் சிவதாரணி.

குறிப்புச் சொற்கள்