ஓர் அடர்ந்த காட்டில் சின்னு என்ற ஒரு சுறுசுறுப்பான அணில் வாழ்ந்து வந்தது. குளிர்காலம் வருவதால், சின்னு தனக்குத் தேவையான உணவுப் பொருள்களைச் சேகரிப்பதில் மிகவும் மும்முரமாக இருந்தது. சின்னுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. அதுதான் பேராசை. தனக்குக் கிடைத்த எதையும் யாருடனும் பகிர்ந்துகொள்ள அதற்கு மனசு வராது.
ஒருநாள் சின்னு ஒரு மரத்தின் அடியில் மிக அரிதான, சுவை மிகுந்த கொட்டைகள் (Nuts) கிடப்பதைப் பார்த்து. ‘ஆஹா! இந்தக் கொட்டைகள் எல்லாம் எனக்கே! இதுதான் உலகிலேயே சிறந்த உணவு!’ என்று நினைத்து, மற்ற அணில்களுக்குத் தெரியாமல், தனியாக ஒரு பெரிய மரப் பொந்திற்குள் அனைத்தையும் கொண்டுபோய்ச் சேர்த்தது.
கொட்டைகள் அதிகமாக சேர்ந்துவிட்டாலும் சின்னுக்கு மனத்தில் அமைதி இல்லை. எல்லாவற்றையும் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்ததில் அதற்கு மகிழ்ச்சியைவிட பயம்தான் அதிகமாக இருந்தது. யாராவது வந்து எடுத்துவிட்டால் என்ன செய்வது என்று கவலைப்பட்டுக்கொண்டு காவல் காத்தது.
மறுநாள் மாலை, பலத்த மழை பெய்தது. அனைத்து பறவைகள், விலங்குகள் தங்கள் இடங்களை விட்டு வெளியே வரவில்லை. சின்னு தனது கொட்டைக் குவியலைப் பார்த்துக்கொண்டே தனியாக உட்கார்ந்திருந்தது. அதன் இதயம் ஏதோ ஒரு துக்கத்தால் கனத்தது.
மழை நின்றது. அப்போது, அதன் பொந்தின் அருகே வந்து நின்ற சின்ன குருவி ஒன்று, குளிரில் நடுங்கிக்கொண்டே, “அணில் அண்ணா... எனக்குப் பசிக்கிறது. எனக்கு ஏதாவது உணவு கிடைக்குமா?” என்று தயக்கத்துடன் கேட்டது.
சின்னு முதலில் கொடுக்கத் தயங்கியது. பிறகு, ‘இத்தனை கொட்டையில் ஒன்று கொடுத்தால் என்ன குறைந்துவிடும்?’ என்று நினைத்து, ஒரு சிறிய கொட்டையைக் குருவியிடம் கொடுத்தது.
அதைப் பெற்ற குருவி அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அது சின்னுக்கு நன்றி சொல்லிவிட்டு, மிகவும் இனிமையான குரலில் ஓர் அழகான பாடல் ஒன்றைப் பாடியது.
அந்தப் பாட்டைக் கேட்டதும் சின்னுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தனது நூற்றுக்கணக்கான கொட்டைக் குவியலைப் பார்த்தபோது கிடைக்காத ஆனந்தம், அந்தக் குருவியிடம் ஒரு கொட்டையைப் பகிர்ந்து கொண்டதால், அதன் பாடலின் மூலம் தனக்குக் கிடைத்ததை சின்னு உணர்ந்தது.
தொடர்புடைய செய்திகள்
உடனே சின்னு தனது தவற்றைப் புரிந்துகொண்டது. அது மகிழ்ச்சியுடன் வெளியில் ஓடி, மற்ற அணில் நண்பர்களையும் சின்னஞ்சிறு பறவைகளையும் சத்தமாக அழைத்தது. “நண்பர்களே, நான் சேர்த்து வைத்திருக்கும் சுவையான கொட்டைகள் உங்களுக்கும் உள்ளது! வாருங்கள், அனைவரும் சேர்ந்து உண்போம்!” என்று அழைத்தது.
அனைத்தும் மகிழ்ச்சியாகி வெளியே வந்தன. அவை அணில் அண்ணா இருந்த இடத்தை நோக்கிச் சென்றன. அணில் அண்ணா கொடுத்த கொட்டைகளை அவை மகிழ்ச்சியாக கொரித்து உண்டன. அந்தச் சிறிய காடே ஒரே சந்தோஷக் கொண்டாட்டமானது! அன்று முதல், சின்னு பேராசையை விட்டது. எல்லாவற்றுக்கும் மேலாகப் பகிர்ந்து உண்ணும் மகிழ்ச்சியே சிறந்தது என்று புரிந்துகொண்டு வாழ்ந்தது.
சின்னஞ்சிறு குருவி ஒன்று,
“பேராசை சுமை தரும்,
பகிர்ந்தால் நிம்மதி வரும்.
தனியாக சாப்பிட்டால் சுவை குறையும்,
நண்பர்களுடன் சாப்பிட்டால் சுவை கூடும்.
வைத்தால் பயம் வரும்,
கொடுத்தால் ஆனந்தம்,
பேராசை நட்பை அழிக்கும்,
பகிர்வு நட்பை வளர்க்கும்!
என்று பாடிக்கொண்டு பறந்து சென்றது.
நன்னெறி: பேராசையால் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட, பகிர்ந்து வாழ்வதே உண்மையான மகிழ்ச்சியைத் தரும்.

