ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்

ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்

2 mins read
a0eb9457-9771-4d35-8c82-a08ff0b7643e
போட்டியில் தோல்வி அடைந்ததால் கவலையுடன் இருந்த கவினை ஆசிரியர் ஆறுதல்படுத்துகிறார். - படம்: செயற்கை நுண்ணறிவு
Google News Preferred Icon

கவின், அர்ஜுன் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் தொடக்கநிலை ஐந்தில் படித்து வந்தார்கள்.

ஒருநாள் ஆசிரியர், மாணவர்களைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று செடிகளைக் காட்டினார். அவற்றின் பெயர்களைச் சொல்லி, அவை வளரும் விதம் பற்றி விரிவாக விளக்கம் கொடுத்தார்.

அத்துடன் மாணவர்களுக்குச் சில விதைகள், தொட்டி, மணல் ஆகியவற்றைக் கொடுத்து, “இந்த விதைகளை நட்டு வளர்க்க வேண்டும். யாருடைய செடி நன்கு வளர்ந்திருக்கிறதோ, அவருக்குப் பரிசும் உண்டு,” என்று ஒரு போட்டியை அறிவித்தார்.

கவின் மிகவும் துடிப்பானவன். அவன் விதையை நட்ட அடுத்த நாளே, “ஏன் இன்னும் செடி முளைக்கவில்லை?” என்று அடிக்கடி மண்ணைத் தோண்டிக் கொண்டே இருந்தான்.

செடி முளைத்த பிறகு, அது இன்னும் சீக்கிரம் வளர வேண்டும் என்ற ஆசையில் அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் ஊற்றினான். “சீக்கிரம் பூ பூக்க வேண்டுமே!” என்று பதற்றப்பட்டான். அவனது அளவுக்கு மீறிய அவசரத்தால் செடியின் வேர் அழுகத் தொடங்கியது.

ஆனால், அர்ஜுன் அமைதியாக இருந்தான்.

அவன் தினமும் செடிக்குச் சரியான அளவில் தண்ணீர் ஊற்றினான். போதிய சூரிய ஒளி படும்படி வைத்தான். செடி மெதுவாக வளர்வதைப் பொறுமையாகப் பார்த்து ரசித்தான். பூக்கள் பூக்கும் வரை அமைதியாகக் காத்திருந்தான்.

போட்டி நாள் வந்தது. மாணவர்கள் அவரவர் செடித் தொட்டிகளை ஆசிரியரிடம் காண்பித்தனர்.

அவர்களில் கவினின் செடி வாடிப் போயிருந்தது. ஆனால், அர்ஜுனின் தொட்டியிலோ அழகான சிவப்பு நிறப் பூக்கள் பூத்துக் குலுங்கின. அதனால் அர்ஜுனுக்கு முதல் பரிசு கிடைத்தது.

தன்னுடைய செடி அழுகிப்போனதால் வருத்தத்துடன் காணப்பட்ட கவினிடம் ஆசிரியர், “கவின், ஒரு காரியம் வெற்றி பெற வேண்டுமென்றால் வெறும் முயற்சி மட்டும் போதாது. அந்தப் பலன் கிடைக்கும் வரை பொறுமையாகவும் இருக்க வேண்டும். இதையே நம் முன்னோர்கள் ‘ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்’ என்றார்கள்,” என்றார்.

கவின் தனது தவற்றை உணர்ந்தான். இனி எந்த ஒரு செயலிலும் அவசரப்படாமல் பொறுமையைக் கடைப்பிடிக்கப் பழகிக் கொண்டான்.

கதையின் நீதி:

“எந்த ஒரு செயலுக்கும் உரிய காலம் வரும் வரை பொறுமையாகக் காத்திருப்பதே வெற்றியைத் தரும்.”

குறிப்புச் சொற்கள்