ஆரோக்கியமே உண்மையான செல்வம்!

ஆரோக்கியமே உண்மையான செல்வம்!

2 mins read
81422036-485f-4d13-a208-6b7dedca3f49
இடைவேளை நேரத்தில் சங்கர் ஆப்பிளையும் ராஜு பீட்சாவும் சாப்பிடுகிறார்கள். - படம்: செயற்கை நுண்ணறிவு

ராஜு, சங்கர் என இரண்டு நண்பர்கள் இருந்தனர்.

சங்கர் எப்போதும் காய்கறிகள், பழங்கள் எனச் சத்தான உணவுகளைச் சாப்பிட்டு, தினமும் மாலையில் ஓடி ஆடி விளையாடுவான்.

ஆனால் ராஜு, பீட்சா, பர்கர் போன்ற சுவையான தீனிகளை மட்டுமே சாப்பிட்டுக்கொண்டு, எப்போதும் வீட்டிற்குள்ளேயே கணினியில் விளையாடுவான்.

ஒருநாள் பள்ளியில் இருந்து மாணவர்களைச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதாக ஆசிரியர் கூறினார்.

ஆனால், சுற்றுலா செல்வதற்கு முந்தைய நாள் இரவு ராஜுவுக்குக் கடுமையான காய்ச்சல் வந்துவிட்டது.

மருத்துவர் அவனிடம், “நீ சத்தான உணவுகளைச் சாப்பிடாததால்தான் உனக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டது,” என்று கூறி ஓய்வெடுக்கச் சொன்னார்.

அடுத்த நாள் சங்கர் உட்பட மற்ற அனைவரும் சுற்றுலா சென்றனர்.

ராஜுவால் செல்ல முடியாததால் வருத்தத்துடன் அழுது கொண்டிருந்தான்.

அப்போது அவனது அம்மா, “பார்த்தாயா ராஜு, நாங்கள் உன்னைச் சுற்றாலாவிற்கு அனுப்ப அனுமதி அளித்தாலும் நீ ஆரோக்கியமாக இல்லாததால் உன்னால் செல்ல முடியவில்லை.

“நம்மிடம் எவ்வளவு பொருள்கள் இருந்தாலும் ஆரோக்கியம் இல்லை என்றால் பயனில்லை. அதனால்தான் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று சொன்னார்கள்,” என்றார்.

ஆரோக்கியத்தின் அருமையை உணர்ந்த ராஜு, அன்றிலிருந்து சத்தான உணவுகளைச் சாப்பிட்டு, தினமும் நண்பர்களுடன் சுறுசுறுப்பாக விளையாடத் தொடங்கினான்.

நீதி: “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.” நமது உடலில் ஆரோக்கியம் இல்லை என்றால், நம்மிடம் எவ்வளவு பணம், பொருள்கள் அல்லது மகிழ்ச்சியான வாய்ப்புகள் (சுற்றுலா போன்றவை) இருந்தாலும், அவற்றை நம்மால் அனுபவிக்க முடியாது. எனவே, சத்து நிறைந்த சரிவிகித உணவுகளைச் சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதே மிகச்சிறந்த செல்வம் ஆகும்.

குறிப்புச் சொற்கள்