ரவி வீட்டிலும் பள்ளியிலும் பலருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவன். அத்துடன் அவன் படிப்பிலும் திறமையானவன். அதனால் அவனை அனைவருக்கும் பிடிக்கும்.
ஒருநாள் ரவி பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையத்திற்குச் சென்றான்.
அப்போது அங்கு ஒரு பெண்மணி மட்டுமே அமர்ந்து யாரிடமோ அழுகையுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருப்பதைக் கவனித்தான்.
அவனுக்கு அவரைப் பார்க்கும்போது இரக்கமாக இருந்தது. ஆனாலும் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடக்கூடாது என்ற எண்ணத்தில் அவனுடைய பேருந்துக்காக காத்திருந்தான்.
அப்போது ஒரு பேருந்து வந்து நின்றது. அதிலிருந்து ஒருவர் இறங்கிச் சென்றார். அப்போது அழுதுகொண்டு இருந்த பெண்மணி திடீரென்று அவசரமாக பேருந்தில் ஏறிவிட்டார். ஓட்டுநரும் பேருந்தின் கதவை மூடிவிட்டு பேருந்தை இயக்கத் தொடங்கினார்.
அப்போதுதான் அந்தப் பெண்மணி அவசரத்தில் அவருடைய கைப்பையை எடுக்காமல் பேருந்தில் ஏறியதைக் கவனித்தான் ரவி.
உடனே சிறிதும் தாமதிக்காமல் ஓடிச்சென்று அந்தக் கைப்பையை எடுத்துக்கொண்டு ஓடிச்சென்று பேருந்தின் கதவை வேகமாகத் தட்டினான்.
அதைப் பார்த்த பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு, கதவைத் திறந்தார்.
தொடர்புடைய செய்திகள்
உடன் உள்ளே சென்ற ரவி ஓட்டுநரிடம் நடந்ததைக் கூறி அந்தக் கைப்பையை அந்த மாதிடம் ஒப்படைத்தான்.
அப்போதுதான் தன் தவற்றை உணர்ந்த அந்த மாது ரவியின் கையை இறுகப் பற்றி தன்னுடைய நன்றியைத் தெரிவித்தார்.
பேருந்து ஓட்டுநரும் அவருடைய இருக்கையில் இருந்து எழுந்துவந்து ரவியைத் தட்டிக்கொடுத்து பாராட்டினார்.
அவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த பயணிகள் அனைவரும் கைதட்டி ரவியைப் பாராட்டினார்கள்.
ரவியும் தான் செய்த நல்ல செயலை நினைத்துக்கொண்டே வீடு திரும்பினான்.
அன்று நடந்தது அவனுக்கு ஒரு மறக்கமுடியாத நிகழ்வாக ஆனது.
ரோஹித் தொடக்கநிலை 3, மெரிடியன் தொடக்கப்பள்ளி

