தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யானையின் பிளிறல் எவ்வளவு தூரம் கேட்கும்?

4 mins read
1258cfc1-ff13-4c11-8b36-a017cc802b4d
யானை. - படம்: ஊடகம்

யானை குட்டி போட்டு பாலூட்டும் வகையைச் சேர்ந்தது. இது தாவரங்களை மட்டும் உண்ணும். இது நிலத்தில் வாழும் உயிரினங்களில் மிகவும் பெரியது. மேலும் அதிக நாள்கள் (70 ஆண்டுகள்) வாழக்கூடிய உயிரினம் யானை. மனிதர்கள் தவிர்த்து மற்ற விலங்குகளில் இதுவே அதிக நாள்கள் வாழும் நிலவாழ் விலங்கு ஆகும். யானைகள் மிகவும் வலிமையானவை. சிங்கம் (அரிமா), புலி முதலியன கூட நெருங்க முடியாத வலிமை கொண்டவை. சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வர நேரிடும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லும். ஆனால், இவ்வகை நிகழ்வுகள் மிகமிகக் குறைவே. யானைகள் எப்போதும் கூட்டமாக, குடும்பமாக வாழும். அதனால் இதை எந்த மிருகமும் நெருங்க பயப்படும். இவை அதிக ஞாபக சக்தி கொண்டவை.

யானைகளை நாம் சாலைகளில், கோயில்களில், திரைப்படங்களில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்த்திருப்போம். யானை பிளிறுவதையும் கேட்டிருப்போம்.

ஏன் யானைகள் பிளிறுகின்றன?

யானைகள் தங்களுக்குள் பிளிறல் மூலம் பேசிக்கொள்கின்றன. யானைகளின் பிளிறலும் தும்பிக்கை அசைவும் காது அசைவும் அவர்களுக்குள் பல செய்திகளைப் பகிர்ந்துகொள்பவையாக இருக்கும்.

யானை பிளிறும் சத்தம் கேட்டால் நமக்கு அச்சமாக இருக்கும் அல்லவா? ஆனால், ‘வ்ஹாஹாஹான்ன்ன்ன்’ என்கிற பிளிறலுக்கு ‘ஹலோ’ என்று அர்த்தம்.

காட்டுக்குள் பல யானைக் கூட்டங்கள் வசிக்கின்றன. அவை தங்களுக்குள் பேசிக்கொள்ளும் மொழியே நமக்குப் பிளிறலாகக் கேட்கிறது.

தாக்குதலில் இருந்து தப்பிக்கும் யானைகள்

சிங்கம் நேருக்கு நேர் தாக்க வந்தால் யானை வென்றுவிடும். அதனால் சிங்கம் யானையின் பின்னால் இருந்துதான் தாக்கும். அவ்வளவு வலிமையானது யானை.

பெண் யானைதான் தலைமை வகிக்கும்

யானைகள் பெரும்பாலும் கூட்டம் கூட்டமாகவே வசிக்கும். அந்தக் கூட்டங்களுக்குப் பெண் யானைகளே தலைமை வகிக்கும். பொதுவாக அம்மா யானையோ அல்லது மூத்த பெண் யானையோ கூட்டத்தின் தலைவியாக இருக்கும். ஆண் யானைகள் தனியாக வாழும். சில சமயங்களில் மட்டுமே கூட்டத்துடன் வந்து சேரும்.

குட்டி யானைகள் குறும்பானவை. அவற்றைக் கட்டுப்படுத்த, சில நேரம் பெரிய யானைகள் பிளிறும். பல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மற்ற யானைகளுடன் அவை எப்படித் தொடர்பு கொள்கின்றன என்று தெரியுமா? நாம் பக்கத்தில் இருப்பவர்களிடம் மெதுவாகவும் தொலைவில் உள்ளவர்களிடம் உரக்கவும் பேசுவோம். இந்த விஷயத்தில் யானைகள் நமக்கு நேர் எதிர்.

மனிதர்களால் இருபது Hzக்குக் (அதிர்வு எண்) குறைவான அதிர்வில் இருக்கும் ஒலியைக் கேட்க முடியாது. யானைகள் அப்படி அல்ல. தொலைவில் உள்ள யானைகளுடன் பேசக் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளை எழுப்புகின்றன. இந்த அதிர்வுகள் 14-35 Hz என்கிற அளவில் இருக்கும். இதற்கு ‘இன்ஃப்ராசோனிக் அதிர்வுகள்’ என்று பெயர்.

இந்த ‘இன்ஃப்ராசோனிக்’ அதிர்வுகள் நீண்ட அலை நீளம் கொண்டவை. இதனால் அவை, அடர்ந்த காடுகளில் எந்தத் தடையும் இல்லாமல் பயணம் செய்ய முடியும். மலைகளைச் சுற்றி வளைந்து செல்ல முடியும். சுற்றுப்புறச்சூழல் சாதகமாக இருந்தால், பத்து கி.மீ. வரை இந்த அலைகள் செல்லும்.

காற்று வழியாகச் செல்வதுபோல், நிலத்தின் வழியாகவும் பல கிலோமீட்டர் தூரம் இந்த அலைகள் பயணம் செய்யும். நிலத்தின் வழியே செல்லும் இந்த அதிர்வுகள் யானைகளின் கால்கள் வழியாக உடலுக்குள் சென்று, தோள்பட்டைகள் வழியாக நரம்பு மண்டலத்தை அடைந்து, மூளைக்குச் செல்கின்றன.

தும்பிக்கையை நிலத்தில் வைத்தும் அதிர்வுகளை உள்வாங்குகின்றன. மூளை அந்த அதிர்வுகளைச் செய்தியாக உணர்கிறது.

அதுமட்டுமன்றி எந்த யானை, எந்த மனநிலையில் இதை அனுப்பியுள்ளது என்று மற்ற யானைகளுக்குத் தெளிவாகத் தெரியும். இந்த அதிர்வுகள் மூலம் வழி தவறிப்போன குட்டி யானைகளை அழைக்கும். ஆபத்து வரும்போதும் மற்ற யானைக் கூட்டங்களுக்கு எச்சரிக்கையும் செய்கின்றன. தேவைப்படும்போது உதவியும் கேட்கின்றன.

ஒலி, அதிர்வு மட்டுமல்ல, தொடுதலும் ஒருவிதமான தகவல் பரிமாற்றம்தான். அதில் யானைகளின் தும்பிக்கை ஒரு முக்கியமான தகவல் பரிமாற்றக் கருவி!

அம்மா யானை, குட்டி யானையின் மேல் தும்பிக்கையை வைத்து, அன்பைப் பரிமாறும். விளையாடவும் அதே தும்பிக்கைதான். நீண்ட வரிசையில் வால்களைப் பிடித்தபடி செல்லும் யானைகளைப் பார்த்து இருப்பீர்கள் அல்லவா? அதற்கு அர்த்தம், ‘நாங்க எல்லாம் நெருங்கிய உறவினர்கள், பாதுகாப்பாக இருக்கிறோம்’ என்பதே.

காதுகள் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தும்

காதுகள் கேட்பதற்கு மட்டுமல்ல. காது மடல்களின் அமைப்பின் மூலம் தன் உணர்வுகளையும் யானை வெளிப்படுத்துகிறது. விரிந்த காதுகள் என்றால் ஆபத்து அல்லது எச்சரிக்கை என்று அர்த்தம். தளர்வான காதுகள் என்றால் அமைதியான மனநிலையில் இருக்கிறது. காதுகளை அடிக்கடி அசைத்தால், யானை பரபரப்பு அல்லது மன அழுத்தத்தில் இருக்கிறது. கவனமாக இருக்கிறேன் என்பதற்கு அடையாளமாக அதன் காதுகள் முன்னோக்கி நீட்டி இருக்கும்.

இப்படி ஒலிகள் மூலம் மட்டுமல்லாமல் வெவ்வேறு வழிகளிலும் யானைகள் பேசுகின்றன. இது குறித்து அமெரிக்க விஞ்ஞானி ஆண்ட்ரியா துர்காலோ ஆராய்ந்து வருகிறார். ‘எலிபண்ட் டிக்‌ஷ்னரி’ தயாராகி வருகிறது.

“இந்த அகராதி வெளியே வரும்போது, யானைகள் பற்றி மேலும் பல உண்மைகளைத் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் மனித-யானை மோதல்களைத் தவிர்க்க முடியும். யானைகளின் வாழ்விடங்களைப் பாதுகாக்க முடியும். இந்த அறிவுள்ள உயிரினங்களைப் புரிந்துகொள்ளவும் முடியும்,” என்கிறார் விஞ்ஞானி ஆண்ட்ரியா துர்காலோ.

குறிப்புச் சொற்கள்