ஒரு பெரிய தோட்டம். அதன் இருண்ட, அமைதியான ஒரு மூலையில் ஒரு சிறிய விதை இருந்தது. அது பார்ப்பதற்கு ஒரு சின்னஞ்சிறு கல்லை விடவும் மிகச் சிறியதாக இருந்தது. அதனால், ‘நான் எதற்கும் பயன்படாத ஒரு சிறிய பொருள்’ என்றே விதை நினைத்துக் கொண்டது.
அதனைச் சுற்றிலும் வானுயர்ந்த பிரம்மாண்டமான ஓக் மரங்களும் மற்ற மரங்களும் கம்பீரமாக நின்றிருந்தன.
ஒரு நாள், “நானும் இந்த உலகத்தைப் பார்க்க ஆசைப்படுகிறேன். நானும் இவர்களைப் போல வளர வேண்டும்,” என்று விதை தனக்குத்தானே மெதுவாகச் சொல்லிக் கொண்டது.
அதைக் கேட்டதும், பக்கத்தில் இருந்த ஒரு வயதான பாறைக்குக் கோபம் வந்தது. அது கோபத்துடன், “முட்டாள்தனம்! நீ மண்ணுக்குள் இருக்கும் ஒரு சிறு துகள்தான். பேசாமல் இங்கேயே இரு, அதுதான் உனக்குப் பாதுகாப்பு. மண்ணைத் தள்ளி மேலே வருவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அப்படியே வந்தாலும் மேலே அடிக்கும் பலமான காற்றை உன்னால் தாங்க முடியாது!” என்று பயமுறுத்தியது.
பாறை சொன்னதைக் கேட்டு விதை பயந்தது. சில நாள்கள் குளிர்ந்த மண்ணுக்குள்ளேயே சுருண்டு படுத்திருந்தது. ஆனால், தினமும் காலையில் மண்ணை ஊடுருவி வரும் சூரியனின் வெப்பம், அதைத் தட்டி எழுப்புவதுபோல இருந்தது. அந்த வெப்பம் விதைக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்தது. “இல்லை! நான் சும்மா இருக்கப்போவதில்லை; நான் வளர வேண்டும்!” என்று உறுதி கொண்டது.
விதை மெல்ல மெல்லத் தன்னை விரித்து மண்ணை முட்டித் தள்ளியது. அது அவ்வளவு எளிதாக இல்லை. கனமான மண் கட்டிகள், வழியில் இருந்த கூர்மையான கற்கள் எல்லாம் தடையாக இருந்தன. அதன் சிறிய வேர்கள் வலித்தன.
“அந்தப் பாறை சொன்னது சரிதானோ? என்னால் முடியாதுபோல இருக்கிறதே!” என்று விதை சோர்ந்துபோய் பெருமூச்சு விட்டது.
அது நினைத்த மறுகணம் ‘சளக்... சளக்...’ என்று குளிர்ந்த மழைத்துளிகள் மண்ணுக்குள் இறங்கி, விதையின் மீது பட்டன. அது இயற்கை அன்னை கொடுத்த கைதட்டல் போல இருந்தது! அந்த உற்சாகத்தில், விதை தனது முழு பலத்தையும் திரட்டி, மேல் நோக்கி தன் மேல் இருந்த மண்ணை ஒரே தள்ளாகத் தள்ளியது.
தொடர்புடைய செய்திகள்
‘பளிச்!’
விதையின் சிறிய பச்சைத் தலை மண்ணைத் துளைத்து வெளியே எட்டிப் பார்த்தது. ஆஹா! மேலே பரந்த நீல வானம். இலைகளில் பட்டு மின்னும் பொன்னிறச் சூரியன்! விதை இன்னும் பெரிய ஓக் மரமாகவில்லைதான்; ஆனால், இப்போது அது இருளில் மறைந்திருக்கும் விதை அல்ல—அது ஒரு ‘முளைச்செடி!’
வாரங்கள் கடந்தன. விதை மெல்ல மெல்ல உயரமாக வளர்ந்தது. முன்பு எதைக் கண்டு பயந்ததோ, அந்தப் பலமான காற்றுதான் தன் தண்டை உறுதியாக்கியது என்பதையும் கடினமான மண்தான் தன் வேர்களைப் பலமாகப் பற்றியிருக்கிறது என்பதையும் விதை புரிந்துகொண்டது.
அது மகிழ்ச்சியுடன் தன் இலைகளை அசைத்து இயற்கைக்கு நன்றி சொன்னது. எவ்வளவு தடைகள் வந்தாலும், ‘முயற்சி திருவினையாக்கும்,’ என்பதற்கு விதையின் வாழ்க்கையே ஒரு சிறந்த உதாரணம்.
நீதி: தடைகளைக் கண்டு சோர்ந்து போகாதே; அவைதான் உன்னை வலிமையாக்கும். உருவம் எவ்வளவு சிறியது என்பது முக்கியமல்ல; நம்பிக்கை எவ்வளவு பெரியது என்பதே முக்கியம். மற்றவர்கள் உங்களால் முடியாது என்று சொன்னாலும், உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். யார் என்ன சொன்னாலும், ‘என்னால் முடியும்’ என்று நம்பி முயற்சி செய்தால், நீங்களும் அந்த விதையைப் போலப் பெரிதாக வளரலாம்!

