கபிலன் தொடக்கநிலை இரண்டில் பயிலும் மாணவன். அவன் தன் அம்மா மலருடன் அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ்த்தளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தான்.
திடீரென்று விசித்திரமாக சீறும் சத்தம் கேட்டது. கபிலன் உடனே நின்று கவனமாகக் கேட்டான். அந்தச் சத்தம் ஒரு தூணின் பின்னால் இருந்த கல் மேசைக்கு அடியில் இருந்து வந்தது. அருகில் சென்று பார்த்தபோது ஒரு சிறிய பூனை பதுங்கியிருந்ததைக் கண்டான் கபிலன்.
அந்தப் பூனை யாரைப் பார்த்தாலும் பயத்தில், சீறியது. அந்தப் பக்கம் மின்தூக்கியில் ஏற வருபவர்களைக் கூட அது பயமுறுத்தியது. சிலர், “சீ.. போ..!” என்று சத்தமிட்டு விரட்டினார்கள். சிலர் கால்களைத் தட்டி ஓசையெழுப்பி மிரட்டினார்கள். இதனால் அந்தப் பூனை இன்னும் பயந்துபோய், அனைவரையும் விரோதியாகப் பார்த்து சீறிக் கொண்டே இருந்தது.
அந்தப் பூனையின் கண்களை உற்றுப் பார்த்தான். அது பசியாலும், தாகத்தாலும் சோர்ந்து போயிருப்பதை அவன் உணர்ந்தான். ‘இதை விரட்டினால் அது இன்னும் பயப்படும், அன்பு காட்டினால் தான் வழிக்கு வரும்,’ என்று நினைத்தான்.
முதலில் அதன் பசியைப் போக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்த கபிலன் ஓடிச் சென்று அம்மாவிடம் சிறிது பாலைக் கேட்டு வாங்கிக்கொண்டு கீழ்த்தளத்திற்குச் சென்றான். பூனை பதுங்கி இருந்த கல் மேசைக்கு மேலே அந்தப் பாலை வைத்துவிட்டு சிறிது தூரத்தில் போய் நின்றுகொண்டான்.
“பயப்படாதே! நான் உன்னைத் தொட மாட்டேன். நான் உன்னுடைய நண்பன்,” என்று கபிலன் மிகவும் மென்மையான குரலில் சொன்னான். அவன் அந்த இடத்திலேயே மெதுவாகத் தரையில் அமர்ந்தான்.
முதலில் தயங்கிய பூனை, கபிலனின் அமைதியையும் அன்பையும் பார்த்து மெதுவாக வந்து சாப்பிட்டது. பசி தீர்ந்ததும், அந்தப் பூனை கபிலனை நோக்கி வந்தது. அது தன் தலையை கபிலனின் காலில் மென்மையாக உரசி, ‘மியாவ்’ என்று செல்லமாகச் சத்தம் போட்டது. மணியின் பயம் முற்றிலும் மறைந்துவிட்டது.
இதைப் பார்த்த வழிப்போக்கர்கள் ஆச்சரியப்பட்டார்கள். “நாங்கள் இவ்வளவு நேரம் சத்தம்போட்டும் அடங்காத பூனை, சிறுவனின் அன்பிற்கு மட்டும் எப்படி அடங்கியது?” என்று பேசிக்கொண்டார்கள்.
தொடர்புடைய செய்திகள்
கபிலன் அந்தப் பூனைக்கு மணி என்று பெயர் வைத்து அதனைத் தன் வீட்டிற்குத்தூக்கிச் சென்றான். அன்பினால் எந்தப் பயத்தையும் போக்க முடியும் என்பதை கபிலன் புரிந்து கொண்டான். அன்றிலிருந்து கபிலனும் மணியும் சிறந்த நண்பர்களானார்கள். பிறருக்குத் தொல்லை கொடுப்பதாக நினைப்பவர்கள், உண்மையில் ஏதேனும் ஒரு கஷ்டத்திலோ பயத்திலோ இருக்கலாம். மிரட்டிப் பணிய வைப்பதை விட, அன்பால் அரவணைத்தால் ஆகாத காரியமும் ஆகும்.

