ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

2 mins read
e596b87f-f26b-4146-adc2-668ab2347f63
கூண்டிற்குள் மாட்டிக்கொண்ட சிட்டுக்குருவிகள். - படம்: செயற்கை நுண்ணறிவு

எப்பொழுதும் சேர்ந்தே காட்டில் திரியும் இரண்டு சிட்டுக்குருவிகள் மிகவும் நட்புடன் பழகி வந்தன. அவற்றின் ஒற்றுமையைப் பார்த்து மற்ற பறவைகள் பொறாமை அடைந்தன. ஆனால், அதை எதையும் கண்டுகொள்ளாத இரண்டும் ஆனந்தமாக தானியங்களை உண்டு பின்னர் மரத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டு, காட்டைச் சுற்றி வலம் வந்தன. அந்த அழகிய பறவைகளைப் பிடிப்பதற்காக வேடன் ஒருவன் தரையில் வலையை விரித்து தானியங்களை வலையின் மீது தூவி இருந்தான்.  

-

வேடன் விரித்த வலை என்று அறியாத இரண்டு சிட்டுக்குருவிகளும் தானியங்களை உண்ண கீழே வந்தன. அவற்றின் கால்கள் வலையில் சிக்கிக்கொண்டன. அப்போதுதான் தாங்கள் வலையில் மாட்டிக்கொண்டதை உணர்ந்தன. ஆராய்ந்து பார்க்காமல் வேடன் விரித்த வலையில் மாட்டிக்கொண்டதை நினைத்து வருந்தின. தூரத்தில் வேடன் வருவதைப் பார்த்ததும் இந்த ஆபத்திலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்று இரண்டும் யோசிக்கத் தொடங்கின.  

-

 தூரத்திலிருந்து பறவைகள் சிக்கிக்கொண்டதைக் கண்ட வேடன் அவற்றைப் பிடிக்க ஓடி வந்தான். ஆனால், ஒற்றுமையாக இருந்த பறவைகள் இரண்டும் ஆபத்தை உணர்ந்தன. உடனே வலையுடன் மேலே பறக்க முடிவு செய்தன. உடன் சிறிதும் தாமதிக்காமல் வலையோடு மேலே பறக்கத் தொடங்கின. அவற்றின் தந்திரத்தையும் ஒற்றுமையையும் பார்த்து வியந்து போய் நின்றான் வேடன். இருந்தாலும் சிறிது நேரம் காத்திருப்போம் என்று மரத்தின் அடியில் பொறுமையாகக் காத்திருந்தான் வேடன். 

-

சிட்டுக்குருவிகள் வலையுடன் ஒற்றுமையாகப் பறப்பதைப் பார்த்த வேடன் அவற்றின் ஒற்றுமை எப்போது விவாதமாக மாறுமோ அப்போது அவை என் கையில் சிக்கும் என்று காத்திருந்தான். அவன் நினைத்ததுபோலவே ஒவ்வொன்றும் வெவ்வேறு திசையை நோக்கிப் பறக்க முயன்றதால் அவை ஆபத்தை உணராமல் சண்டை போட்டுக்கொண்டு வலையுடன் ஒரு மரக்கிளை மீது விழுந்தன.  

-

இதுதான் சமயம் என்று மரத்தின் அடியில் காத்திருந்த வேடன் தாவி வந்து பறவைகளைப் பிடித்தான். ஒற்றுமையை இழந்ததால் பறவைகள் வேடனின் கையில் மாட்டிக்கொண்டன. வேடன் அவை எப்படியும் தன்னிடம் மாட்டிக்கொள்ளும் என்று விடாமுயற்சியுடன் காத்திருந்ததால் அவனுக்கு வெற்றி கிடைத்தது. இத்தனை நாள்களாக ஒன்றாகப் பழகியும் கோபத்தினால் தங்களுக்கு ஏற்பட்ட ஆபத்தை உணராமல் இப்படி வேடனின் வலையில் சிக்கிக் கொண்டோமே என்று குருவிகள் வருந்தின.  

-

இரண்டு குருவிகளையும் வேடன் தான் கொண்டு வந்திருந்த கூண்டிற்குள் அடைத்து மகிழ்ச்சியுடன் வீட்டை நோக்கி நடந்தான். அவனுடைய விடாமுயற்சி அவனுக்கு வெற்றியைக் கொடுத்தது. ஆனால், பறவைகளின் ஒற்றுமையின்மை அவற்றிற்கு அழிவை வழிவகுத்தது. வேடனைப் போல விடாமுயற்சி செய்தால் விரும்பியதைப் பெறலாம். அதுபோல ஒற்றுமையை இழந்தால் குருவிகள் போல வருந்த நேரிடும். ஒற்றுமையே பலம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை எப்போதும் மனதில் கொள்ளவேண்டும்.  

குறிப்புச் சொற்கள்