சிறாரின் கற்பனைத் திறனை ஊக்குவிக்கவும் அவர்களிடையே புத்தாக்கத்தை வளர்க்கவும் பலதரப்பட்ட நடவடிக்கைகள், படைப்புகள், பயிலரங்குகள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஜூன் பள்ளி விடுமுறையை முன்னிட்டு, சிங்கப்பூர் சிறுவர் அரும்பொருளகம் ஏற்பாடு செய்துள்ள ‘சிறுவர்களின் பருவகாலம்’ (Children’s Season) விழா மே 31ஆம் தேதியிலிருந்து ஜூன் 25ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.
உரிமைப்பாடு என்ற கருப்பொருளோடு, சிறுவர்கள் தங்கள் வீடு, சமூகம், நாடு ஆகியவற்றில் தங்கள் அடையாளத்தை விளையாட்டின் மூலம் ஆராய்ந்து, கண்டறிய இந்த விழாவின் நிகழ்ச்சிகள் ஊக்குவிக்கின்றன.
10 முதல் 11 வயது வரையிலான 18 சிறுவர்களை உள்ளடக்கிய சிறார் கலந்தாய்வுக் குழுவின் முன்னோக்குகளை அடிப்படையாக வைத்து முக்கிய நிகழ்ச்சிகள் நிர்வகிக்கப்பட்டன.
லியன்ஹுவா தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த அச்சிறுவர்களின் கருத்துகளுக்கேற்ப விழா வடிவமைக்கப்பட்டுள்ளதால், நிகழ்ச்சிகள் சிறுவர்களை ஈர்க்கும் வகையிலும் ஆர்வமூட்டும் வகையிலும் அமைந்துள்ளன.
அரண்மனைக்காரத் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மூன்று சிற்ப நிறுவல்களின் உணவங்காடி பாத்திரங்களைக் கொண்டு, கொடுக்கப்பட்டுள்ள கையேடுகளிலிருக்கும் புதிர்களைத் தீர்க்கும் நடவடிக்கை சிறுவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று.
‘சார் குவே தியாவ் ராப்சடி’ (Char Kway Teow Rhapsody) என்ற நிகழ்ச்சியில் சிறுவர்கள் சிங்கப்பூரின் தனித்துவமான உணவின் சமையல் மூலப்பொருள்களாக உடையணிந்து ஒரு நாடகத்தைப் படைப்பர்.
அத்துடன், வேறு பல நடவடிக்கைகள், படைப்புகள், பயிலரங்குகளுக்கும் அரும்பொருளக வட்டமேசையோடு இணைந்து சிங்கப்பூர் சிறுவர் அரும்பொருளகம் ஏற்பாடு செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதேபோல, தி ஆர்ட்ஸ் ஹவுஸ், சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம் ஆகிய அமைப்புகளும் ஜூன் பள்ளி விடுமுறையை முன்னிட்டு, பிள்ளைகளை ஈர்க்க ‘children’s season’ என்னும் ‘சிறுவர்களின் பருவகால’ விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
மூன்று வயதிற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்காக, ‘ஆர்வம் பெருகட்டும்: சிங்கப்பூரை கட்டி எழுப்ப!’ என்ற தலைப்பில் இருவழித் தொடர்பை ஊக்குவிக்கும் பல நடவடிக்கைகளும் நிறுவல்களும் சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இதுபோல், பல்வேறு கலைகளில் கற்பனைகளைத் தூண்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட சிலிர்ப்பூட்டும் நிகழ்ச்சிகள், நேரடிப் பட்டறைகள், ஊடாடும் கண்காட்சிகளைச் சிறுவர்களுக்காக ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’ படைக்கவுள்ளது.