இந்திய மரபுடைமை நிலையத்தில் விடுமுறைக்கால நடவடிக்கைகள்

2 mins read
b75b4065-948c-4a2e-861d-4cf73858fb44
நிழல் பொம்மலாட்டம் உருவங்கள். - படம்: இந்திய மரபுடைமை நிலையம்

இந்திய பாரம்பரியக் கூறுகளை அறிந்துகொள்ளும் விதமாக இந்திய மரபுடைமை நிலையத்தில் பல்வேறு நிகழ்வுகள் நவம்பர் 29 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

விடுமுறை நாள்களில் சிறப்பான அனுபவங்களை அளிக்கும் விதத்தில் இந்திய மரபுடைமை நிலையம் சார்பில் ‘கதைசொல்லல்’ எனும் கருப்பொருளில் மாணவர்களுக்கான நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

திங்கட்கிழமை தவிர மற்ற நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வுகளுக்கு சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தர வாசிகளுக்கும் அனுமதி இலவசம்.

பொம்மலாட்டம்:

இந்திய கதைசொல்லலில் பழமையான கலையான நிழல் பொம்மலாட்டம் குறித்து அறியவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிக்கலான வடிவங்கள் கொண்ட கைவினை பொம்மைகளின் வரலாற்றை அறிவதுடன், மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வண்ணம், பொம்மை ஒன்றைத் தங்கள் கையால் செய்யும் வாய்ப்பும் வழங்கப்படும்.

‘லைட்-பாக்ஸ்’ எனும் ஒளிப்பெட்டியின் உதவியுடன் பொம்மை மூலம் மாணவர்கள் தங்கள் கதைக்கு உயிரூட்டலாம்.

கைவினை விரல் பொம்மைகள்

தமிழ்நாட்டின் பாரம்பரிய நாடக வடிவமான தெருக்கூத்தின் செழுமையான வரலாற்றுக் கலாசார முக்கியத்துவத்தை அறியும் நோக்கில் ‘கைப்பாவை’ எனும் பொம்மை உருவாக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இசை, நடனம் மற்றும் நாடகத் திறமை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் கலகலப்பான நிகழ்ச்சியான தெருக்கூத்தின் கதாபாத்திரங்கள் குறித்து தெரிந்துகொள்ளவும் கலந்துரையாடவும் இது சிறப்பான வாய்ப்பாக அமையும்.

தெய்யம் - கைவினை முகமூடிகள்

இந்தியாவின் கேரள மாநிலத்தின் பாரம்பரியக் கலை வடிவமான ‘தெய்யம்’ எனும் நடன வடிவத்தில் அந்தக் கலைஞர்களின் ஒப்பனைப் போன்ற முகமூடிகளைக் கையால் செய்யும் நிகழ்வும் இடம்பெற உள்ளது.

கலை வடிவங்களின் தேவை, முக்கியத்துவம் குறித்து அறிந்துகொள்ளும் கலந்துரையாடலுடன் நடைபெறும் இந்நிகழ்ச்சி, சிறுவர்களுக்கு கதையுடன் கூடிய கைவினையையும் கற்றுக்கொள்ளும் சிறந்த வாய்ப்பாக அமையும்.

குறுக்கெழுத்து

இந்திய பாரம்பரியத்தில் சிந்திக்க வைக்கும் வேடிக்கை விளையாட்டுகளுக்குப் பஞ்சமில்லை.

குறுக்கெழுத்து உள்ளிட்ட பல்வேறு மரபுசார் புதிர்கள், விளையாட்டுகளுடன் பாரம்பரிய பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கண்காட்சியும் இந்திய மரபுடைமை நிலையத்தில் உங்களுக்காக காத்திருக்கிறது சிறுவர்களே!

விடுமுறையை மகிழ்ச்சியாகவும் பயனுள்ள விதத்திலும் கழிக்க இந்திய மரபுடைமை நிலையத்திற்குச் சென்று வாருங்கள். உங்கள் அனுபவத்தை எங்களுக்கு 50 முதல் 70 சொற்களுக்கு மிகாமல் எழுதி tmstudent@sph.com.sg என்ற இணைய முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்.

குறிப்புச் சொற்கள்