உலகத் துருவக் கரடிகள் (Polar Bears) தினம்

உலகத் துருவக் கரடிகள் (Polar Bears) தினம்

2 mins read
5c2a9438-f021-4495-a132-20a70bc45963
 உலகம் வெப்பமடைவதால் ஆர்க்டிக் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. அதனால் இவை உணவு தேடிப் பல கிலோ மீட்டர் தூரம் கடலில் நீந்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. - படம்: கெட்டி இமேஜ்

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 27ஆம் தேதி ‘உலகத் துருவக் கரடிகள் தினம்’ கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் வெறும் கொண்டாட்டமாக மட்டுமில்லாமல், ஆர்க்டிக் பனிப்பகுதிகளில் வாழும் துருவக் கரடிகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான ஓர் விழிப்புணர்வு நாளாகவும் அமைகிறது.

பனி உலகத்தின் ராஜாவைப் பற்றித் தெரியுமா?

துருவக் கரடிகள் உலகின் மிகப்பெரிய கரடி இனமாகும். நன்கு வளர்ந்த ஓர் ஆண் கரடியின் எடை சுமார் 800 கிலோ வரை இருக்கும். இவை நிலத்தில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் திறன் கொண்டவை.

அதிசய உடல் அமைப்பு:

பனிப்பாதங்கள்: இவற்றின் பாதங்கள் பெரிய தட்டுகளைப் போல விரிந்து இருப்பதால், பனிப்பரப்பில் சறுக்காமல் மிக எளிதாக நடக்க முடிகிறது.

இயற்கை போர்வை: தோலுக்கு அடியில் சுமார் நான்கு அங்குல தடிமனான கொழுப்பு அடுக்கு இருப்பதால், ஆர்க்டிக் பகுதியின் கடும் குளிரிலிருந்து இவை தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன.

அபாரமான மோப்ப சக்தி: 1.6 கி.மீ தூரத்தில் உள்ள இரையையும், பனிக்கு அடியில் உள்ள சீல் விலங்குகளையும் மிக எளிதாக மோப்பம் பிடிக்கும் திறன் பெற்றவை.

சிறந்த நீச்சல் வீரர்கள்: முன்னங்கால்களைத் துடுப்புகளாகப் பயன்படுத்திப் பல நூறு கிலோமீட்டர் வரை இடைவிடாமல் கடலில் நீந்தும் ஆற்றல் கொண்டவை.

பனிக்கால உறக்கம் கிடையாது: கர்ப்பிணிப் பெண் கரடிகளைத் தவிர, மற்ற துருவக் கரடிகள் குளிர்காலத்தில் நீண்ட உறக்கம் கொள்ளாமல் உணவு தேடி அலையும்.

தொடர்புடைய செய்திகள்

சிறிய குட்டிகள்: அரை கிலோ எடையுடன் மிகச் சிறியதாகப் பிறக்கும் குட்டிகள், இரண்டரை ஆண்டுகள் வரை தாயுடன் இருந்து வேட்டையாடக் கற்றுக் கொள்ளும்.

சுத்தத்தை விரும்புபவை: குளிரைத் தாங்கும் தன்மையை ரோமங்கள் இழக்காமல் இருக்க, உணவு உண்ட பின் பனியில் உருண்டு தங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ளும்.

வாழ்விடமும் சவால்களும்:

அவை பெரும்பாலும் பனிப்பாறைகளில் வசித்து வருகின்றன. கடலில் உள்ள மீன்களையும் கடல் நாய்களையும் வேட்டையாடி உண்கின்றன.

ஆனால், தற்போது புவி வெப்பமடைவதால் ஆர்க்டிக் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. அதனால் உணவு தேடுவதற்கு வழியில்லாமல், துருவக் கரடிகள் பல மைல் தூரம் கடலில் நீந்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

நாம் செய்ய வேண்டியது என்ன?

துருவக் கரடிகள் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பனிப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றன. தற்போது அவற்றின் இருப்பிடம் மறைந்து வருவது கவலைக்குரியது.

நாம் கரியமில வாயு (Carbon dioxide) வெளியேற்றத்தைக் குறைத்து, பூமியின் வெப்பத்தைக் குறைக்க முயற்சித்தால் மட்டுமே, பனிப்பாறைகள் உருகுவதைத் தடுத்து இந்த அழகான உயிரினங்களைக் காக்க முடியும்.

குறிப்புச் சொற்கள்