கற்றலில் சிரமங்கள் இருந்தாலும் தனது அயராத உழைப்பாலும் பெற்றோர், ஆசிரியரின் உதவியோடும் நல்ல மதிப்பெண்களுடன் தொடக்கப்பள்ளி இறுதியாண்டில் தேர்ச்சி பெற்றுள்ளார் மாணவர் ஜோஹன் சிங்.
உட்குரோவ் தொடக்கப்பள்ளியில் பயின்ற மாணவர் ஜோஹன், இறுதியாண்டுத் தேர்வை நினைத்து பயத்துடன் இருந்ததாகச் சொன்னார். இருப்பினும், “மன அமைதியுடனும், பொறுமையுடனும் படிப்பவை அனைத்தும் என் மனதில் ஆழப் பதியும் வரை மீண்டும் மீண்டும் படித்தேன்,” என்றார்.
படித்தவற்றை நினைவில் வைத்துக்கொள்வது சிரமமாக இருந்தாலும் கல்வித் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி உறுதியுடன் பயிற்சி மேற்கொண்டார் ஜோஹன்.
தனக்கு அறிவியல் விருப்பப் பாடம் என்று சொன்ன இவர், எல்லாப் பாடங்களையும் விட கணிதம் கற்பதில் அதிக சிரமம் இருந்ததாகச் சொன்னார். அதற்கு சற்று அதிக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்துடன் கற்க வேண்டியிருந்ததையும் சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு பாடத்திற்கும் தேவையான அளவில் நேரம் ஒதுக்க வேண்டியிருந்ததால், படிப்பதற்கும் பயிற்சி மேற்கொள்வதற்கும் ஏற்ற வகையில் பெற்றோர் அட்டவணை அமைத்து உதவியதாகச் சொன்னார்.
“எனது உழைப்பிற்கேற்ற பலன் கிடைத்துள்ளது. இதனால் எனக்கு பெரும் மகிழ்ச்சி,” என்றார் ஜோஹன்.
தங்கள் மகனின் மனம் தளராத முயற்சியும் கடுமையான உழைப்புமே வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறது என்று பெருமையாகக் கூறினர் இவரது பெற்றோரான மைக்கேல் சுதர்சிங் - சுதர்சிங் ராஜூலா.
தன்னம்பிக்கையை வலுப்படுத்தவும், தலைமைத்துவ குழுப்பணித் திறன்களை வெளிப்படுத்தவும் ஜோஹனுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஜோஹன் தன் வகுப்பின் ‘லைன் மார்ஷலாக’ இருந்து, ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து ஆசிரியர், சக மாணவர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.
தொடர்புடைய செய்திகள்
தவிர, இணைப்பாட நடவடிக்கைகளிலும் ஆர்வம் கொண்டுள்ள இவர், பள்ளியின் ‘நாடக மன்றத்தில்’ இணைந்து நடிக்கவும் கற்று வருகிறார். ரிவர்சைட் உயர்நிலைப்பள்ளியில் இணைந்து பயில உள்ள இவர், எதிர்காலத்தில் பிரபலமான, பலராலும் பாராட்டப்படும் பெரும் நடிகராக வர வேண்டும் என விரும்புகிறார்.
தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு முடிவுகள்
இந்த ஆண்டு தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (பிஎஸ்எல்இ) எழுதிய 40,894 மாணவர்களில் 98.5 விழுக்காட்டினர் உயர்நிலைப் பள்ளிக்குத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முழுமையான பாட அடிப்படையிலான வகைப்பாட்டின்கீழ் மாணவர்கள் பெறும் அடைவுநிலையைப் பொறுத்து அவர்களது உயர்நிலைப் பாடங்களைத் தேர்வு செய்வர்.
இவ்வாண்டில் ஆறாம் வகுப்பைப் பொறுத்தமட்டில் 65 விழுக்காடு நியமனக் குழு 1 மற்றும் 2 (Posting Groups 1 and 2) மாணவர்கள் குறைந்தது ஒரு உயர் தேவையுள்ள பாடத்தினை (more demanding level) எடுத்துப் படிக்க முடியும்.