பாலர் பள்ளி மாணவர்களுக்கு உயிரோவிய வரைகதை (Animated comics) மூலம் சுவையூட்டும் முறையில் தமிழ்மொழியைக் கொண்டுசேர்க்கத் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிதான் ‘கிரியேட்டிவ் ஹேண்ட்ஸ்’ நிறுவனம் வழங்கும் கதை நேரத்தின் வரைகதைப் பயிலரங்கு.
தமிழ் இளையர் விழாவையொட்டி மூன்று நாள் பயிலரங்காக நடைபெற்ற இந்நிகழ்ச்சி, செப்டம்பர் 13ஆம் தேதி காலை 10 மணியளவில் வரைகதைப் போட்டியாக விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள தேசிய நூலக வாரியக் கட்டடத்தின் ‘த பாசிபிலிட்டி’ அரங்கில் நடைபெற்றது.
இதில் பள்ளி ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் ஐந்து குழுக்களாகப் பிரிந்து, மாணவர்களுக்கேற்ப வரைகதையை உருவாக்கி அதனை செப்டம்பர் 13ஆம் தேதியன்று படைத்தனர்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ‘த மீடியா’ அமைப்பின் நிறுவனர் முகமது அலி வருகையளித்திருந்தார். நடுவர்களாக டாக்டர் ஜி காவேரி, திருமதி நந்தினி இளங்கோவன் ஆகியோர் செயலாற்றினர்.
ஒவ்வொரு குழுவும் தங்களது கதை உருவான விதம், கதாபாத்திரத்தின் வடிவமைப்புகள், வரைகதையைக் கற்றுக்கொண்ட அனுபவம், அதில் எதிர்கொண்ட சவால்கள் ஆகியவற்றை படைப்பின்போது எடுத்துரைத்தனர்.
போக்சியும் மோபியும், பட்டம் வாங்கிய பட்டத்து யானை, நட்பு கொள், போபோவும் சோப்பியும், பாக்ஸியின் பிடிவாதம் ஆகிய தலைப்புகளில் வரைகதைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாகத் திருமதி மதிமாலா மதியழகன் எழுதிய ‘பசும்பாதை’, திருமதி ஷோபா குமரேசன் எழுதிய ‘பரிசு’ ஆகிய இரண்டு ஒலிப்புத்தகங்களும் வெளியிடப்பட்டன. எழுத்தாளர்கள் இருவரும் பார்வையாளர்களிடம் அவர்களது எழுத்து அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டனர்.
பட்டம் வாங்கிய பட்டத்து யானை என்ற தலைப்பில் வரைகதை இயக்கிய சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மாணவர் சஞ்சய் முத்துக்குமரன், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்கள் மிதுனா, சக்தி நிவாஸ், அஸ்வினி ஆகியோர் முதல் பரிசைத் தட்டிச் சென்றனர்.
தொடர்புடைய செய்திகள்
“வாழ்க்கை விழுமியங்களைச் சிறுவர்களிடையே எடுத்துச் செல்ல இது போன்ற வரைகதைகள் மிகவும் உதவியாக இருக்கும்,” என்றார் திரு முகமது அலி.
“தமிழ்மொழியைச் சிறுவர்களிடையே சுவாரசியமான முறையில் கொண்டுசேர்க்க வண்ணமயமான வரைகதைகளை உருவாக்கினோம்” என்றார் ‘கிரியேட்டிவ் ஹேண்ட்ஸ்’ நிறுவனர் ஜெகன்னாத் ராமானுஜம்.
முதல் பரிசை வென்ற சஞ்சய், “கதைப்பலகை உருவாக்குவது, கதாபாத்திரங்களை வரைவது, அதனைத் திரையில் வரைகதையாகக் கொண்டுவருவது எனப் பல அம்சங்களை இந்தப் பயிலரங்கின் மூலம் கற்றுக்கொண்டேன். எங்களது கற்பனைத் திறனை வெளிக்கொணர ஒரு வாய்ப்பாகத் திகழ்ந்தது” என்றார்.