சிங்கத்தை எப்படி காட்டுக்கு ராஜா என்று சொல்கிறோமோ, அதுபோல கழுகுதான் பறவைகளின் ராஜா.

வானத்தின் அரசன்: கழுகு

3 mins read
89ed33cb-d060-4404-96fa-2f0174e15f47
வானத்தின் அரசன் என்று அழைக்கப்படும் கழுகு. - படம்: இந்து தமிழ் திசை

வேகம்

இவ்வுலகில், சுமார் 70 கழுகு இனங்கள் அறியப்பட்டிருக்கின்றன. இவை மணிக்கு சுமார் 80 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும். பறக்கும்போது வேறு பறவைகளை வேட்டையாடுவதற்கும் இந்த வேகத்தைப் பயன்படுத்தும்.

பன்முக உணவு

இவற்றால் 3 கி.மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள இரையைக் கூடத் துல்லியமாக கணிக்க முடியும். பாம்புகளைத் தவிர நிலவாழ் விலங்குகளான முயல், நரியின் குட்டி, பிறந்த மான் குட்டி, அதேபோல் நீர் வாழ் உயிரினங்களான மீன்கள் போன்றவைகளை இரையாக சாப்பிடும்.

உயரே பறக்கும் கழுகுகள்

பறவை இனங்களிலேயே கழுகு மிக உயரமாகப் பறக்கும் பறவையாகும். உயரமாகப் பறக்கும் சில கழுகு வகைகள் - சாலிட்ரி ஈகிள், கோல்டன் ஈகிள், ஹார்பி ஈகிள், வெட்ஜ்-டெயிலட் ஈகிள்.

வேட்டையாடும் திறன்

தன்னைவிட மூன்று மடங்கு அதிக எடை உள்ள இரையைக் கூடப் பிடித்து உண்ணும் சக்தி வாய்ந்தது.

நீண்ட ஆயுள்

சுமார் 70 ஆண்டுகள் வரை வாழும். அவற்றின் உறுதியான எலும்பு அமைப்பு, திறமையான உள் உறுப்புகள், வலுவான நோய் எதிர்ப்பு அமைப்பு ஆகியவை நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக வாழ உதவுகின்றன.

எடை

கழுகின் எடையானது, கழுகினங்களைப் பொறுத்து ஒன்று முதல் ஒன்பது கிலோ வரை இருக்கும். கோல்டன் ஈகிள், பிணம் தின்னி கழுகு, பழுப்பு நிறக் கழுகு, பாம்புக் கழுகு என்பவை 6.7kg வரை இருக்கும்.

நகங்களும், வளைந்த அலகும்

கூரிய நகங்களும் வளைந்த ஊசியான அலகும் இதற்கு இரைகளைப் பிடித்து கிழித்து இறைச்சியை உண்ண பயன்படுகின்றன. வேட்டையாடுவதைத் தவிர, இந்த வலிமையான நகங்களும் அலகும் கழுகுகளுக்குத் தற்காப்புக்கும் உதவுகின்றன. ஆபத்து ஏற்படும்போது, இவை தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்த ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றன.

தினசரி பயண தூரம்

ஒரு நாளைக்கு இரைத் தேடலின் அவசியம், இருப்பிடம் தேடுதல், இனப்பெருக்க காலம் ஆகியவற்றைப் பொறுத்து கிட்டத்தட்ட கழுகானது 150 முதல் 300 கிலோ மீட்டர் வரை பயணிக்கும்.

கூர்மையான பார்வை

கழுகு மிகவும் புத்திசாலியான பறவை. இதற்கு கண் பார்வைத் திறன் மனிதரை விட நான்கு மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது.

தனித்துவத் திறன்

கழுகுகள் மிகத் தீவிரமான ஒளியையும் தாங்கும் திறன் கொண்டிருப்பதால் சூரியனை நேரடியாகப் பார்க்கும்.

கழுகின் வாழ்க்கையிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய 3 முக்கியமான பாடங்கள்:

பிரச்சினைகளைக் கண்டு ஓடாதே (Face Challenges)

மழை பெய்தால் மற்ற பறவைகள் கூட்டுக்குள் ஒளிந்து கொள்ளும். ஆனால், கழுகு மேகங்களுக்கு மேலே சென்று மழையைத் தவிர்க்கும்.

பாடம்: வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும்போது, அதைக் கண்டு சோர்ந்து போய்விடக்கூடாது. அந்தப் பிரச்சினைகளுக்கு மேலே உயர்ந்து நின்று, அதைத் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.

கவனச் சிதறல் கூடாது (Laser Focus)

கழுகு வானத்தில் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், அதன் கவனம் தரையில் இருக்கும் இரையின் மீதுதான் இருக்கும். வேறு எதைப் பற்றியும் அது கவலைப்படாது.

பாடம்: நீங்களும் படிக்கும்போது அல்லது ஒரு வேலையைச் செய்யும்போது, முழுக் கவனத்தையும் அதில் மட்டுமே செலுத்த வேண்டும். இடையில் கவனம் சிதறக்கூடாது.

தனித்து நில் (Fly High)

கழுகு காகத்துடனோ, குருவியுடனோ பறக்காது. அது தனியாகப் பறக்கும் அல்லது மற்ற கழுகுகளுடன் மட்டுமே பறக்கும்.

பாடம்: உங்கள் சிந்தனை எப்போதும் உயர்வாக இருக்க வேண்டும். உங்களைச் சோர்வடையச் செய்யும் நண்பர்களுடன் சேராமல், உங்களை ஊக்கப்படுத்தும் நல்லவர்களுடன் சேர வேண்டும்.

கழுகு தனது இலக்கை அடையும் வரை முயற்சியைக் கைவிடாது. நாமும் கழுகைப் போலத் தைரியமாகவும், உயர்ந்த எண்ணங்களுடனும் இருக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்