சதுரங்கப் போட்டியாளர் ஆவது சாதாரண விளையாட்டுப்போல் இல்லை. மன அழுத்தம் நிறைந்தது என்கிறார் குகேஷ்.
உலக சதுரங்க வெற்றியாளர் போட்டி என்பது வெறும் சதுரங்க போட்டி மட்டும் அல்ல. போட்டியின்போது மன அழுத்தம், உணர்ச்சிபூர்வமான அழுத்தம் ஆகியவை அதிகம் இருந்தது. இதைக் கையாள்வதற்கு மனதை திடப்படுத்துவதற்கு பயிற்சியாளர் பாடி அப்டன் கற்றுக்கொடுத்திருந்தார். அது உதவியாக இருந்தது. அவருடன் நான் நடத்திய ஆலோசனைகள், உரையாடல்கள் ஒரு வீரராக நான் முன்னேற்றம் காண்பதற்கு முக்கியமானதாக இருந்தது,” என்றார் குகேஷ்.
சதுரங்க போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் ஒருவருடைய ஆட்டத்தைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு அவரின் பலம், பலவீனம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டு வருவார்கள். அது கிட்டத்தட்ட முழு ஆயுதம் தரித்த இரண்டு சிறந்த போர்வீரர்கள் மோதிக் கொள்வது போலத்தான். கவனம் தப்பினால் தோல்விதான்.
இதன் காரணமாக நிறைய நுட்பமான வழிகளைப் பயன்படுத்தி எதிராளியின் மனதின் சமநிலையை பாதிக்கப் பார்ப்பார்கள். சதுரங்கம் விளையாட்டில் மனதை ஒருமுகப்படுத்தி விளையாடவேண்டும்.
18 வயதில் வயதில் மனதை ஒருமுகப்படுத்தி விளையாடி, இதைச் சாதித்திருக்கும் குகேஷின் வெற்றி அளவிட முடியாத அளவு சாதனை என்று கருதப்படுகிறது.
இளம் வயதில் ஆட்ட நுணுக்கங்களை கற்றுக் கொள்வது பலருக்கும் சாத்தியம் என்றாலும் இதுபோன்ற சூழல்களைக் கையாண்டு எதிரியை மனதால் வெல்வது என்பது இந்த வயதில் இருப்பவர்களுக்கு மிகவும் கடினமானது.
ஏனென்றால் பல நேரங்களில் அது அனுபவத்தால் மட்டுமே வருவது. அந்த வகையில் குகேஷின் இந்தச் சாதனை இந்தியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த மனித இனத்துக்குமே புதிய ஒரு திறப்பை உருவாக்கக் கூடியது.
அதிலும் வெற்றிக்குப் பிறகு அவர் கொடுக்கும் நேர்முகப் பேட்டிகளில் இருக்கும் நிதானமும் போட்டியாளரின் மீது அவர் வைத்திருக்கும் மரியாதையும் இந்த வெற்றி ஏதோ சமய சந்தர்ப்பங்களால் அமைந்த ஒன்று அல்ல என்றும் அவர் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கும் அளவுக்கு மன முதிர்ச்சியோடுதான் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது என்கின்றனர் சாதனையாளர்கள்.