உலகச் சதுரங்க வெற்றியாளராக வாகை சூடி வரலாறு படைத்துள்ளார் இளம் இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் தொம்மராஜு, 18. அவருக்கு இந்தியத் தலைவர்கள், உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்தியப் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் “குகேஷ் வெற்றி, வரலாற்றுக்கு முன்மாதிரியான வெற்றியாகும். அவருக்கு என்னுடயை வாழ்த்துகள். இந்த வெற்றி குகேஷின் திறமை, கடின உழைப்பு, அயராத ஆற்றலுக்கு கிடைத்த வெற்றியாகும். குகேஷின் எதிர்கால முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள். அவரது வெற்றியானது மில்லியன்கணக்கான இளம் மனங்களை பெரிய கனவு காணத் தூண்டியிருக்கிறது,” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளப் பதிவில், “18 வயதிலேயே உலகச் சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ள குகேஷுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உன் திறமையால் தமிழகம் பெருமை கொள்கிறது. இந்தச் சாதனை நாட்டின் சதுரங்க மரபைத் தொடர்வதோடு, மேலும் பல உலகத்தரம் வாய்ந்த வெற்றியாளர்களை உருவாக்குவதனால் உலகச் சதுரங்க தலைநகராக அதன் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்த உதவுகிறது,” என்று பதிவிட்டுள்ளார்.
சாதனை நாயகன் குகேஷுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
வெற்றி பெற்றதன் மூலம் குகேஷுக்கு கிடைக்கும் வருமானம் 11.34 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
குகேஷைப் பாராட்டி தமிழக அரசு அவருக்கு ரூ.5 கோடி ரொக்கப் பரிசு வழங்கி கௌரவப்படுத்தி இருக்கிறது.

