உலகத்தைக் காக்க நெகிழியை மறுப்போம்

2 mins read
3e08f3f7-047d-4e29-b592-b7a2b84e385d
நெகிழியை உணவு என்று எண்ணி உண்ட ஆமை. - செயற்கை நுண்ணறிவு

ஆழ்கடலில், முத்து என்ற ஒரு சிறிய ஆமை தன் நண்பன் நண்டுவான கிட்டுவுடன் வாழ்ந்து வந்தது. முத்துவுக்கு ஜெல்லிமீன்களைச் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். தூரத்தில், ஜெல்லிமீன் போல வெள்ளை நிறத்தில் ஏதோ ஒன்று மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். “ஆஹா! எனக்கான உணவு!” என்று நினைத்தான். அவனது நண்பன் கிட்டு, “முத்து, நில்! அது ஜெல்லிமீன் இல்லை!” என்று தனது கொடுக்கை ஆட்டி எச்சரித்தான்.

முத்துவுக்கு கிட்டு கூறுவது காதில் விழவில்லை. முத்து வேகமாக சென்று மிதந்துகொண்டு இருப்பதைக் கடித்தான். ‘அச்சோ! இது ஜெல்லிமீன் போல மென்மையாக இல்லை. ஒரு ருசியும் இல்லை,’ வாயில் கவ்வியதை துப்பினான். ஆனால், அதன் பாதி அவனுடைய தொண்டைக் குழிக்குள் மாட்டிக்கொண்டது. அவன் அதை துப்ப முயன்றான். அது அவனுடைய வயிற்றுக்குள் சென்றுவிட்டது. அது என்னவாக இருக்கும் என்று விழித்தது.

கிட்டு வேகமாக முத்துவிடம் ஓடிவந்தது. “முத்து, அது பிளாஸ்டிக் பை. மனிதர்கள் பயன்படுத்திவிட்டு கரையில் எறியும் குப்பை, நாளடைவில் காற்று, மழை நீர் மூலமாக நம் கடலுக்குள் வந்து, நம்மைப் போன்ற உயிரினங்களைக் காயப்படுத்துகிறது. சிலர் விட்டுச் செல்லும் மீன் வலைகளில் நண்பர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்,” என்று சோகமாக விளக்கியது.  

முத்து, அப்போதுதான் கடலின் தரையில் நெகிழி (பிளாஸ்டிக்) பாட்டில்கள், உருஞ்சு குழாய்கள் (ஸ்டிரா), குப்பைகள் சிதறிக் கிடப்பதைக் கவனித்தான். அவனது அழகான கடல் வீடு குப்பையாக இருந்தது. “இந்த பிளாஸ்டிக் ஒருபோதும் மக்காது. அது சிறிய துண்டுகளாக உடைந்து, நம் நண்பர்கள் அனைவரையும் துன்புறுத்தும்,” என்று கிட்டு கூறியது. 

முத்துவுக்குக் கோபமும் வருத்தமும் வந்தது. “இது நமது வீடு! நாம் இதைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நம் நண்பர்களை ஒன்று திரட்டி, அவர்களிடம் பிளாஸ்டிக்கின் தீமைகள் பற்றிகூறி அவர்களை எச்சரிக்கவேண்டும்,” என்றான். அன்று முதல், முத்து மற்றவர்களோடு இணைந்து அந்தக் குப்பைகளை அகற்றத் தொடங்கினான். 

நாமும் முத்து, கிட்டு போன்ற கடல்வாழ் உயிரினங்களுக்கு உதவலாம். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலமும் குப்பைகளை காற்றில் பறந்து செல்லாமல் குப்பைத் தொட்டிகளில் போட்டு, கடலைத் தூய்மையாகவும் அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்காமலும் இருக்க முயலலாம் சிறுவர்களே! 

குறிப்புச் சொற்கள்