தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கம்: ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், அது எனக்கு நெருக்கமானவன் என்றாலும் விடமாட்டேன்

4 mins read
77e02bc8-93b2-453d-834a-c20b408dde30
காட்டு ராஜாவிடம் நரி பேசிக்கொண்டு இருக்கிறது. - படம்: ஊடகம்

நரி படுத்திருந்தது. அப்போது கரடி வந்தது.

கரடி: நரியே, இன்னும் உறக்கமா? தீனி பலமோ? உடனே சிங்கராஜா உன்னை அழைத்துக்கொண்டு வரச் சொன்னார்.

நரி: எதற்கு?

கரடி: நீதானே தினமும் காலையில் காட்டில் நடக்கும் விஷயங்களைச் சிங்கராஜாவுக்குச் சொல்வாய். அதனால்தான் உன்னை அழைத்து வரச்சொன்னார்.

நரிக்கு பெருமையாக இருந்தது.

நரி: (மகிழ்ச்சியாக) ஆமாம். ஆமாம். என்னைப் பார்க்கவில்லை என்றால் ராஜாவுக்குக் காட்டு நடப்பே தெரியாது. நான் சொல்லவில்லை என்றால் ராஜாவிற்கு யார் சொல்வார்கள்? இதோ வருகிறேன்.

சிங்கம்: என்ன நரி, ஏன் இன்று வரவில்லை? காட்டு நடப்பே தெரியாமல் தவிக்கிறேன். நேற்று என்ன நடந்தது?

நரி: சிங்கராஜா, மன்னிக்க வேண்டும். நேற்று எனக்குத் தலைவலி. அதனால் சரியாகத் தூங்க முடியவில்லை. காலையில்தான் உறக்கம் வந்தது. அதனால்தான் அசந்து தூங்கிவிட்டேன். மன்னித்துகொள்ளுங்கள் ராஜா.

சிங்கம்: நீ செய்தியைச் சொல்லாவிட்டால், காட்டின் விதிகள் மீறப்பட்டிருக்குமோ என்கிற கவலை எனக்கு வந்துவிடுகிறது.

நரி: கவலை வேண்டாம் மன்னா. நான் செல்லும் இடமெல்லாம் சொல்வது ஒன்றுதான். நம் மன்னர் மிகுந்த கட்டுப்பாட்டுக்குப் பெயர் பெற்றவர். மன்னர் வகுத்த சட்டத்தை மீறினால் தண்டனை உறுதி என்று சொல்லி வருகிறேன்.

சிங்கம்: ஆஹா! அருமையான கொள்கைபரப்புச் செயலாளர் நீதான். யாரங்கே? நரிக்கு நல்ல உணவைக் கொண்டு வாருங்கள்.

உடனே நரிக்கு நாவில் நீர் ஊறியது.

காட்டுப்பூனை ஒரு பெரிய தட்டு நிறைய நரிக்குப் பிடித்த உணவு வகைகளைக் கொண்டுவந்து வைத்தது. நரி ரசித்து, ருசித்துச் சாப்பிட்டது.

சிங்கம்: என்ன, பசி அடங்கிவிட்டதா?

நரி: நன்றி மன்னா. உங்களுக்குத்தான் என் மீது எவ்வளவு பிரியம்! என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். உங்களை என்னால் மறக்க முடியாது அரசே!

சிங்கம்: என்னாலும் உன்னை மறக்க முடியாது. அது சரி, நேற்று நீ எங்கும் செல்லாததால் காட்டில் நடந்த ஒரு அநியாயம் உனக்குத் தெரிய வாய்ப்பில்லை.

நரி: (பதற்றத்துடன்) அநியாயமா? நம் காட்டிலா? என்ன அது?

சிங்கம்: கழுதையே, மானை அழைத்து வா.

தாய் மானையும் அதன் குட்டியையும் அழைத்து வந்தது கழுதை.

சிங்கம்: இவர்களைத் தெரிகிறதா நரியாரே!

நரி: இந்த மானைத் தெரியும் மன்னா. ஆனால், மானுக்கு என்ன பிரச்சினை?

சிங்கம்: தாய் மான் போன வாரம்தான் குட்டி போட்டிருக்கிறது. குட்டி போடும் காலத்திலும் குட்டி போட்ட பிறகும் தாயையோ குட்டியையோ உணவுக்காகத் தாக்கக் கூடாது என்பது சட்டம். அது மீறப்பட்டிருக்கிறது.

“நரி: இருவரும் நலமுடன்தானே இருக்கிறார்கள், மன்னா?

சிங்கம்: உளவுப் பிரிவைச் சேர்ந்த கழுதை அங்கு இருந்ததால், தாக்க வந்த விலங்கை ஓங்கி உதை விட்டிருக்கிறது. அந்த விலங்கு ஓடிவிட்டது. அநேகமாகப் பக்கத்துக் காட்டுக்குச் சென்றிருக்கும் என்று நினைக்கிறேன்.

உடனே கரடி, கழுதை, மான், மான் குட்டி, காட்டுப் பூனை என அனைத்தும் சிரித்தன. சிங்கராஜாவுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

நரி: நான் ஒரு நாள் போகவில்லை என்றால், என்னவெல்லாம் நடக்கிறது? நம்பவே முடியவில்லை.

சிங்கம்: எனக்கும்தான். ஆனால், நான் புத்திசாலித்தனமாகக் கழுதையை அனுப்பி வைத்ததால், இந்த அநியாயம் என் கவனத்துக்கு வந்தது. மானும் குட்டியும் தப்பின. நம் காட்டு விதியும் காப்பாற்றப்பட்டது.

நரி: மன்னா, இப்போது அந்த விலங்கு அடுத்த காட்டிலா இருக்கிறது?

சிங்கம்: இல்லை, இல்லை... நம் காட்டில்தான் பாதுகாப்பாக உள்ளது.

நரி: அப்படி என்றால் தண்டனை கொடுக்க வேண்டுமே? எங்கே அது?

சிங்கம்: ஆமாம், நம் காட்டின் விதி என்ன சொல்கிறது?

கரடி: காட்டு விதி 6ன் படி தவறு இழைத்தவர் கழுதையால் உதைக்கப்பட வேண்டும் மன்னா!

சிங்கம்: நல்லது. மன்னர் முன் பொய் சொன்னால் தண்டனை என்ன நரியாரே?

நரி: யானை காலால் உதைபட வேண்டும். ஆனால், தவறு செய்தது யார் மன்னா?

சிங்கம்: யார் அங்கே? யானையை அழைத்து வாருங்கள். கழுதை உதைத்த பிறகு, யானை உதைக்க வேண்டும். ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், அது எனக்கு நெருக்கமானவன் என்றாலும் விடமாட்டேன்!

(சிங்கம் பாடலைப் பாடி கர்ஜித்தது)

நரி: ஐயோ, மன்னா! என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு மிகவும் பசியாக இருந்தது. பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பதுபோல உங்களின் காட்டு விதிகள் மறந்துபோனது. ஏதோ ஒரு சூழ்நிலையில் தவறு செய்துவிட்டேன் மன்னா! என்னை நீங்கள்தான் மன்னித்து உயிர் பிச்சைக் கொடுக்கவேண்டும் மன்னா!

(நரி அழுது புலம்பியது)

சிங்கம்: தவறு செய்ததைவிட, அதை ஒப்புக்கொள்ளாமல் இருந்தது அதைவிடப் பெரிய தவறு அல்லவா?

நரி: ஆமாம், மன்னா. இந்த முறை என்னை மன்னித்துவிடுங்கள்.

சிங்கம்: தவறு யார் செய்தாலும் தண்டனை உண்டு. ஆனால், இதுவரை நீ எனக்குச் செய்த உதவிகளை நினைத்து, உன்னுடைய பொறுப்பை மட்டும் பறித்துவிடுகிறேன். இனி உன் வேலையை இந்த மான் செய்யும். நீ ஓராண்டுக்கு எந்தப் பொறுப்பிலும் இல்லாமல், நல்ல உள்ளத்துடன் மற்றவர்களுக்கு தீங்கு செய்யாமல் வாழ்ந்து காட்ட வேண்டும். உன்னை எப்போதும் கண்காணிக்க ஒற்றர்களை நியமிப்பேன். நீ நல்லவனாக நடந்துகொள்ளும் விதத்தில் உனக்கு தண்டனையில் விதிவிலக்கு அளிப்பேன்.

நரி: இனி இப்படி ஒரு தவறைச் செய்ய மாட்டேன். நன்றி மன்னா!

தலைதெறிக்க ஓடியது நரி.

குறிப்புச் சொற்கள்