கடலுக்கு அடியில் ஒரு குட்டி அதிசயம்

கடலுக்கு அடியில் ஒரு குட்டி அதிசயம்

1 of 3
படம்: சிங்கப்பூர்க் கடல்வாழினக் காட்சியகம்
படம்: சிங்கப்பூர்க் கடல்வாழினக் காட்சியகம்
படம்: காமாட்சி சந்திரசேகர்

16 Mar 2026 - 5:00 am

2 mins read

கடலுக்கு அடியில் வாழும் ஒரு விசித்திரமான உயிரினம்தான் கடற்குதிரை.

குதிரை போன்ற முகம், நீண்ட வால் எனப் பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும் இந்தச் சின்னஞ்சிறிய உயிரினங்களும் ஒருவகை மீன்கள்தான்.

சிங்கப்பூர் கடற்பகுதிகளில் மட்டும் கிட்டத்தட்ட 16 வகையான கடற்குதிரைகள் வாழ்கின்றன.

அவற்றில் இருவகை கடற்குதிரைகளை நாம் சிங்கப்பூர்க் கடல்வாழினக் காட்சியகத்தில் கண்டுகளிக்கலாம்.

சிங்கப்பூர்க் கடல்வாழினக் காட்சியகத்தில் தற்போது கடற்குதிரைகளுக்காகவே ஒரு சிறப்புக் கண்காட்சி ஒன்று நடக்கிறது. அந்தக் குட்டி உயிரினத்தின் ரகசியங்களைப் பற்றி எடுத்துச் சொல்லவே இந்தச் சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கடற்குதிரைகளைப் பற்றிய ஓர் அரிதான செய்தி உண்டு. இந்த உயிரினத்தில் அப்பா கடற்குதிரைகள்தான் முட்டைகளைச் சுமந்து, குஞ்சுகளைப் பொரிக்கின்றன. 

கடற்குதிரைகள் நீந்துவதில் திறமைசாலிகள் கிடையாது. அதனால், கடல் அலைகளில் அடித்துச் செல்லப்படாமல் இருக்க, அவை தங்களின் வாலால் கடல் செடிகளை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளும்.

ஆனால், அவற்றுக்கு மனிதர்களால் ஒரு பேரிடர் காத்திருக்கிறது. அதுதான் நாம் பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள்.

நாம் கடலில் வீசும் நெகிழி உறிஞ்சுகுழல்கள் (Straws) கடற்குதிரைகளின் வாலில் சிக்கிக்கொண்டால் அவை நீந்துவதற்கு மிகவும் சிரமப்படும்.

ஆகையால், கடற்குதிரைகளைக் காப்பாற்ற வேண்டுமானால் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதை நாம் தவிர்க்க வேண்டும்.

மாணவர்கள் நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டைக் குறைத்து, மறுசுழற்சி  செய்யப் பழகிக்கொள்ள வேண்டும். அது கடலில் வாழும் இந்த அழகான கடற்குதிரைகளுக்குச் செய்யும் பேருதவியாக இருக்கும்.

கடல்வாழினக் காட்சியகத்திற்குச் சென்று நீங்களும் இந்தக் குட்டி அதிசயங்களை நேரில் கண்டு இன்புறலாமே.

குறிப்புச் சொற்கள்