ஆடம்பர சொகுசு தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்ட இந்தியர்களின் அரண்மனைகள்

2 mins read
a3018591-e1b4-44a2-87ec-afa259ee12e5
உதய்பூரில் இருக்கும் தாஜ் லேக் பேலஸ். - படம்: ஊடகம்
multi-img1 of 5

வளமான வரலாறு மற்றும் கலாசாரப் பாரம்பரியத்திற்குப் பெயர் பெற்றது இந்தியா. கடந்த காலத்தின் பெருமைக்குச் சான்றாக நிற்கும் பல அரண்மனைகளைக் கொண்டுள்ளது இந்நாடு.

கட்டடக்கலை அதிசயங்களாக விளங்கும் இந்த அரண்மனைகள், ஒரு காலத்தில் ராஜாக்கள், ராணிகளின் வசிப்பிடங்களாக இருந்தன. ஆனால், மன்னர் ஆட்சிமுறை முடிவுக்கு வந்ததையடுத்து இந்த அரண்மனைகள் அவர்களின் சந்ததியினரால் ஆடம்பரத் தங்குவிடுதிகளாக மாற்றப்பட்டு, இங்கு வருகை தருபவர்களுக்கு ஆடம்பரத்தையும் வரலாற்றின் தனித்துவமான செழுமையையும் வழங்குகின்றன.

இந்தப் பாரம்பரியக் கட்டடங்களில் தங்கியிருப்பதன் மூலம், விருந்தினர்கள் அரச குடும்பத்தின் ஆடம்பரமான வாழ்க்கை முறையை அனுபவிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவின் பல்வேறு கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களைப் பற்றித் தெரிந்துகொள்கின்றனர். ஐந்து இந்திய அரண்மனைகள் தற்போது ஆடம்பர ஹோட்டல்களாக மாற்றப்பட்டுள்ளன.

தாஜ் லேக் பேலஸ், உதய்பூர்: ராஜஸ்தானில் பல அரண்மனைகள் உள்ளன. அவற்றில் தாஜ் லேக் அரண்மனையும் ஒன்று. இது ஜாக் நிவாஸ் மஹால் என்று முன்பு அழைக்கப்பட்டது. மேவார் அரச வம்சத்தின் முன்னாள் கோடைகால அரண்மனையான இது, தற்போது ஆடம்பர தங்குவிடுதியாக மாற்றப்பட்டுள்ளது. 1743-1746ல் இரண்டாம் மகாராணா ஜகத் சிங் என்பவரால் இந்த அரண்மனை கட்டப்பட்டது.

உமைத் பவன் அரண்மனை, ஜோத்பூர்: இந்த அரண்மனையின் தற்போதைய உரிமையாளரான காஜ் சிங்கின் தாத்தா மகாராஜா உமைத் சிங்கின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. 347 அறைகளைக் கொண்ட இந்த அரண்மனை முன்னாள் ஜோத்பூர் அரச குடும்பத்தின் முக்கிய வசிப்பிடமாக இருந்து வந்தது. இதில் அதிசயமான செய்தி என்னவென்றால், இன்னும் இந்த அரண்மனையில் அரச குடும்பத்தினர் வசித்துவரும் அதே வேளையில், உலகம் முழுவதிலுமிருந்து வரும் விருந்தினர்களையும் அன்புடன் வரவேற்கிறார்கள். ஆகையால் இது ஒரே நேரத்தில் அரண்மனையாகவும் ஆடம்பரமான தங்குவிடுதியாகவும் செயல்படுகிறது.

ராம்பாக் அரண்மனை, ஜெய்ப்பூர்: ஒரு காலத்தில் ஜெய்ப்பூர் மகாராஜாவின் அரச இல்லமாக இருந்த ராம்பாக் அரண்மனை, தற்போது ஆடம்பரமான தங்குவிடுதியாக மாறியுள்ளது. இது தற்போது தாஜ் ஹோட்டல் குழுமத்தால் ஐந்து நட்சத்திரத் தங்குவிடுதியாக நிர்வகிக்கப்படுகிறது.

ஃபலக்னுமா அரண்மனை, ஹைதராபாத்: ஃபலக்னுமா என்பது இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஓர் அரண்மனை ஆகும். இதை முதலில் பைகா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வைத்திருந்தனர். பின்னர் ஹைதராபாத் நிஜாமுக்குச் சொந்தமானது. தற்போது தங்குவிடுதியாக மாற்றப்பட்டுள்ள இங்குதான் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் சகோதரியின் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.

சமோட் அரண்மனை: தற்போது ஆடம்பர தங்குவிடுதியாக மாற்றப்பட்டுள்ள சமோட் அரண்மனை, மற்றோர் அழகான அரண்மனையாகும். இந்த தங்குவிடுதி ராஜ்புத் மற்றும் முகலாயக் கட்டடக்கலை பாணிகளின் அழகிய கலவையாகும். இந்த ஹோட்டல் விருந்தினர்களுக்கு ஆடம்பரமான, ஆழமான கலாச்சார அனுபவத்தை வழங்குகிறது.

குறிப்புச் சொற்கள்