சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை, மாயாஜால உலகைப் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? ஹேரி பாட்டர் ரசிகர்களே, உங்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘ஹேரி பாட்டர்: விஷன்ஸ் ஆஃப் மேஜிக்’ கண்காட்சி, ரிசார்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசாவில் இப்போது நடைபெற்று வருகிறது!
40,000 சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பிரம்மாண்டமான கண்காட்சி, இதுவரை உலகமெங்கும் நடத்தப்பட்டுள்ள இந்த வகை ஹேரி பாட்டர் கண்காட்சிகளிலேயே ஆகப்பெரியது.
மேலும், சிங்கப்பூருக்கு மட்டும் பிரத்தியேகமாக சேர்க்கப்பட்டுள்ள இரண்டு புதிய அங்கங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
ஜே.கே. ரௌலிங் உருவாக்கிய உலகளவில் புகழ்பெற்றுள்ள தனித்துவமான மந்திர உலகை அனுபவிக்க, அதில் இடம்பெறும் 10 மாயாஜால இடங்களைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ள அறைகளைச் சுற்றிப் பார்க்கலாம்.
உங்களுக்கென்று வழங்கப்படும் மந்திரக்கோல்களைப் பயன்படுத்தி அங்குள்ள பொருள்களையும் புகைப்படங்களையும் தொட்டுப்பார்த்து, ஒரு மந்திரவாதியைப் போல் நீங்கள் அவற்றுக்கு உயிரூட்டலாம்.
இக்கண்காட்சியின் தொடக்கத்தில் ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட மூன்று அடுக்கு ‘நைட்’ பேருந்தில் (The Knight Bus) ஏறி லண்டனில் ஹேரியின் விறுவிறுப்பான பயணத்தை நீங்களும் அனுபவித்துப் பார்க்கலாம்!
இதற்கு அடுத்ததாக, ‘12 கிரிமால்டு பிளேஸில்’ (12 Grimmauld Place) அமைந்திருக்கும் பிளாக் (Black) குடும்பத்தின் பூர்வீக வீட்டை நீங்கள் சுற்றிப்பார்க்கலாம். உங்கள் மந்திரக்கோலைப் பயன்படுத்தி சுவரோவியங்களுக்கு ஒளியூட்டி அவற்றுள் மறைந்திருக்கும் வம்ச மரத்தை வெளிக்கொணரலாம்.
மந்திர அமைச்சக (Ministry of Magic) அங்கத்தில், பாரிஸ், லண்டன், நியூயார்க் ஆகிய நகரங்களில் உள்ள மந்திர அமைச்சுகளை நீங்கள் ஒரே இடத்தில் காணலாம்.
தொடர்புடைய செய்திகள்
‘ஹால் ஆஃப்ப் ராஃபசி’ (Hall of Prophecy) போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் ஒளிவீசும் பந்துகளால் நிறப்பப்பட்ட கண்ணாடி அறையைச் சுற்றிப்பார்த்து, உங்கள் மந்திரக்கோலைப் பயன்படுத்தி தொடரில் வரும் ரகசியங்களைக் கண்டறியலாம்.
உங்களுக்கு தைரியமிருந்தால், சிங்கப்பூருக்காகப் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட லோர்டு வோல்டெமோர்ட் என்ற கொடிய மந்திரவாதியின் ரகசிய அறைக்குள் (Chamber of Secrets) பயணித்து பாருங்கள்!
பாசிலிஸ்க் என்ற பண்டைய மாயப்பாம்பு நீண்டகாலம் வசித்த குகைக்குள் சென்று மறைந்திருக்கும் ரகசிய செய்திகளைக் கண்டுபிடிக்கலாம்.
நிஃபிளர்கள் (Nifflers), கிரிண்டிலோக்கள் (Grindylows) போன்ற அற்புதமான மிருகங்களால் நிரப்பப்பட்ட மாயாஜாலப்பெட்டியினுள் இருப்பவற்றை வெளிக்காட்டும் நியூட்டின் மிருகக்காப்பகத்தில் (Newt’s Menagerie), ஊடாடும் முப்பரிமாணப் படிமங்களைக் கண்டுகளிக்கலாம்.
‘நாக்டர்ன் ஆலியின்’ (Knockturn Alley) இருண்ட பாதைகளைக் கடந்து செல்லும்போது, தானாக நகரும் நிழல்களையும் மர்மமாய் ஒளிரும் பொருட்களையும் காணலாம்.
இதைத் தொடர்ந்து ‘ரூம் அஃப் ரிக்கொயர்மன்டில்’ (Room of Requirement) உட்கூரைவரை அடுக்கப்பட்டிருக்கும் மந்திரப்பொருள்களை உங்கள் மந்திரக்கோலால் செயல்படுத்தி பார்க்கலாம்.
சிங்கப்பூருக்காகப் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருக்கும் இரண்டாம் அங்கமான ‘டிராப் டோரில்’ (The Trap Door) இத்தொடரின் முக்கிய கதாபாத்திரங்களான ஹேரி, ரான், ஹெர்மையோனி ஆகியோர் கடந்து சென்ற ரசவாத கல்லைப் பாதுகாக்கும் பாதைகளில் பயணித்துப் பாருங்கள்!
இக்கண்காட்சியின் இறுதி அங்கமான ‘பென்சிவ்’ (The Pensive) அறையில் வோல்டெமோர்ட்டுக்கு எதிரே போராடிய ஹேரியின் முக்கிய தருணங்களை 360-டிகிரியில் மெய்சிலிர்க்கும் அனுபவமாக காணலாம்.
அதுமட்டுமல்லாமல், இங்கு அமைந்திருக்கும் உணவு கடையில், மிகவும் பிரபலமான ‘பட்டர்பீர்’ பானத்தை நீங்கள் அருந்தி பாருங்கள்.
‘ஹேரி பாட்டர்: விஷன்ஸ் ஆஃப் மேஜிக்’ கண்காட்சி ஒருகு றிப்பிட்ட காலம் திறக்கப்பட்டிருக்கும் என்பதால் அதைக் காண தவறாதீர்கள்!
மேல் விவரங்களுக்கு www.HarryPotterVisionsOfMagic.sg இணையத்தளத்தை நாடுங்கள்.