கிராசியோ அசோசியேஷன் சிங்கப்பூர் மே 10, 11ஆம் தேதிகளில் தாமான் ஜூரோங் சமூக மன்றத்தில் தேசிய அளவிலான சிலாட் போட்டியை நடத்தியது. இந்தப் போட்டிக்கு தீவு முழுவதிலுமிருந்து கிராசியோ அசோசியேஷனில் இருந்து சுமார் 400 பேர் பங்கேற்றார்கள். அவர்கள் பல்வேறு வயது, எடை, திறன் பிரிவுகளில் போட்டியிட்டனர்.
பல இளம் விளையாட்டு வீரர்களில், கம்போங் உபி சமூக நிலையத்தைப் பிரதிநிதித்து முகமதியா மழலையர் பள்ளியைச் சேர்ந்த மழலையர் 2ல் பயிலும் மாணவி மர்யம் இஜ்ஜாதியும் ஒருவர்.
தனது இளம் வயதிலிருந்தே மர்யம் தற்காப்புக் கலையில் ஆர்வத்துடன் பயிற்சிகளைச் செய்து வந்தார். போட்டியன்று தனது திறமை, கவனம், உறுதியை வெளிப்படுத்தி, தனது பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். அவரது குறிப்பிடத்தக்க சாதனை பார்வையாளர்களிடமிருந்தும் சக போட்டியாளர்களிடமிருந்தும் கைதட்டல்களைப் பெற்றது.
போட்டிகளில் கலந்துகொண்டவர்கள் கூறுகையில், “இளம் வயதினரும் கலந்துகொள்வது சிங்கப்பூரின் சிலாட் சமூகத்தின் பிரகாசமான எதிர்காலத்தைக் குறிக்கிறது. அத்தகைய நம்பிக்கைக்குரிய இளம் விளையாட்டு வீரர்களுக்கு சிங்கப்பூர் ஆதரவு அளித்து வருவதால் சிங்கப்பூரில் சிலாட் தற்காப்புக் கலையின் எதிர்காலம் பாராட்டும்படி இருக்கிறது,” என்றனர்.

