மருத்துவ மன்னன்

3 mins read
920926cc-96bd-47e8-b835-163b312938e7
மகிழ்புரி மன்னர் இந்திரவர்மன், பாடலிபுத்திர மன்னர் ஆதித்யா. - படம்: செயற்கை நுண்ணறிவு

மகிழ்புரி மன்னர் இந்திரவர்மன் பக்கத்து நாடான பாடலிபுத்திர நாட்டின் வளத்தைக் கண்டு பொறாமைப்பட்டு, தன் நாட்டின் எல்லையில் இருந்த ஆற்றில் அணை கட்டினார். அதனால் பக்கத்து நாடான பாடலிபுரத்திற்குத் தண்ணீர் போவது நின்று போனது. பாடலிபுத்திரத்து மக்கள் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் தவித்தனர்.

-

பாடலிபுரத்தின் வயல்கள் எப்போதும் பச்சை பசேல் என்று இருக்கும். ஆனால் தண்ணீர் வருவது நின்று போனதால் வயல்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக காயத் தொடங்கின. அதைப் பார்த்த பாடலிபுரத்தின் அரசர் ஆதித்யா மனம் உடைந்து போனார். மக்களும் தண்ணீர் இல்லாமல் திண்டாடுவதைக் கண்டு இந்திரவர்மனிடம் உதவி கேட்க முடிவெடுத்தார்.

-

அதனால் அணையைத் திறந்து விடுமாறு இந்திரவர்மன் அரசருக்கு ஓர் ஆள் மூலம் கடிதம் அனுப்பினார். அதைப் பார்த்த இந்திரவர்மன், “தண்ணீர் தரமுடியாது. வேண்டுமானால் போரிட்டு வாங்கிக்கொள்!” என்று ஆணவத்துடன் வந்த ஆளை திருப்பி அனுப்பினார். போர் தொடங்கும் நாளும் வந்தது. போருக்கு முதல்நாள், இந்திரவர்மனுக்குத் தீராத காய்ச்சல் வந்தது.

-

இந்திரவர்மனை எந்த மருத்துவராலும் குணப்படுத்த முடியவில்லை. மருத்துவம் தெரிந்த ஆதித்யா, இதை வாய்ப்பாகப் பயன்படுத்தாமல், மனிதாபிமானத்துடன் முதியவர் வேடத்தில் மகிழ்புரிக்கு இந்திரவர்மனைக் குணப்படுத்த சென்றார். அவரைத் தடுத்த வேலையாளிடம், “உங்கள் அரசருக்கு மருத்துவம் பார்க்க வந்திருக்கிறேன்,” என்றார்.

-

காவலாளி, அவரின் கம்பீரக் குரலைக் கேட்டு உடனே அனுமதித்தான். அரசரைப் பார்த்து, “அரசே! என்னால் உங்களைக் குணப்படுத்த முடியும்,” என்று கூறியதோடு, தான் கொண்டு வந்த மூலிகைகளைப் பயன்படுத்தி அவருக்கு மருந்து தயாரித்துக் கொடுத்தார். விரைவில் நலமடைந்த இந்திரவர்மன், “உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்? சொல்லுங்கள். உடன் தருகிறேன்,” என்றார்.

-

ஆதித்யா தன் வேடத்தைக் கலைத்து, “எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் இப்போது நலமாகிவிட்டீர்கள். நான் என் நாட்டிற்கு சென்றதும் நீங்கள் என் நாட்டின் மீது படை எடுத்து வந்து போர் புரியலாம். நான் வருகிறேன் மன்னா!” என்று கூறி விடைபெற்றார். தன்னை எதிரியாக நினைத்தவனையே காப்பாற்றிய ஆதித்யாவின் உயர்ந்த குணத்தைக் கண்டு இந்திரவர்மன் வெட்கித் தலைகுனிந்தார்.

-

மன்னித்துவிடுங்கள் நண்பரே! நீங்கள் கேட்ட உதவியை நான் செய்யாதபோதும் என்னுடைய உடல்நலம் கருதி, உங்கள் நாட்டை விட்டு என் நாட்டிற்கு வந்து இத்தனை நாள்கள் மாறுவேடத்தில் இருந்து என்னைக் காப்பாற்றினீர்கள். உங்கள் பெருந்தன்மைக்கு நான் செய்யும் கைம்மாறு அணையைத் திறந்து விடுவதே என்று கூறி, அணையைத் திறந்து விட்டார்.

-

இந்தக் கதைக்கு ஏற்ற திருக்குறள்:

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்.”

பொருள்: நமக்குத் துன்பம் செய்தவர் வெட்கப்படும்படி, அவருக்கு நன்மையைச் செய்துவிட வேண்டும்.

இந்தக் கதையில் இந்திரவர்மன் தண்ணீரைத் தடுத்து, போர் புரிய அழைத்தார். (தீமை செய்தார்). ஆனால், ஆதித்யா அவரை எதிரியாகப் பார்க்காமல், நோயுற்ற ஒரு மனிதராகப் பார்த்து அவரைக் காப்பாற்றினார் (நன்மை செய்தார்). அந்த அன்புதான் இந்திரவர்மனின் மனதை மாற்றியது. சண்டையால் சாதிக்க முடியாததை, அன்பு சாதித்துக் காட்டியது.

குறிப்புச் சொற்கள்