‘நம் தாய்மொழியில் இத்தனைச் சிறப்புகள் இருக்கின்றனவா?’ என சிறுவர்களை வியக்கவைத்தது தாய்மொழிக் கருத்தரங்கு 2024.
செப்டம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமையன்று, நாள் முழுவதும் தாய்மொழிசார்ந்த சுவாரசிய நடவடிக்கைகளில் சிறுவர்கள் ஈடுபட்டனர்.
சன்டெக் சிட்டி மாநாடு, கண்காட்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாணவர்களின் அறிவுப் பசிக்கு உணவாக வெவ்வேறு அமைப்புகள் தம் சாவடிகளில் தாய்மொழி பற்றிய அரிய தகவல்களை வழங்கினர்.
மேடையேறிய நாடகங்களையும் நடனங்களையும் சிறார்கள் கண் இமைக்காமல் கண்டு மகிழ்ந்தனர்.
பல்லினச் சிறார்கள் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் முன்னிலையில், ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதைச் சித்திரித்த நாடகத்தைப் படைத்தனர்.
தமிழ்ப் பற்றித் தெரிந்துகொள்ள மற்ற இன மாணவர்களும் வந்து, தமிழ் எழுத்துக்களை எழுதக் கற்றுக்கொண்டு சிங்கப்பூரின் இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.
“எனக்குத் தமிழ்ப் படிக்கத் தெரியும்; ஆனால் பிடிக்காது. இங்கு வந்ததும் எனக்குத் தமிழ் நூல்கள் படிக்க ஆர்வமாக இருக்கிறது.” என்றார் குவீன்ஸ்டவுன் தொடக்கப்பள்ளி மாணவர் சிவராமன் கெளதம், 10.
மற்றொரு சிறப்பாக, சிறுவரோடு சிறுவராய், தமிழ்மொழிக் கற்றல் வளர்ச்சிக் குழுத் தலைவர் விக்ரம் நாயர் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.