தேசிய தின அணிவகுப்பின் முன்னோட்ட நிகழ்ச்சிக்கு (ஆகஸ்ட் 2) வந்திருந்த சிறுவர்களிடம் ‘தேசிய தினம் என்றால் உங்களுக்கு என்ன மனதில் தோன்றுகிறது?’, ‘எந்த அம்சங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறீர்கள்?’ போன்ற கேள்விகளைக் கேட்டோம்.
எஸ்ஜி60க்காகவே தயாரிக்கப்பட்ட சிறப்புப் போர் விமான அம்சங்கள், வான் சாகசங்களால் பலரும் ஈர்க்கப்பட்டனர்.
முதன்முறையாக, ‘மொபைல் காலம்’ (Mobile Column) எனப்படும் சிங்கப்பூர் ஆயுதப்படை, சிங்கப்பூர்க் காவல்துறை, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை வாகனங்களின் நகரும் காட்சியுடன், போர்விமானங்கள், படகுகளின் காட்சிகள் ஒருங்கிணைந்து இடம்பெற்றன.
போர்விமானங்கள் நாட்டுக்கு வணக்கம் செலுத்தும் அங்கத்தில், ஆறு எஃப்-15எஸ்ஜி போர்விமானங்கள் அம்பு வடிவில் வானில் செல்ல, அவற்றை நான்கு எஃப்-16 விமானங்கள் வைர வடிவில் பின்தொடர்ந்தன. இது சிங்கப்பூரின் வைர விழாவை (60வது ஆண்டு நிறைவை) குறிக்கிறது.
மற்றொரு சாகசத்தில் ஆறு எஃப்15-எஸ்ஜி விமானங்கள் வெவ்வேறு திசைகளிலிருந்தும் பறந்து வந்து சங்கமித்தன.
முக்குளிப்பாளர்களும் செஞ்சிங்கங்களும் முதன்முறையாகப் பாடாங்கில் ஒருங்கிணைந்த முறையில் தரையிறங்கிய ‘ஜம்ப் ஆஃப் யூனிட்டி’ அங்கம் சிறுவர்களை வெகுவாகக் கவர்ந்தது.
கூட்டத்தைக் கண்காணிக்க ரோபாடிக் நாய் சிறுவர்களை ஈர்த்தது.
சூரியன் ஓய்ந்தபின் இரவின் இருளில் விளக்குகளை ஏந்திய நடனக் கலைஞர்களின் வண்ணமயமான உடைகள், வாணவேடிக்கைகள், ஒளிமயமாக்கின.
‘முன்னேறு வாலிபா!’ பாடல் வரிகளுக்கேற்ப ‘இருளில் ஒளிபெற உன்னை (சிங்கப்பூரை) நாடும்’ எனச் சிங்கப்பூரின் 60வது ஆண்டு நிறைவில் சிங்கப்பூர் தொடர்ந்து மற்ற நாடுகளுக்கு ஒளியூட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது.
“பெரிய பந்து கீழே உருண்டு வந்தது எங்களுக்குப் பிடித்திருந்தது. ஹெலிகாப்டர், வாணவேடிக்கைகள் பிடித்திருந்தன,” என்றார் இரண்டாம் முறையாகத் தேசிய தின அணிவகுப்பைக் காணும் சுதிக்ஷா நடீன், 5.
“நாங்கள் கையில் அணிய ‘எல்இடி’ ஒளிக் கடிகாரங்கள் தந்திருந்தார்கள். அது மிகவும் பிடித்திருந்தது,” என்றார் அவருடைய உறவினர் ஜெஸில் நாஃபல், 6.
“எங்களுக்கு நீல வண்ண உடையணிந்த நடனமணிகள் படைத்த அங்கம் பிடித்திருந்தது,” என்றனர் சகோதரிகள் இவேஞ்சலின், 4, ஆரியானா, 3.
“நான் செஞ்சிங்கங்கள் படைத்த அங்கத்தைப் பெரிதும் விரும்பினேன்,” என்றார் சரண் கிரிஷ், 9.
இது வெறும் முன்னோட்டக் காட்சிதான். ஆகஸ்ட் 9ஆம் தேதி சிங்கப்பூரின் தேசிய தின அணிவகுப்பு இதைவிட பிரம்மாண்டமாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.
அப்போது உங்கள் மனதில் பெருமையும் இன்பமும் பொங்கும். அடுத்து, சிங்கப்பூரின் 100வது பிறந்தநாளை நோக்கிய வெற்றிப் பயணம் உங்கள் கைகளில்தான் உள்ளது. அதற்காக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? சிந்தித்துப் பாருங்கள்!
பெற்றோருடன் சகோதரிகள் இவேஞ்சலின், 4, ஆரியானா, 3.
சகோதரிகள் ஜோவானா, லியானா
அக்கா அர்ஷிதா உடன் சரண் கிரிஷ், 9.
குடும்பத்தினருடன் சுதிக்ஷா நடீன், ஜெஸில் நாஃபால்