தேவை, விருப்பம், சேமிப்பு

தேவை, விருப்பம், சேமிப்பு

2 mins read
(வரவு செலவைப் பற்றி விளக்கும் கதை)
0baa06e4-55e4-4f88-ad79-da2400672e31
தேவை, விருப்பம், சேமிப்பு என்று கவினின் தாயார் சொல்லிக் கொடுத்தபடி கவின் திட்டமிட்டதால் அவனால் அவன் விரும்பிய கார் வாங்க முடிந்தது. - படங்கள்: செயற்கை நுண்ணறிவு

அன்று கவினுக்குப் பிறந்தநாள்.

அவன் அம்மா அவனுக்கு பத்து வெள்ளி கொடுத்தார்.

கவின் மகிழ்ச்சியுடன், “நன்றி அம்மா,” என்றான்.

அவன் அம்மா, “அண்மையில் பட்ஜெட் 2026 எனப்படும் வரவு செலவுத் திட்டத்தை வெளியிட்டார்கள். அதுபோல் நாம் செயல்படுவோமா?” என்றார்.

உடன் கவின் ஆர்வத்துடன் சொல்லுங்கள் அம்மா என்றான்.

அவர் ‘தேவை’ எது, ‘விருப்பம்’ எது மேலும் ‘சேமிப்பு’ என்றால் என்ன என்பதைப் பற்றி கவினுக்குப் புரியும்படி விளக்கினார்.

மறுநாள் கவின் பள்ளி இடைவேளையில் உணவு உண்ண நினைத்தான். உணவு என்பது தேவை என்று அம்மா சொல்லியது அவனுக்கு நினைவுக்கு வந்தது.

தெம்பாக விளையாடவும் படிக்கவும் உணவு அவசியம் என்பதை அவன் உணர்ந்தான்.

அவனிடம் இருந்த 10 வெள்ளியில் 2 வெள்ளிக்கு உணவு வாங்கி உண்டான்.

மீதி 8 வெள்ளி இருந்தது. அன்று மாலை அவன் பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது, கடையில் இருந்த ஸ்டிக்கர் புத்தகத்தைப் பார்த்தான்.

தன் அன்னையிடம் கடையில் இருந்த ஒரு ஸ்டிக்கர் புத்தகத்தைக் காட்டி அது வேண்டும் என்றான்.

“கவின், அது உனது விருப்பம். இதன் விலை 3 வெள்ளி. இதை வாங்கினால் சேமிக்க பணம் குறைவாக இருக்கும்,” என்று விளக்கினார்.

கவின் சிறிது நேரம் யோசித்தான்.

கவினுக்கு அந்த ஸ்டிக்கர் புத்தகம் வாங்க வேண்டும் என்று நெடுநாள் விருப்பம்.

அதனால் தன்னிடம் இருந்து ஐந்து வெள்ளியைக் கடைக்காரரிடம் கொடுத்து அந்த புத்தகத்தை வாங்கினான்.

மீதம் அவனிடம் 5 வெள்ளி இருந்தது.

வீட்டை அடைந்ததும் அந்த 5 வெள்ளியை அவனுடைய சிங்க உண்டியலில் போட்டு வைத்தான்.

சிறிது நாளில் அவனுக்கு கிடைக்கும் பணத்தை எல்லாம் இதுபோல் தேவை, விருப்பம், சேமிப்பு என்ற கணக்கில் செயல்படுத்தினான்.

அவனுடைய உண்டியலில் அதிகப் பணம் நிரம்பியது.

அதை எடுத்துக்கொண்டு அன்னையுடன் பொம்மைக் கடைக்குச் சென்று அவன் நீண்ட நாள்களாக விரும்பிய நீல நிற காரை வாங்கினான்.

“அம்மா, நான் சரியாகத் திட்டமிட்டதால் எனக்குப் பிடித்த கார் கிடைத்துவிட்டது!” என்று கவின் பெருமையுடன் கூறினான்.

-
-
-
-
-
-

இந்தக் கதையிலிருந்து நாம் கற்றது:

தேவை (Need): உணவு, தண்ணீர் போன்ற உயிர்வாழத் தேவையானவற்றுக்கு முதலில் முக்கியத்துவம் தர வேண்டும். (கவின் முதலில் $2க்கு உணவு வாங்கினான்).

விருப்பம் (Want): பொம்மைகள், ஸ்டிக்கர்கள் போன்றவை நமக்கு மகிழ்ச்சி தரும், ஆனால் அவை இல்லாமல் நம்மால் வாழ முடியும். (கவின் தன் விருப்பத்திற்காக $3 செலவு செய்தான்).

பொறுமை (Patience): கவின் அன்று அந்த $5ஐச் செலவு செய்யாமல் சேமித்ததால்தான், அவனால் ஒரு பெரிய நீல நிறக் காரை வாங்க முடிந்தது.

ஒரு சின்ன சவால்!

கவின் தனது $10ல் பாதிப் பணத்தைச் ($5) சேமித்தான். நீங்கள் உங்கள் உண்டியலில் எவ்வளவு சேமிக்கப் போகிறீர்கள்?

குறிப்புச் சொற்கள்