விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட சிறுவர்களே…
இவ்வாண்டு சிங்கப்பூரில் உலக நீர் விளையாட்டுப் போட்டிகள், உடற்குறையுள்ளோருக்கான உலக நீச்சல் போட்டிகள், ‘பெஸ்தா சுக்கான்’, ‘பிளே இன்குலூசிவ்’ எனப் பல முக்கிய விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவதற்கும் நம் விளையாட்டாளர்கள் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதற்கும் நீங்களும் பங்காற்றலாம்.
சிங்கப்பூர் சார்ந்த விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் போட்டிகளிலும் முக்கியப் பங்காற்றும் ‘டீம் நிலா’ தொண்டூழியரணியில் சிறுவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குகிறது புதிய ‘லிட்டில் டீம் நிலா’ திட்டம்.
இத்திட்டம் மார்ச் 22ஆம் தேதி சனிக்கிழமையன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
அன்று சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடந்த ‘டீம் நிலா’ பத்தாம் ஆண்டு நிறைவு இரவு விருந்தில் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா அத்திட்டத்தை அறிவித்தார்.
இதன்வழி நான்கு வயதுக்கு மேற்பட்ட பாலர், தொடக்கநிலை, உயர்நிலை 1, 2 மாணவர்கள் ‘டீம் நிலா’வில் இணைந்து தொண்டாற்றலாம்.
விளையாட்டுகளில் மக்களுக்கு உற்சாகமூட்டும் சிறுவர் தலைவர்கள், கொடி ஏந்துபவர்கள், விளையாட்டாளர்களுடன் சேர்ந்து நடப்பவர்கள், பரிசளிப்பு விழாக்களில் உதவுபவர்கள் எனப் பல்வேறு பொறுப்புகளில் சிறுவர்கள் சேவையாற்றலாம்.
தொடர்புடைய செய்திகள்
‘லிட்டில் டீம் நிலா’ திட்டம் தொடக்கத்தில் கிட்டதட்ட 10,000 மாணவர்களை ஈடுபடுத்த விரும்புகிறது.
இதன்வழி சிறுவர்களிடையே தொண்டூழிய உணர்வு, விளையாட்டு மீதான பற்று, குழுவுணர்வு, சமூகப் பிணைப்பு ஆகியவற்றை நிலைநாட்ட ‘டீம் நிலா’ விழைகிறது.

