சிங்கப்பூர் நைட் சஃபாரியில் புதிய விலங்கியல் அனுபவங்கள்

3 mins read
73c6efc2-72a5-4484-ae7e-e55fa3731d30
அருகிவரும் இனமான ‘சுண்டா’ பங்கோலின். - படம்: மண்டாய் வனவிலங்குக் குழுமம்

பள்ளி விடுமுறை நெருங்கும் வேளையில் சிங்கப்பூர் நைட் சஃபாரியில் புதிய அனுபவங்களை எதிர்பார்க்கலாம்.

இவ்வாண்டு சிங்கப்பூர் நைட் சஃபாரியின் 30வது ஆண்டு நிறைவாகும். இதை முன்னிட்டு பங்கோலின் எனும் எறும்பு உண்ணும் விலங்கை மையப்படுத்தும் புதுப்பிக்கப்பட்ட 540 மீட்டர் நடைபாதை, நைட் சஃபாரியில் அக்டோபர் மாதம் திறக்கப்பட்டுள்ளது. இது சஃபாரியின் நுழைவாயிலுக்கு அருகிலேயே உள்ளது.

அதில் ‘சுண்டா’ பங்கோலினுடன், ‘சுண்டா’ மெதுவாகச் செல்லும் தேவாங்கு (slow loris), சிறு நகங்கள் கொண்ட ஓரியண்டல் நீர்க்கீரி (oriental small-clawed otter), புள்ளிகள் கொண்ட பெரிய பறக்கும் அணில் (spotted giant flying squirrel), மலாயன் மீன் ஆந்தை (Malayan fish owl) முதலான இனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவை அனைத்தையும் சேர்த்து மொத்தம் 11 தென்கிழக்காசிய இனங்கள், 50க்கும் மேற்பட்ட விலங்குகளை இப்பாதையில் காணலாம்.

இப்பாதையில் மொத்தம் 15 கண்காட்சிகள் இருக்கும். அவற்றில் வெவ்வேறு இனங்களை இணைக்கும் நான்கு கண்காட்சிகள் உட்பட ஆறு புதிய கண்காட்சிகள் உள்ளன.

முதன்முதலாக சிறுத்தைப் பூனை (leopard cat) போன்ற இனங்களோடு ஒரே கண்காட்சியில் ‘சுண்டா’ பங்கோலின் காட்சிப்படுத்தப்படுகிறது.

முழுவதுமாகக் கூரையுள்ள (fully sheltered) புதிய 280 மீட்டர் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழை நேரத்திலும் இந்த நடைபாதையில் செல்லலாம்.

அன்றாடம் இரவு 8.45 மணிக்கு பங்கோலின்கள் உணவு உண்ணும் சிறப்புக் காட்சியை மக்கள் காணலாம்.

அருகிவரும் இனமான ‘சுண்டா’ பங்கோலின்

‘சுண்டா’ பங்கோலின் இயற்கையாக சிங்கப்பூரிலும் தென்கிழக்காசியாவிலும் காணப்படும் விலங்கு. அது ‘மிக அருகிய இனம்’ என சிங்கப்பூர் சிவப்புத் தரவு நூல் 2008ல் வகைப்படுத்தியுள்ளது. சில சமயங்களில் காடுகளிலிருந்து அவை வழி தவறி சாலைகளுக்கு வந்துவிடுகின்றன. அப்போது சாலைகளில் செல்லும் வாகனங்களில் அவை அடிபட்டு இறந்துவிடுவது சிங்கப்பூரில் இவை குறைந்து வருவதற்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.

உலகிலேயே ஆக அதிகமாக கடத்தப்படும் பாலூட்டி (mammal) பங்கோலின்கள்தான். அவற்றின் மாமிசத்துக்காகவும் மருத்துவப் பயன்கள் கொண்ட செதில்களுக்காகவும் அவை கடத்தப்படுகின்றன.

உலகிலேயே சுண்டா பங்கோலினை இனப்பெருக்கம் செய்யும் முதல் விலங்கியல் பூங்கா சிங்கப்பூர் நைட்சஃபாரிதான்.

நைட் சஃபாரியிலுள்ள 41 விழுக்காட்டு விலங்குகள் அருகிவரும் இனங்களைச் சேர்ந்தவை.

ஆசிய ஆண் யானைக்குப் புதிய இருப்பிடம்

‘சாவாங்’ (Chawang) எனும் நைட் சஃபாரியின் ஆசிய ஆண் யானை (bull elephant), புத்தம்புதிய இருப்பிடத்தில் மக்களைப் பரவசப்படுத்தும்.

புதிதாக அமைக்கப்பட்ட பார்வையாளர் மேடையிலிருந்து சாவாங்கை அருகிலிருந்தபடி காணலாம். நைட் சஃபாரியில் ஆசிய யானையை நடந்து காண்பது என்பது இதுவே முதன்முறை.

வெவ்வேறு நேரங்களில் புற்களை வெளியிடும் தானியக்கக் கருவி, யானையை மேலும் உற்சாகமாக நடமாடி உணவைத் தேடத் தூண்டுகிறது. இதனால் அதன் ஆரோக்கியம் மேம்படும்; யானையை இன்னும் தெளிவாகவும் காணமுடியும்.

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் புதிய மேம்பாடுகள்

கலிஃபோர்னியன் கடற்சிங்கங்கள், ஆப்பிரிக்க பெங்குவின்களுக்குப் புதிய கடலோர இருப்பிடம் 2027ல் தயாராகிவிடும்.

அப்போது குடும்பங்கள் உணவு உண்டுகொண்டே நீருக்குள் இருக்கும் கடற்சிங்கங்கள், பெங்குவின்களைக் கண்டு ரசிக்கலாம். முதன்முறையாக சிங்கப்பூரில் துறைமுக நீர்நாய்களும் (Harbour seals) இக்கண்காட்சிவழி காட்சிப்படுத்தப்படும்.

இதற்காக, தற்போதைய கடற்சிங்க, பெங்குவின் கண்காட்சிகள் ஜூலை 15, 2024 முதல் மூடப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்