ஓர் ஊரில் படித்த அறிவாளி ஒருவர் இருந்தார். அவர் தனக்குத்தான் எல்லாம் தெரியும். மற்றவர்கள் எல்லாம் முட்டாள் என்று ஆணவம் கொண்டு இருந்தார்.
ஒருநாள் பக்கத்து ஊரில் இருக்கும் செல்வந்தரைப் பார்க்கப் புறப்பட்டார். ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் கரையில் படகை வைத்துக்கொண்டு காத்திருந்த படகோட்டியிடம் பேரம் பேசி படகில் ஏறினார்.
படகோட்டி அவரை வணங்கி தன் படகில் ஏற்றிக்கொண்டார். படிப்பாளி ஆணவம் தலை தூக்க “நீ எவ்வளவு படித்திருக்கிறாய்?” என்று கேட்டார்.
“ஐயா... எனக்கு படிக்க வசதியில்லை. என் குடும்பம் ஏழ்மையானது. சிறு வயது முதலே நான் சம்பாதித்துக் கொடுக்கும் பணத்தில்தான் குடும்பத்தினர் அனைவரும் வாழ்கிறார்கள்,” என்றார்.
உடனே அறிவாளி “அடடா... உன் வாழ்வையே வீணாக்கிவிட்டாயே! என்னைப்பார். என்னைப்போன்று எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை,” என்று ஆணவத்துடன் கூறினார்.
ஆற்றில் செல்ல செல்ல காற்றின் வேகத்தால் படகு ஆட்டம் கண்டது. “ஐயா! அலை அதிகமாகிவிட்டது. படகில் நீர் புக ஆரம்பித்துவிட்டது. படகு கவிழப்போகிறது. உங்களுக்கு நீச்சல் தெரியுமா?” எனக் கேட்டார் படகோட்டி.
உடனே அறிவாளி பயத்துடன், “எனக்கு நீந்தத் தெரியாதே?” என்றார் கலவரத்துடன்.
“ஐயா, படிக்காமல் நான் என் வாழ்வை வீணாக்கி விட்டேன். ஆனால், நீங்கள் நீந்தத்தெரியாததால் உயிரையே இழக்கப்போகிறீர்களே,” என்று கூறி படகில் இருந்து ஆற்றில் குதித்தார்.
தொடர்புடைய செய்திகள்
படகு ஆற்றில் மூழ்க, பயத்துடன் தத்தளித்துக்கொண்டு இருந்த அறிவாளியையும் சேர்த்து இழுத்து நீந்தியபடியே கரைக்கு வந்து சேர்ந்தார் படகோட்டி.
அப்போதுதான் அறிவாளிக்கு புத்தி வந்தது. “இந்த உலகில் கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் கிடையாது. எதுவும் தெரியாதவரும் கிடையாது. எனவே எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தை விட்டொழிக்கவேண்டும்,” என்பதை உணர்ந்தார்.
கற்றது கை மண்ணளவு கல்லாதது உலக அளவு - கைநிறைய எவ்வளவுதான் மண்ணை அள்ளினாலும் அது நிலத்தோடு ஒப்பிடும்போது குறைவாகத்தான் இருக்கும். அதுபோலவே நாம் எவ்வளவு கற்றாலும் கற்க வேண்டியவை இந்த உலகில் நிறைய உண்டு.
இந்தக் கதை மூலம் நாமும் எவரையும் ‘இவருக்கு என்ன தெரியப்போகிறது?’ என்று ஏளனமாக எண்ணக்கூடாது. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை மறைந்திருக்கும் என்பதை உணர்ந்து அனைவரையும் மதித்து நடக்கவேண்டும்.