உலக வெற்றியாளர் பட்டத்தை வென்றதும் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீருடன் தான் விளையாடிய சதுரங்கப் பலகையில் காய்கள் ஒவ்வொன்றையும் அதனதன் இடத்தில் சீராக அடுக்கி வைத்துவிட்டு தன் இருக்கையிலிருந்து எழுந்தார் குகேஷ்.
எழுந்த பிறகு அவரின் இருக்கையையும் நகர்த்தி அதனிடத்தில் வைத்தார். அவர் இதனைச் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும் செய்தார். இதை அனைவரும் கவனித்தனர்.
வெறும் விளையாட்டு மட்டுமின்றி அவருக்கு ஒழுக்கத்தையும் பண்பையும் சேர்த்தே கற்பித்திருக்கிறார்கள் அவரின் பெற்றோர். அவரது பெற்றோரின் வழிநடத்தல் இல்லாமல் இந்த பண்பு ஒருவருக்கு எளிதாக வராது. அதற்காக அவரின் பெற்றோருக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
ஒரு பொருளை முறையாகப் பேணுவதும் எடுத்த இடத்தில் நேர்த்தியாக வைப்பதும் தனிமனித ஒழுக்கத்தில் ஒரு முக்கிய அங்கமாகும்.
தனிமனித ஒழுக்கம் ஒருவரது தலைமைப் பண்பை வளர்க்கும். அதைச் சிறுவர்களுக்கு கற்றுத்தர வேண்டியது அவசியம்.
கடந்த ஏப்ரல் மாதம் கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்த ‘கேண்டிடேட்ஸ்’ சதுரங்கத் தொடரில் வெற்றியாளர் பட்டம் வென்று சாதனை படைத்த குகேஷ், ‘இந்து தமிழ் திசை’க்கு சிறப்புப் பேட்டி அளித்திருந்தார். அதில், தனக்குச் சிறு வயதில் சதுரங்கத்தில் ஆர்வம் எப்படி வந்தது? பெற்றோரின் தியாகம் இல்லையென்றால் தம்மால் இவ்வளவு பெரிய சாதனையைப் படைத்திருக்க முடியாது என்பது குறித் அவர் பகிர்ந்திருந்தார்.
குகேஷின் தந்தை ரஜினிகாந்த் காது, மூக்கு, தொண்டை நிபுணர்; தாய் பத்மா நுண்ணுயிரியலாளர்.
2017-18ஆம் ஆண்டு குகேஷ், கிராண்ட் மாஸ்டர் நார்ம் இறுதிக்கட்டத்தை எட்டும் நிலையில் இருந்ததால் உலகின் பல்வேறு பகுதியில் நடைபெற்ற சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்க வேண்டி இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
அதனால் அவரின் தந்தை ரஜினிகாந்த் தனது பணியை நிறுத்திவிட்டு மகனுடன் பயணிக்கத் தொடங்கினார். இதனால் வீட்டுச் செலவுகளை அவரது தாய் பத்மா கவனிக்க வேண்டிய நிலை உருவானது. பல நாள்கள் இவர்கள் நேரில் சந்தித்துக் கொள்ள முடியாத நிலைகூட இருந்துள்ளது.
இவர்களது தியாகங்களின் பலனாக குகேஷ் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரியில் கிராண்ட் மாஸ்டர் ஆனார். அப்போது அவருக்கு பன்னிரண்டு வயது.
இதன் மூலம் அவர், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். மேலும் குகேஷின் பயணத்துக்காகச் சேமித்து வைத்திருந்த மொத்தத் தொகையையும் அவரது பெற்றோர் செலவழிக்க நேர்ந்தது.
மேற்கொண்டு நிதி தேவைப்பட்ட நிலையில் விஸ்வநாதன் ஆனந்த் அகாடமி வழியாக அதற்கான உதவியும் கிடைத்தது. அதைத் தொடர்ந்து குகேஷின் பயணம் ஏறுமுகமானது.
தற்போது உலகச் சதுரங்க வெற்றியாளர் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இந்தியாவிற்குப் பெருமை தேடித் தந்துள்ளார் குகேஷ்.