சுவாரசியமான விளையாட்டுகளின்மூலம் பாலர் பள்ளி மாணவர்களிடையே தமிழ் மீதான ஆர்வத்தை வளர்த்தது ‘பயில் 2026’ பயிலரங்கு.
ஏப்ரல் 4ஆம் தேதி தேசிய நூலகக் கட்டடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை Indian.SG ஏற்பாடு செய்தது.
தமிழ் மொழி விழாவின் ஓர் அங்கமாக இப்பயிற்சி முகாம் நடைபெற்றது. பாடல்கள், வண்ணம்தீட்டும் நடவடிக்கைகள் ஆகியவற்றின்மூலம் மாணவர்கள் தமிழ் எழுத்துகள் பற்றிக் கற்றுக்கொண்டனர்.
‘ஈடுபாடு’ என்னும் இவ்வாண்டின் தமிழ்மொழி விழாவின் கருப்பொருளுக்கு இணங்க மாணவர்களுடன் பெற்றோர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
பெற்றோர்கள் இத்தகைய நிகழ்ச்சிகளில் தங்கள் குழந்தைகளுடன் ஈடுபடும்போது தமிழை எவ்வாறு எளிமையான முறையில் கொண்டு சேர்க்கலாம் என்பதைக் கற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் 34 வயதுடைய திருமதி சுடர்மொழி முதலியப்பன் இப்பயிலரங்கை வழிநடத்தினார்.
நிகழ்ச்சியில் தன் குழந்தையுடன் ஈடுபட்ட 30 வயது இல்லத்தரசி திருமதி சரண்யா பாபு, இத்தகைய நிகழ்ச்சிகளின்மூலம் மாணவர்களுக்குத் தமிழில் அதிகம் பேசும் வாய்ப்பு கிடைக்கிறது என்றும் அவர்கள் புதிய வார்த்தைகளைக் கற்றுக்கொள்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

