சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில், டிஸ்னியுடன் இணைந்து ‘காட்டுச் சுற்றுக்காவல் படையில் சேருங்கள்!’ (Join the Wild Patrol!) என்ற சாகசப் பயணம் வரும் நவம்பர் 8ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இது டிஸ்னியின் ‘ஜூடோபியா 2’ திரைப்படத்தைப் போல இருக்கும்.
இந்தப் பயணத்தின்போது, ஜூடி ஹாப்ஸ், நிக் வைல்டு ஆகிய கேலிச்சித்திர கதாபாத்திரங்களுடன் இணைந்து, பிள்ளைகள் ஒரு மர்மத்தைக் கண்டுபிடிக்கும் சாகசத்தில் ஈடுபட்டு சான்றிதழையும் பேட்ஜையும் பெறலாம்.
இங்கு ஜூடோபியா பொம்மைக் கார்களில் வலம் வரலாம். அத்துடன், ஒரு சில அன்பளிப்புப் பொருள்களையும் வாங்கலாம். இதற்கென்றே தனிச்சிறப்பு மிக்க ஒரு சீட்டுத் தொகுதியும் உள்ளது.
பறவைகள் மகிழ்வனம்
மண்டாய் வனவிலங்கு மேற்குப் பகுதியில் வரும் நவம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி வரை பலதரப்பட்ட கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
இங்குள்ள பறவைகள் மகிழ்வனம் (Bird Paradise), ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் ஆசியா ஆகிய இடங்களை மாயாஜால ஒளி வீச்சுகளும் கலைப்படைப்புகளும் ஒளிர வைக்கும்.
இங்கு அமைக்கப்படும் 8 மீட்டர் உயரமுள்ள ஒளிரும் ‘வாழ்க்கை மரம்’ (Tree of Life) விருந்தினர்களை வரவேற்கும்.
தொடர்புடைய செய்திகள்
சாண்டாவின் மறைந்திருக்கும் டோக்கன்களைக் கண்டுபிடிக்கும் தேடல் பயணமும் இருக்கும்.
ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் ஆசியாவின் புகழ்பெற்ற குகை (Cavern), பனிப்பொழிவு மற்றும் அரோரா விளக்குகளால் மாயாஜால உலகமாக மாற்றம் காணும். பார்வையாளர்கள் ‘சாண்டாவின் சாகசத் தேடலில்’ ஈடுபட்டு $70,000 மதிப்புள்ள பரிசுகளை வெல்லலாம். விலங்குகளுக்கும் பண்டிகைக்கால சிறப்பு விருந்துகள் அளிக்கப்படும்.
பறவைகள் சொர்க்கத்தில், பென்குயின் கோவ் பகுதியில் பனித்துகள் ஒளிவீச்சுகளைக் (snowflake projections) காணலாம். குழந்தைகள் ‘பெங்குவின்களின் கிறிஸ்துமஸ் விருந்துத் தேடலில்’ பங்கேற்கலாம்.
இந்தப் பூங்கா முழுவதும் பண்டிகைக்கால உணவுகளும் விலங்குகளுக்கான சிறப்பு உணவுகளும் கிடைக்கும்.
கூடுதல் தகவலுக்கு, www.mandai.com/Zootopia2ஐ பார்வையிடவும். வரும் நவம்பர் 27ஆம் தேதி முதல் திரையரங்குகளில் டிஸ்னியின் ‘Zootopia 2’ஐ பார்த்து மகிழலாம்.

