நெகிழி (Plastic) என்பது இன்று நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டது. குடிநீர் புட்டிகள் முதல் உணவுப் பொட்டலங்கள் வரை, நெகிழி இல்லாத உலகை நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு அதன் பயன்பாடு பெருகியுள்ளது. ஆனால், இந்த எளிதான பயன்பாட்டிற்குப் பின்னால், உலகம் எதிர்நோக்கும் மிகப் பெரிய சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார ஆபத்துகள் மறைந்துள்ளன.
நெகிழி மட்காத ஒரு பொருள். மண்ணில் புதைக்கப்பட்டாலும் கடலில் வீசப்பட்டாலும் அது பல நூறு ஆண்டுகளுக்கு அப்படியே இருக்கும். அந்த நெகிழிகளால் நிலமும் நீரும் மாசடைந்து அதனால் ஏற்படும் விளைவுகளை விரிவாகக் காணலாம்.
மேலும் வருங்காலத்தில் நீங்கள்தான் உலகை ஆளப்போகிறீர்கள். நீங்கள் முடிவெடுத்தால் இந்த நெகிழிப் பயன்பாட்டை முறியடிக்கலாம். இதன் மூலம் உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் நலமான வாழ்கைக்குக் கொண்டு செல்லலாம்.
“நெகிழியால் அழியும் ஒரு பறவையின் இறகில், உங்கள் எதிர்காலம் பொறிக்கப்பட்டுள்ளது. நெகிழியைத் தவிர்ப்போம், பறவைகளைப் பாதுகாப்போம்.”
சுற்றுச்சூழல் ஆபத்துகள்
நில, நீர் மாசுபாடு
மக்கும் தன்மை அற்ற நெகிழிகள் நிலத்தில் பல ஆயிரம் ஆண்டுகள் அப்படியே இருப்பதால், நிலத்தின் வளத்தையும், நீர்நிலைகளையும் மாசுபடுத்துகின்றன.
நீர்வாழ் உயிரினங்களின் பாதிப்பு
நாம் உணவுகளை நெகிழிகளில் வாங்கி வந்து அவற்றை அரைகுறையாக உண்டுவிட்டு கடற்கரைகளில் தூக்கி வீசுகிறோம். அவை பின்னர் காற்று மூலமாகவோ அல்லது மழை நீர் மூலமாகவோ அடித்துச் செல்லப்பட்டு அவை கடலில் கலக்கின்றன. நீர்வாழ் உயிரினங்கள் அந்த நெகிழிகளில் இருக்கும் உணவினால் ஈர்க்கப்பட்டு அவற்றுக்கு கை இல்லாததால் முழுவதுமாக விழுங்குகின்றன. அவற்றுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் நம்மைப்போல மருத்துவர்களைப் போய் பார்க்க முடியாது அல்லவா? நாளடைவில் அவற்றுக்கு வயிற்று வலி ஏற்பட்டு இறக்க நேரிடும். யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத அந்த உயிரினங்களுக்கு நாம் மறைமுகமாக தீங்கு இழைக்கிறோம் என்பதை உணரலாம்.
ஒரு துளி நீர் கூட ஒரு கடலை உருவாக்கும். அதுபோல, நீங்கள் தூக்கி எறியும் ஒரு சின்ன நெகிழி கூட, இந்த உலகைப் பாதிக்கும். அதைத் தவிர்ப்போம்.
வனவிலங்கு பாதிப்பு
நீர் காற்றாலும், மழையாலும் மாசு அடைவதுபோல நிலத்தில் நாம் வீசும் நெகிழிகளை ஒன்று சேர்த்து குப்பைகளாக குவிக்கிறார்கள். உணவு தேடி அலையும் விலங்குகள் அவற்றுக்கும் கை இல்லாததால் பிரித்து உண்ண முடியாமல் அப்படியே நெகிழிகளை உணவாக உட்கொள்கின்றன. அதனால் அவை நாளடைவில் இறக்க நேரிடுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
உங்கள் கைகளில் இருக்கும் ஒவ்வொரு நெகிழிப் பொருளும், ஓர் உயிரினத்தின் உணவாக மாறலாம். இயற்கையைப் பாதுகாப்பது உங்கள் கையில் உள்ளது.
நுண்நெகிழிகள்
பெரிய நெகிழிப் பொருள்கள் உடைந்து கண்ணுக்குப் புலப்படாத நுண் நெகிழிகளாக சிறு சிறு துகள்களாக மாறி கடலில் கலக்கின்றன. நீர் வாழ்வன சுவாசிக்கும்போது அந்த நுண்துகள்கள் அவற்றின் சுவாசம் வழியாக மீன்களின் வயிற்றுக்குள் செல்லும். பின்னர் நாம் அந்த மீன்களை வாங்கி உணவாக உட்கொள்ளும்போது மனிதர்களும் பாதிக்கப்படுவார்கள்.
மனிதநல பாதிப்புகள்
நெகிழிப் பொருள்கள் நச்சுத்தன்மையை கொண்டுள்ளதால், காற்று, நீர், நிலத்தை மாசுபடுத்துகின்றன. இந்த மாசடைந்த நீர், காற்று, உணவு வழியாக நச்சுத்தன்மை மனிதர்களின் உடலினுள் நுழைந்து பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கின்றன.
உலகளாவிய நெருக்கடி
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பல மில்லியன் டன்கள் நெகிழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நெகிழிகளில் பெரும்பகுதி ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுகின்றன. இந்த போக்கு நீடித்தால், 2060ஆம் ஆண்டுக்குள் நெகிழிகளின் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இது உலகளாவிய சுற்றுச்சூழல் நெருக்கடியை மேலும் அதிகரிக்கும்.
நாம் எறியும் ஒவ்வொரு நெகிழிப் பொருளும், பூமியில் அழியாமல் பல நூறு ஆண்டுகள் இருக்கும். இந்த பூமியில் நெகிழி அல்ல, நாம் தான் நிரந்தரமாக இருக்க வேண்டும்.
தீர்வு:
இந்த ஆபத்துகளைத் தவிர்க்க, நாம் உடனடியாக நெகிழிப் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைத்துக்கொள்ள வேண்டும். நீங்களோ அல்லது குடும்பத்தினரோ கடைக்குச் செல்லும்போது ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்குப் பதிலாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணிப் பைகள், காகிதப் பைகள், எஃகு புட்டிகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களைப் பயன்படுத்தலாம்
குறைத்தல் (Reduce): தேவையற்ற நெகிழிப் பொருள்களை வாங்குவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
மறுசுழற்சி (Recycle): பயன்படுத்தப்பட்ட நெகிழிப் பொருள்களைச் சரியான முறையில் மறுசுழற்சிக்கு அனுப்பலாம்.நெகிழிகளின் பயன்பாட்டைத் தவிர்ப்பது, மண்ணில் மக்கும் தன்மை கொண்ட மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்துவது, நெகிழிப் பொருள்களை மறுசுழற்சி செய்வது மூலம் வருங்காலத்தில் ஒரு பாதுகாப்பான உலகை உருவாக்கலாம்.
நெகிழியை ‘வேண்டாம்’ என்று சொல்வது, நம் புவியின் நன்மைக்காக நீங்கள் எடுக்கும் முதல் படி. இனி இந்த நெகிழி இல்லா உலகத்தை உருவாக்குவோம் என்று உறுதிகொள்ளுங்கள் மாணவர்களே!