எங்கள் ஜிங் ஷான் தொடக்கப்பள்ளியில் பொங்கல் கொண்டாட்டங்கள், போகிப் பண்டிகையோடு கோலாகலமாகத் தொடங்கின.
முதல் நாள் வகுப்பில், எங்கள் தமிழ் ஆசிரியர் பழைய தேவையற்ற பொருள்களைத் தூக்கி எறியும் முன், அவற்றை எப்படி மறுபயனீடு செய்யலாம் என்பதையும் அதனால் விளையும் நன்மைகளையும் மிக அழகாக விளக்கினார்.
தைப்பொங்கல் நாளன்று, நாங்கள் அனைவரும் பொங்கல் பற்றிய சிறப்புக் காணொளியைக் கண்டுகளித்தோம்.
பிறகு, கரும்புத் க் கொத்தைச் சுற்றிப் பாட்டுப் பாடி, உற்சாகமாக நடனமாடினோம். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகச் சுடச்சுட சர்க்கரைப் பொங்கல், வடையோடு சுண்டல் ஆகியவை வழங்கப்பட்டன. அவை மிகவும் ருசியாக இருந்தன.
மறுநாள், மாட்டுப் பொங்கல் அதன் தொடர்பான ஜல்லிக்கட்டு காணொளிகளைப் பார்த்தோம். பின்னர் அது தொடர்பான ஒரு பயிற்சித்தாளையும் செய்தோம்.
உழவர்கள் பயிரிடும் பலவகையான நவதானியங்களையும் அவற்றின் பயன்களையும் அறிந்துகொண்டு, அவற்றை வகைப்படுத்தியது எங்களுக்குப் புதிய அனுபவமாக இருந்தது.
மேலும், தொடக்கநிலை ஒன்று, இரண்டாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் அச்சுகளைக் கொண்டு அழகிய மாக்கோலமிட்டு மகிழ்ந்தனர்.
மூன்றாம் நாள் கொண்டாட்டம் இன்னும் சிறப்பாக இருந்தது!
பள்ளித் திடலுக்கு அருகே இருந்த மரக்கிளையில் தொங்கவிடப்பட்டிருந்த உறியை அடித்து, உடைத்து விளையாடினோம்.
பிறகு, இரண்டு குழுக்களாகப் பிரிந்து கபடி விளையாடியது மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.
நாங்கள் வீட்டிற்குச் செல்லும் முன், ஆசிரியர் எங்களுக்குத் தித்திக்கும் கரும்புத் துண்டுகளை வெட்டிக் கொடுத்தார். அதை நான் வீட்டிற்கு எடுத்துச் சென்று என் குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட்டேன்.
இந்த ஆண்டு பொங்கல் விழா மறக்க முடியாத இனிமையான அனுபவமாக அமைந்தது.
ஆதர்ஷ், தொடக்கநிலை 5, ஜிங் ஷான் தொடக்கப்பள்ளி.

