மாணவர்கள், சிறுவர்கள், சுற்றுப்பயணிகள் உள்ளிட்ட அனைவரும் பொங்கல் பாரம்பரியம் பற்றி தெரிந்துகொள்ளும் நோக்கில் இந்திய மரபுடைமை நிலையத்தில் பொங்கல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
ஜனவரி 11, 12ஆம் தேதிகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் சிறுவர்கள் பெரியவர்கள் அனைவரும் குதூகலத்துடன் பங்கேற்றனர்.
சிறுவர்களுக்கான பொங்கல் பானை படம் போட்ட சிறு சாக்குப் பைகளில் வண்ணம் தீட்டுதல், முகங்களில் கோலம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
பொங்கல் பானை, மாடுகள், நெற்பயிர்கள் என கிராமத்து வாழ்வைக் கண்முன் நிறுத்தும் வண்ணம் அலங்காரங்கள் இடம்பெற்றன.
களரி அகடமி மாணவர்களின் சிலம்பாட்டம், சிறுவர்களின் கோலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பல நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.
நான்கு வயதுள்ள சிறுவர்களுக்கு எளிய முறையில் பொங்கல் பானை, செய்முறை விளக்கங்கள் கொண்ட நடவடிக்கை புத்தகமும், எட்டு வயதுள்ள சிறுவர்களுக்கு கூடுதல் தகவல்களுடன் கூடிய நடவடிக்கை புத்தகமும் வழங்கப்பட்டன.
பெற்றோருடனும் நண்பர்களுடனும் பங்கேற்ற மாணவர்கள் அந்தப் புத்தகத்திலுள்ள நடவடிக்கைகளை குழுவாகச் செய்து மகிழ்ந்தனர்.
வண்ணச் சேலைகள், பிற இந்தியப் பாரம்பரிய உடைகள், நகைகள், அலங்காரப் பொருள்கள், சிற்றுண்டி வகைகள் விற்பனை செய்யும் அங்காடிகளும் இடம்பெற்றன.
தொடர்புடைய செய்திகள்
விழாவில் இடம்பெற்ற 20 அங்காடிகளை ஏற்பாடு செய்தவர் திருவாட்டி சிவசங்கரி. அவர், “இந்திய மக்களின் உடைகள், பிற பழக்கவழக்கங்களை அனைவரும் பார்க்கவும், அணிந்து மகிழவும் ஏதுவாக இந்த அங்காடிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதுடன், இந்திய சமூக சிறு தொழில் முனைவோருக்கு உதவுகிறது என்பதில் பெருமை,” என்றார்.
எட்டாம் வகுப்பில் பயிலும் ஆருஷ் புன்னகையுடன் வண்ணம் தீட்டினார். அவர் தனது தாயாருடன் அங்கு நேரம் செலவிடுவது மகிழ்ச்சியளிப்பதாகச் சொன்னார்.
துவாஸ் பகுதியிலிருந்து வந்திருந்த சிறுமி யாழிசை நாட்டுப்புற நடனங்களைக் கண்டு ரசித்தார்.
தொடக்கநிலை நான்காம் வகுப்பில் பயிலும் மாணவர் ஹருண், “பொங்கல் குறித்து தெரியாதவற்றைத் தெரிந்து கொண்டேன். இந்தப் புத்தகத்தில் இருக்கும் பொங்கல் பானை படம் அழகாக உள்ளது. அதில் வண்ணம் தீட்டுவது பிடித்திருக்கிறது,” என்றார்.
ரிவர்சைடு தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி திவாஷினி, “பொங்கல் நிகழ்ச்சிக்காக பாரம்பரிய உடையில் வந்துள்ளோம். முகத்தில் கோலங்கள் வரைந்து கொண்டது, நண்பர்களுடன் விளையாடுவதில் மகிழ்ச்சி”, என்றார்.