தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சூச்சின் பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டின் முதல் நிகழ்வாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழ் வகுப்பறைக்குள் மட்டும் முடங்கிவிடாமல், பள்ளி முழுவதிலும் மகிழ்ச்சி பொங்க, நண்பர்களுடன் இணைந்து அவர்கள் கொண்டாடியமுறை பாராட்டும்படி இருந்தது.
பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐந்தாம் வகுப்பு மாணவிகளான கஷிகா, தேஜா இருவரும் பொங்கல் விழாவின் சிறப்பம்சங்களையும் தமிழர் பண்பாட்டின் மேன்மையையும் அழகாக எடுத்துரைத்தனர்.
இடைவேளை நேரத்தில் வைக்கப்பட்டிருந்த பொங்கல் கண்காட்சியை மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
மாணவர்கள் ஒருவருக்கொருவர் ‘பொங்கலோ பொங்கல்’ என வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டது கண்டவர் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது.
பாலர் பள்ளி மழலைகளும் தங்கள் தாய்மொழி வகுப்பின் போது இந்தக் கண்காட்சியைப் பார்த்து வியந்தனர்.
மாணவர்களின் படைப்பாற்றலும் விழாவில் மிளிர்ந்தது.
தொடக்கநிலை கீழ்வகுப்பு மாணவர்கள் பொங்கல் பானை ஓவியங்களுக்கு வண்ணச்சாயம் தீட்டி மகிழ்ந்தனர்.
மூன்றாம், நான்காம் வகுப்பு மாணவர்கள் தங்கள் வீடுகளில் குடும்பத்தினருடன் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் வைத்த அனுபவங்களைப் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் எடுத்து வந்து வகுப்பில் கலந்துரையாடினர்.
தொடக்கநிலை மேல்வகுப்பு மாணவர்கள் தங்கள் கற்பனைத் திறனையும் புத்தாக்கச் சிந்தனையையும் பயன்படுத்தி முப்பரிமாணக் (3D) கலைப்படைப்புகளை உருவாக்கினர்.
பொங்கல் பண்டிகைக்குத் தயாராவதுமுதல் பானையில் பொங்கல் பொங்குவதுவரை அனைத்து நிகழ்வுகளையும் அந்தப் படைப்புகளில் கண்கூடாகக் காண முடிந்தது.

