பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரையும் கவர்ந்திழுக்கும் லபுபு பொம்மை அண்மையில் பெய்ஜிங்கில் 192,158 சிங்கப்பூர் வெள்ளிக்கு ஏலம் போய் பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அப்படி என்னதான் அந்த லபுபு பொம்மையிடம் இருக்கிறது? ஏன் இவ்வளவு விலை கொடுக்கவேண்டும்? லபுபு பொம்மையின் வரலாறு என்ன என்று தெரியவேண்டுமா?
சீனாவின் ஹாங்காங்கில் பிறந்த கலைஞர் காசிங் லூங். இவர் எழுதிய, நோர்டிக் நாட்டுப்புறக் கதைகளால் ஈர்க்கப்பட்ட, விசித்திர படப் புத்தகத் தொடரான ‘தி மான்ஸ்டர்ஸ்’ என்ற கதையின் நட்சத்திர கதாபாத்திரம் லபுபு.
அகன்ற கண்கள், முயல் போன்ற காதுகளுடன், சிரிக்கும் பற்கள் என குழந்தைகளை வெகுவாகக் கவரும் விதத்தில் லபுபு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்தத் தொடரில் லபுபுவின் கதாபாத்திரம் மிகவும் கனிவான பெண்ணாகவும் எப்போதும் பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவளாகவும் சித்திரிக்கப்பட்டு இருக்கும். மேலும் எப்போதும் குறும்புத்தனம் செய்யக்கூடிய இளகிய மனம் உடையதாகவும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.
அதனால் மேற்கத்திய நாடுகளில் இந்த பொம்மை மிகவும் பிரபலம் அடைந்தது. லபுபு பொம்மை இணையத்தில் மிகவும் பிரபலமானது. இது இளம் தலைமுறையிடம் அதிக வரவேற்பை பெற்றது.
இந்தக் கதாபாத்திரத்தைக் கொண்டு சீனாவைச் சேர்ந்த வாங் நிங் என்பவர் ‘Pop mart’ என்ற பொம்மை தயாரிக்கும் நிறுவனத்துடன் சேர்ந்து இந்த பொம்மையை அறிமுகப்படுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த பொம்மையை வாங்க உலகம் முழுவதும் மக்கள் போட்டி போடும் அளவிற்கு விற்பனை அதிகரித்தது.
அமெரிக்கா மற்றும் சீனாவில் இந்த பொம்மையை வாங்க மக்கள் மணிக்கணக்கில் காத்துக் கிடந்தனர்.
இதன் விற்பனை அதிகரிக்க முக்கிய காரணம், ‘Blind box’ விற்பனை முறையாகும். இதை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எந்த நிறத்திலான லபுபு பொம்மை வந்திருக்கிறது என்பது தெரியாது. அந்த பாக்ஸை திறந்து பார்க்கும்போதுதான் அது ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.
அதனால் அவர்கள் விரும்பிய பொம்மையை வாங்க நிறைய பொம்மை இருக்கும் பெட்டிகளை வாங்கத் தொடங்கினர். இதில் ‘Secret’ என்னும் லபுபு கிடைப்பது அரிது என்பதால் அதை வாங்குவதற்கான போட்டியே மக்களிடத்தில் அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில் ஏறக்குறைய 4 அடி உயரம் உள்ள லபுபு பொம்மையை புளூம்பர்க் நிறுவனம் ஏலமிட்டது. இதில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இணையம் மூலமும் பங்கேற்றனர். இறுதியில் அந்த பொம்மை 192,158 வெள்ளிக்கு ஏலம் போனது. உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போனது இந்த லபுபு பொம்மைதான் என்கிறது இந்த ஏலத்தை நடத்திய நிறுவனம்.