அரசன் தனக்கு அறிவான முதலமைச்சர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க எண்ணினார். அதுபற்றி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பில், “என்னிடம் ஒரு பெரிய பூட்டு இருக்கிறது. கணித முறைப்படி வடிவமைக்கப்பட்ட அப்பூட்டை திறக்கவேண்டும். அந்தப் பூட்டைத் திறந்துவிட்டால் அவருக்கு முதல் அமைச்சர் பதவி கிடைக்கும். அப்படித் திறக்க முடியாதவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்,” என்று இருந்தது.
அதைக் கேள்விப்பட்ட பலரும் அரசரே பூட்டைப் பற்றி பெருமையாக பேசி இருப்பதால் அந்தப் பூட்டை யாராலும் திறக்க முடியாது. பதவிக்கு ஆசைப்பட்டு அரண்மனைக்குச் சென்று தண்டனை பெற யாரும் விரும்பவில்லை.
இந்த அறிவிப்பை அந்த நாட்டிற்கு வந்த மூவர் கேள்விப்பட்டனர். அவர்களில் ஒருவர் தெனாலிராமன். முதலமைச்சர் ஆகும் ஆசையில், அவர்கள் பூட்டு பற்றிய ஓலைச்சுவடிகளையும் கணிதம் பற்றிய குறிப்புகளையும் தேடினார்கள். எதுவும் கிடைக்கவில்லை. ஒருவர் மட்டும், இந்த அறிவிப்பில் ஒரு மர்மம் இருப்பதாக எண்ணினார். அதைப்பற்றி மட்டும் யோசிக்கலானார். மூவரும் தன்னம்பிக்கையுடன் அரசரைப் பார்க்க அரண்மனைக்கு வந்திருந்தனர்.
காவலரும் மூவர் பூட்டைத் திறக்கும் போட்டியில் கலந்துகொள்ள வந்திருப்பதாக அரசரிடம் தெரிவித்தார்.
அரசரும் அவர்களை அழைத்து வா என்று கட்டளை இட்டார்.
அரசர் ஒரு பூட்டை ஒரு மேடையில் வைத்திருந்தார். அந்தப் பூட்டைக் காண்பித்து, “இந்தப் பூட்டைத்தான் திறக்கவேண்டும். முயற்சி செய்யுங்கள்,” என்று கூறினார்.
அமைச்சர் பதவிக்கு வந்த மூவரிடையே படபடப்பு அதிகரித்தது. ஆனால் இருவருக்கு பூட்டை எப்படி திறப்பது என்று புலப்படவில்லை. அதனால் தோல்வியை ஒப்புக்கொண்டனர். அவர்களை உடனே சிறையில் அடைத்தார் அரசர்.
தொடர்புடைய செய்திகள்
மூன்றாவதாக நின்றிருந்த தெனாலிராமன், ‘இந்தப் போட்டியில் ஏதோ மர்மம் இருக்கிறது,’ என்று நினைத்த அவர் பூட்டின் அருகே சென்று பூட்டைப் பார்த்தார். பூட்டு பூட்டப்படவில்லை. சாவியே இல்லாமல் எந்த கணக்கும் செய்யாமல் பூட்டைத் திறந்தார். அரசர் அவரையே அமைச்சர் ஆக்கினார்.
பிரச்சினையைத் தீர்க்கவேண்டுமானால் முதலில் பிரச்சினையை புரிந்துகொள்ளவேண்டும். மனம் பதற்றமில்லாமல் ஆற அமர சிந்திக்கவேண்டும். அப்போதுதான் பிரச்சினைக்குத் தீர்வானது கிடைக்கும் என்பதை அறிவீர்களா மாணவர்களே!