கிளார்க் கீ எம்ஆர்டி நிலையம் அருகேயுள்ள வடிகால் குழாயில் சிக்கியிருந்த மலைப்பாம்பு, சுமார் ஐந்து மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) தேசிய பூங்காக் கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பாம்பைப் பாதுகாப்பாக மீட்டனர்.
ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட காணொளியில், வடிகாலின் குறுகிய குழாயில் ஏறக்குறைய இரண்டு மீட்டர் நீளமுள்ள பாம்பின் முன்பகுதி சிக்கியிருந்ததைக் காண முடிந்தது. அந்தப் பதிவை வெளியிட்டிருந்த பிரஷாந்த குமார் மொகந்தி, காலை 11 மணியளவில் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.
“எனக்கு சிறிது கவலையாக இருந்தது. பாம்புக்காக பிரார்த்தனை செய்தேன்,” என்றார் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த அந்த ஊழியர்.
கான்கிரீட் பாளத்தில் பல்வேறு இடங்களில் துளையிட்டு மீட்கப்பட்ட பாம்பு பலவீனமாகக் காணப்பட்டது.
தேசிய பூங்காக் கழகத்தின் அதிகாரிகளை கதாநாயகர்களாக வருணித்த பிரஷாந்த குமார், கட்டுமான ஊழியர்கள் பாம்பை விடுவிக்க உதவியதையும் பாராட்டினார்.
இச்சம்பவத்தைக் கண்டவர்கள், பாம்பு காப்பாற்றப்பட்டதை வரவேற்றதாக அவர் தெரிவித்தார்.