தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பறவைகளுக்கு உணவு அளிக்கக்கூடாது என்பதன் காரணம்

2 mins read
450586ab-a2f0-45ae-a5cc-e2f22150610f
பெலிகன் பறவைகள். - படம்: ஊடகம்

அமெரிக்காவின் புளோரிடா கடற்கரை ஓரத்தில் பல ஆயிரக்கணக்கான பெலிகன் பறவைகள் வாழ்ந்து வந்தன. அந்தப் பகுதியில் வாழ்ந்த மீனவர்கள் அந்தப் பறவைகளுக்கு நிறைய மீன்களை உணவாகப் போட்டு வந்தார்கள்.

அவர்கள் கொடுத்த மீன்களைத் தின்று வாழ்ந்த பெலிகன் பறவைகள் எந்த முயற்சியும் இல்லாமல் சுலபமாக உணவு கிடைத்ததால் சுயமாக மீன்களைப் பிடிக்காமல் வாழ்ந்து வந்தன.

அவற்றின் அடுத்த தலைமுறையும் மீனவர்கள் வழங்கிய மீன்களை உண்டு வாழ்ந்தன. காலப்போக்கில் அவற்றிற்கு கடலில் சென்று மீன்கள் பிடிக்கவேண்டும் என்பதே தெரியாமல் போனது.

அங்கு வாழ்ந்து வந்த மீனவர்கள் ஒருநாள் அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்குச் சென்றுவிட்டனர். அங்கு சுகமாக வாழ்ந்து வந்த பெலிகன் பறவைகளுக்கு உணவு கிடைக்கவில்லை.

அவற்றுக்கு கடலில் சென்று மீன் பிடிக்கவேண்டும் என்பதே தெரியாமல் போனதால் உணவு கிடைக்காமல் நூற்றுக்கணக்கான பறவைகள் பசியால் மடிந்தன.

அதைப் பார்த்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பொதுமக்களும் ‘சுயமாக மீன் பிடித்துச் சாப்பிட இந்தப் பறவைகளுக்கு எப்படிக் கற்றுக் கொடுப்பது?’ என்று தெரியாமல் தவித்தனர்.

இந்நிலையில் பறவையியல் ஆய்வாளர் ஒருவர், அலாஸ்காவுக்கு விமானத்தில் பறந்து சென்று அங்கு சுயமாக மீன்களைப் பிடித்து வாழ்ந்து வரும் சில பெலிகன் பறவைகளைக் கொண்டு வந்து, பசியால் மடிந்து கொண்டிருக்கும் புளோரிடா பெலிகன்களுடன் விட்டார்.

அலாஸ்கா பெலிகன்கள் கடலுக்குள் சென்று சுலபமாக மீன்களைப் பிடித்து சாப்பிடுவதைக் கண்ட புளோரிடா பெலிகன்கள் கடலில் இறங்கி மீன்களை வேட்டையாடத் தொடங்கின.

நாமும் அடுக்குமாடித் தளத்தில் காணப்படும் புறாக்களுக்கும் குருவிகளுக்கும் காக்கைகளுக்கும் உணவளித்தால் அவை பறந்து சென்று உணவு தேடும் பழக்கத்தை விட்டுவிட்டு யாராவது உணவு கொடுப்பார்கள் என்று காத்திருக்கும் நிலை ஏற்படும்.

உணவு கிடைக்காத நேரத்தில் அவை மடிய வாய்ப்பு அதிகம் இருப்பதால்தான் ஆங்காங்கே பறவைகளுக்கு உணவு அளிக்காதீர்கள் என்று தகவல் பலகை வைக்கப்பட்டு இருக்கின்றன என்பதை அறிவீர்களா மாணவர்களே!

குறிப்புச் சொற்கள்