தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ்மொழி கற்றலைப் பிள்ளைகளிடத்தில் ஊக்குவிக்க பெற்றோரின் பங்கு

3 mins read
a532f85c-2b68-4c94-9126-a9bb9e8f0fef
சிறுவர்கள் வட்டமாக அமர்ந்து கலந்துரையாடுகிறார்கள். - படம்: சிங்கை நாமக்கல் சங்கம்
multi-img1 of 4
பேராசிரியர் முனைவர் காதர் இப்ராஹிமுடன் திருமதி ஜெயசுதா சமுத்திரன், திரு குமரன் ராசப்பன் கலந்துகொண்ட கேள்வி பதில் அங்கம்.
பேராசிரியர் முனைவர் காதர் இப்ராஹிமுடன் திருமதி ஜெயசுதா சமுத்திரன், திரு குமரன் ராசப்பன் கலந்துகொண்ட கேள்வி பதில் அங்கம். - படம்: சிங்கை நாமக்கல் சங்கம்

பல பெற்றோர்கள் வீட்டில் தங்களது பிள்ளைகளிடம் தமிழ் பேசாமல் இருந்தது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் வழி புரிந்துகொண்டனர்

பாலர் பள்ளி சிறுவர்களுடன் தொடக்கப்பள்ளி மாணவர்கள் தமிழ்மொழியைப் பேசுவதற்கு ஊக்குவிக்கும் வகையில் அவர்களது பெற்றோருக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஒரு கலந்துரையாடல் ஏப்ரல் 26ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது.

‘பிள்ளைகளின் தமிழ்மொழி கற்றலில் பெற்றோர்களின் பங்கு’ என்ற தலைப்பில் இக்கலந்துரையாடல் சிங்கை நாமக்கல் சங்கத்தின் செயலாளர் திருமதி குணவதி நல்லதம்பி, இளையர் குழு மற்றும் தமிழாசிரியர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.  

இக்கலந்துரையாடல் சிங்கை நாமக்கல் சங்கத்தால் முதன் முறையாகத் தமிழ்மொழி மாதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழு தலைவர் மற்றும் சங்கத்தின் செயலாளர், திருமதி குணவதி நல்லதம்பி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிகழ்வில் பிரபலமான பேச்சாளரும் எழுத்தாளருமான பேராசிரியர் முனைவர் காதர் இப்ராஹிம் ஏ ஆர் சிறப்பு பேச்சாளராகக் கலந்துகொண்டார். அவர் தமிழ்மொழியின் சிறப்பைப் பற்றியும், அதை ஏன் இளம் வயதிலிருந்தே பிள்ளைகளிடம் போதிக்கவேண்டும் என்பதைப் பற்றியும் பல தகவல்களை பெற்றோரிடம் பகிர்ந்துகொண்டார்.

“தமிழ்மொழி என்பது நமது தாய்மொழி மட்டுமல்ல, அது நமது மரபுடன் இணைந்தது. எனவே, பெற்றோர் ஆகிய நீங்கள் உங்களது பிள்ளைகளுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக இருந்து, வீட்டில் தமிழில் பேசி, சிறு சிறு விஷயங்களை அவர்களுக்கு தமிழில் கற்பிக்க வேண்டியது உங்களது கடமை,” என்று முனைவர் காதர் இப்ராஹிம் கூறினார். 

கலந்துரையாடலின் நிறைவில் கேள்வி பதில் அங்கத்தின்போது இளம் பெற்றோர்களான திருமதி ஜெயசுதா சமுத்திரன், திரு குமரன் ராசப்பன் ஆகியோர் முனைவர் காதர் இப்ராஹிமுடன் இணைந்து கேள்விகளுக்கு பதிலளித்தனர்.  ‘தமிழ் பேசாத பணிப்பெண்கள் வீட்டில் இருக்கும்போது எப்படி பிள்ளைகளை தமிழில் பேச ஊக்குவிப்பது?’

‘தமிழ்மொழியை தேர்வு நோக்கில் பார்க்காமல், அதை எப்படி ஒரு மகிழ்வூட்டும் மொழியாக பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்வது?’ போன்ற கேள்விகளுக்கு மூன்று சிறப்பு பேச்சாளர்களும் தெளிவாக விளக்கமளித்தனர்.

ஆங்கிலத்தைப்போல தமிழை எப்படி சிறு வயதிலிருந்தே பிள்ளைகளிடம் விதைப்பது என்ற கேள்விக்கு திருமதி ஜெயசுதா சமுத்திரன், “பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே வீட்டில் தங்கள் பிள்ளைகளிடம் தமிழில் உரையாடி, தமிழ் உலகத்தை உருவாக்க வேண்டும்,” என்று பதிலளித்தார்.

“இந்நிகழ்ச்சியின் மூலம் நான் தமிழ்மொழியை சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்குக் கற்பிப்பதன் அவசியத்தைப் புரிந்துகொண்டேன். நான் எனது மகனுக்குத் தமிழ் மீது இருக்கும் ஆர்வத்தை அதிகரிக்க நிறைய தமிழ் கதைகளைச் சொல்வேன். நான் அவனுடைய புத்தாக்க சிந்தனையை மேம்படுத்த அவனைக் கதைகள் எழுத வைப்பேன்,” என்று பெற்றோரில் ஒருவராகிய திருமதி இளம்பிறை மணிமாறன்,34 கூறினார்.

“நானும் புதிய, தூயத் தமிழ் வார்த்தைகளின் அர்த்தங்களைக் கற்றுக்கொண்டு எனது மகனுக்கும் அவற்றைக் கற்பிக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். தமிழ்மொழி நிலைத்து நிற்பதில் பெற்றோருக்கு ஒரு பெரும் பங்கு உள்ளது என்பதை நான் இந்நிகழ்வின் வழி புரிந்துகொண்டேன்,” என்றார் திருமதி கல்பனா பாலச்சந்திரன்,34.

“பெற்றோர்கள் ஆகிய நாம் வேலையிடங்களில் ஆங்கிலத்தில் பேச வேண்டிய கட்டாயம் இருப்பதால், அது ஒரு பழக்கமாக மாறிவிடுகிறது. ஆகவே, பெற்றோர்கள்தான் அந்த முதல் படியை எடுத்து, வீட்டில் ஒரு தமிழ் பேசும் சூழலை உருவாக்க வேண்டும்,” என்பதை திருமதி ராமாபிரியா பாலச்சந்திரன்,42 சொன்னார்.

குறிப்புச் சொற்கள்