கடலில் ஒரு வண்டியிலிருந்து குப்பைகளைக் கொட்டுகிறார்கள் சிலர். அந்தக் குப்பைகளில் உள்ள நச்சுவாயுவில் இருந்து சில கிருமிகள் உயிர்பெற்றன. கடலில் தொடர்ந்து குப்பைகளைக் கொட்ட கொட்ட, அதிலிருந்து கிருமிகள் அதிகரிக்கத் தொடங்கின. அவற்றிலிருந்து நச்சுவாயு வெளியேறத் தொடங்கியது. அதனால் கடல்நீர் மாசடையத் தொடங்கியது.
அந்தக் வித்தியாசமான கிருமிகளால் கடலில் வாழ்ந்த மீன்கள், ஆமைகள் போன்ற அனைத்து உயிரினங்களும் சுவாசிக்க முடியாமல் திணறின. கடலில் அவற்றுக்கான சூழல் இல்லாததால் அவை மடியத் தொடங்கின. கிருமிகள் அவற்றின் மேலும் படர்ந்து, மேலும் பலவிதமான கிருமிகளை உருவாக்கத் தொடங்கின. கடற்பரப்பில் உயிரினங்கள் மிதக்கத் தொடங்கின.
கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட கிருமிகள் கரையை அடைந்தன. அந்தக் கிருமிகள் கடற்கரையில் இருக்கும் குப்பைக்கூளங்களை நோக்கிச் சென்று அவற்றில் வாழத் தொடங்கின. கடற்கரையில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் நிரம்பி வழிந்தன. அந்த புதுக் கிருமிகளுக்கு குப்பைகள்தான் உணவாக இருந்தன.
உயிரினங்கள் இறப்பதைப் பார்த்த சிறுமி கவிதா கவலையுடன் அமர்ந்திருந்தாள். அப்போது அவளை நோக்கிப் பறந்து வந்த வண்ணத்துப்பூச்சி, “கவி, ஏன் கவலையுடன் காணப்படுகிறாய்?” என்று கேட்டது. உடனே, கவி, அந்தக் கிருமிகளால் மீனவர்கள் படும் துன்பத்தைக் கூறினாள். அதைக் கேட்ட வண்ணத்துப்பூச்சி, “உனக்கு ஒன்று தெரியுமா? அவற்றுக்கு உணவே குப்பைதான். நீங்கள் அதிகமான குப்பைகளைக் கடலில் கலக்கிறீர்கள். அதிலிருந்து உருவான அந்தக் கிருமிகள் தற்பொழுது கரைக்கு வந்திருக்கின்றன. அவை விரைவில் இங்கு மக்கள் கொட்டி இருக்கும் குப்பைகளைத் தேடிச் சென்று அதில் வாழத் தொடங்கும்,” என்று கூறி மறைந்தது.
அதைக் கேட்ட கவிதா பதறிப் போனாள். நச்சுக்கிருமிகள் பெருகினால் அனைவரும் மூச்சுவிட முடியாமல் இறக்க நேரிடும் என்பதை உணர்ந்தாள். அவள் கண்களில் கண்ணீர் பெருகியது. அவள் சிறிதும் தாமதிக்காமல் தன் தந்தையான மீனவர் தலைவர் மதிவாணனிடம் நடந்ததைக் கூறினாள். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதித்ததால் கவலையில் இருந்த அவருக்கு அதற்கான காரணம் புரியத் தொடங்கியது. அவர் உடனே மற்ற மீனவர்களை அழைத்து, உடனடியாகக் குப்பைக் கூளங்களை அகற்றி, தீயிட்டு எரிக்கச் சொன்னார். கவிதாவும் அவர் நண்பர்களுடன் இணைந்து ஊரைச் சுத்தம் செய்யத் தொடங்கினாள்.
மீனவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தனர். அவர்கள் ஊரிலிருந்த குப்பைகளைத் தீயிட்டு கொளுத்திச் சுத்தப்படுத்தியதுடன், கடலில் இனிக் குப்பைகளைப் போடக்கூடாது என்றும் தடை விதித்தனர். குப்பைகள் மறைந்தன. ஊரே சுத்தமானது. உண்ண உணவு இல்லாமல் கிருமிகள் அழியத் தொடங்கின. கடலிலும் குப்பைகளைக் கொட்டாததால் மீண்டும் மீன்கள் துள்ளிக் குதித்து நீந்தின. கவிதா மீண்டும் தன் நண்பனான வண்ணத்துப்பூச்சிக்கு நன்றி கூறினாள்.

