டேவிட் ஒரு சுட்டிப் பையன். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஓர் அழகான, மின்னும் சிவப்பு நிற மிதிவண்டி வேண்டும் என்பது அவனது மிகப்பெரிய ஆசை. அவன் எப்போதும் அந்த மிதிவண்டியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான்.
ஒருநாள் காகிதத்தில் அழகான சிவப்பு மிதிவண்டியை வரைந்தான். அதைத் தன் அறைச் சுவரில் ஒட்டி வைத்து அழகு பார்த்தான். அவனுடைய பெற்றோரிடம் அதைக் கேட்டு, தொந்தரவு பண்ண விரும்பாமல் தன் மனதிற்குள்ளேயே மிதிவண்டியை ஓட்டிச் செல்வதுபோல தினமும் நினைத்துக்கொண்டே தூங்கிவிடுவான்.
விடிந்தால் கிறிஸ்துமஸ். வெளியே கடும் குளிர் வாட்டியது. அவன் வீட்டிற்கு எதிரே இருக்கும் அன்பு என்ற சிறுவன் பெற்றோர் இல்லாமல் பாட்டியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு நல்ல போர்வை கூட கிடையாது. அதைப் பார்த்த டேவிட் தன் பெற்றோரின் அனுமதியுடன் வீட்டில் இருந்து நல்ல குளிரைத் தாங்கும் ஒரு போர்வையையும் கேக்கையும் எடுத்துச் சென்று அன்புவிடம் கொடுத்தான்.
அந்தப் போர்வையை அன்புவின் தோளில் போட்டு போர்த்திவிட்டான். குளிரில் நடுங்கிக்கொண்டு இருந்த அன்புவிற்கு டேவிட் கொடுத்த போர்வை இதமாக இருந்தது. டேவிட் தான் கொண்டு வந்திருந்த கேக்கையும் அவனுக்கு ஊட்டி விட்டான். டேவிட்டை அன்பு நன்றியுடன் பார்த்தான். அன்புவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
தன் நண்பன் அன்புவின் பசியையும் குளிரையும் போக்கிய மகிழ்ச்சியில் டேவிட் வீடு திரும்பினான். தன்னிடம் சிவப்பு மிதிவண்டி இல்லையென்றாலும், அவன் உள்ளம் இப்போது மிகவும் நிறைவாக இருந்தது.
அப்போது, வானத்தில் தன் பனிச்சறுக்கு வண்டியில் சென்று கொண்டிருந்த கிறிஸ்துமஸ் தாத்தா நடந்தவற்றைக் கவனித்துக்கொண்டு இருந்தார். டேவிட்டின் இரக்க குணத்தைப் பார்த்து அவர் மிகவும் நெகிழ்ந்து போனார். “இந்தச் சிறுவனுக்கு ஒரு சிறப்புப் பரிசு கொடுக்கவேண்டும்,” என்று அவர் முடிவு செய்தார்.
அவன் அறையைப் பார்த்தபோது, கதவில் டேவிட் வரைந்து ஒட்டி இருந்த மிதிவண்டியின் படம் அவரின் கண்ணில் பட்டது. நல்ல பரிசுதான் என்று மனதில் நினைத்துக்கொண்டார்.
மறுநாள் காலை கிறிஸ்துமஸ் வந்தது. டேவிட் கண்விழித்துப் பார்த்தபோது, அவன் படுக்கைக்கு அருகில் அவன் ஆசைப்பட்ட அதே மின்னும் சிவப்பு மிதிவண்டி நின்றது! ‘கிறிஸ்துமஸ் தாத்தா வந்திருக்கிறார். அவர்தான் தனக்கு இந்த மிதிவண்டியைக் கொடுத்து இருக்கிறார்,’ என்று நினைத்து மகிழ்ச்சியில் திளைத்தான். அவனுடைய பெற்றோரும் மகிழ்ந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
டேவிட் உடனே அன்பைத் தேடிச் சென்று தன்னுடைய மிதிவண்டியைக் காட்டினான். அன்று முழுவதும் இருவரும் மாறி மாறி மிதிவண்டியை ஓட்டி மகிழ்ந்தனர். பிறருக்கு உதவுவதே உண்மையான கிறிஸ்துமஸ் என்பதை டேவிட் அன்று புரிந்து கொண்டான்.
கிறிஸ்துமஸ் என்பது வெறும் பரிசுகளைப் பெறுவது மட்டுமல்ல, பிறருக்குக் கொடுப்பதும் தான். உங்களிடம் இருக்கும் பொம்மைகளையோ, இனிப்புகளையோ அல்லது உடைகளையோ தேவைப்படும் மற்ற சிறுவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துப் பாருங்கள். அவற்றைப் பெறும் அவர்களின் சிரிப்பில் தான் உண்மையான கிறிஸ்துமஸ் இருக்கிறது.

