மாணவர்களுக்கு கற்றல் செறிவூட்டலாக அமைய திருவாட்டி சாரதா ராமன் ‘பீல்’ கற்றல் முறையை அணுகுகிறார். எழுதும் உத்திகள், கதை சொல்வது, நாடகம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியுள்ள இந்த பீல் கற்றல் முறையானது தமிழ்மொழி மீதும் கலாசாரம் மீதும் மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்க வழிவகுக்கும் என்பது அவரது நம்பிக்கை.
மேலும், மாணவர்களுக்கிடையே இருவழி கற்றலை ஊக்குவிக்க திருவாட்டி சாரதா ‘டாக் மூவ்ஸ்’ எனும் கலந்துரையாடல் தளத்தையும் வழிநடத்தி வருகிறார். அதோடு நிறுத்திவிடாமல், சமூகத்துக்கு கைகொடுக்கும் விதமாக அவர் கல்வியில் மெதுவாக முன்னேற்றம் காணும் மாணவர்களுக்கு ஆதரவு அளித்தும் வருகிறார்.
“மாணவர்கள் பல விதங்களில் என்னிடம் நன்றி தெரிவிப்பார்கள். நான் அவர்களிடம் கவிதை அல்லது வாழ்த்தட்டைகளை எழுதித் தர கேட்பேன். அவர்கள் வாழ்த்தட்டையில் என் கண்களைக் கலங்க வைக்கும் அளவிற்கு எழுதியிருப்பார்கள். இது தான் எனக்கு கிடைக்கும் பெரிய பரிசு. இந்த விருது ஒரு பெரிய அங்கீகாரம். எனது பள்ளி எனக்கு தரும் பெரிய பாராட்டாகக் கருதுகிறேன்,” என்று புன்னகையுடன் தெரிவித்தார் ஊட்குரோவ் தொடக்கப்பள்ளி ஆசிரியர் திருவாட்டி சாரதா ராமன்.