தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொதுத் தேர்தல் 2025

3 mins read
823faabc-a995-4918-bf0a-86fc7889db23
கல்வி அமைச்சு. - கோப்புப் படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் மே 3ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

பொதுத் தேர்தலில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்து எடுப்பார்கள்.

இவர்கள் நாட்டின் ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாக இருப்பார்கள்.

இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று அழைக்கப்படுவார்கள். அதாவது, நாட்டை ஆளும் மன்றத்தின் உறுப்பினர்கள். அவர்களைத் தேர்வு செய்வதுதான் பொதுத் தேர்தல்.

தேர்தலில் ஒவ்வொரு தொகுதிக்கும் சிலர் போட்டி போடுவார்கள். போட்டி போடுபவர் வேட்பாளர் எனப்படுவார். வேட்பாளர்கள் ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். எதிலும் சேராமலும் இருப்பார்கள். கட்சி என்பது பலர் சேர்ந்து இருக்கும் ஓர் அமைப்பு. சிங்கப்பூரில் பல கட்சிகள் இருக்கின்றன.

மக்கள் தங்களுக்குப் பிடித்தவரைத் தேர்வு செய்வார்கள். அப்படித் தேர்வு செய்வது வாக்கு அளிப்பது என்று சொல்லப்படும்.

இவ்வாறு மக்கள் தேர்ந்து எடுப்பவர்களே நாட்டை ஆள்வது மக்கள் ஆட்சி எனப்படும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்வு செய்வார்கள். அவர்கள் எல்லாரும் ஒன்றாக கூடி நாட்டைப் பற்றி பேசும் இடம் நாடாளுமன்றம்.

சிங்கப்பூர் 1965ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அப்போதில் இருந்து இதுவரை 13 தேர்தல்கள் நடந்து உள்ளன. தற்பொழுது நடக்க இருப்பது 14வது பொதுத் தேர்தல். இந்தத் தேர்தலில் மக்கள்

சிங்கப்பூர் மொத்தம் 18 குழுத்தொகுதிகளாவும் 15 தனித் தொகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. மக்கள் தேர்ந்தெடுப்பவர் அந்தத் தொகுதிக்கும் பொறுப்பாக இருப்பார். தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்தி செய்வது, தொகுதியில் வசதிகளின் மேம்பாடு போன்றவற்றில் அவர் கவனம் செலுத்துவார்.

இப்படி மக்கள் தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களில் ஒருவரைப் பிரதமராகத் தேர்வு செய்வார்கள். பிறகு அவருக்கு நாட்டின் அதிபர் பதவி பிரமாணம் செய்து வைப்பார். பிரதமர் என்பவர் அரசாங்கத்தின் தலைவர். அவர் நாட்டை வழிநடத்துபவர்.

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருந்து பிரதமர் அமைச்சர்களைத் தேர்வு செய்வார். கல்வி, சுகாதாரம், நிதி, தற்காப்பு என்று ஒவ்வொரு துறைக்கும் பொறுப்பாக ஓர் அமைச்சர் இருப்பார். சிங்கப்பூரில் மொத்தம் 15 அமைச்சுகள் உள்ளன.

பிரதமர், துணைப் பிரதமர்கள், மூத்த அமைச்சர்கள், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், மூத்த துணை அமைச்சர்கள், மூத்த நாடாளுமன்றச் செயலாளர்கள், நாடாளுமன்றச் செயலாளர்கள் ஆகியோர் அடங்கியதை அரசாங்கம் என்று சொல்வோம்.

பொதுத் தேர்தலில் மக்கள் எல்லாரும் வாக்கு அளிக்க வேண்டும். 21 வயது ஆனதும் ஒருவர் வாக்கு அளிக்கலாம். மக்கள் சென்று வாக்கு அளிக்கும் இடம் வாக்களிப்பு நிலையம் என்று சொல்லப்படும்.

மே 3ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் கல்வி அமைச்சு மே 5ஆம் தேதியைப் பள்ளி விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.

நீங்கள் இந்த ஆண்டு தேர்தல் எப்படி நடைபெறுகிறது கவனியுங்கள்.

உங்கள் சிந்தனைக்கு:

நீங்கள் வசிக்கும் தொகுதியின் பெயர் என்ன?

சிங்கப்பூரில் எத்தனை கட்சிகள் உள்ளன?

பிரதான கட்சிகள் யாவை?

சிங்கப்பூரை பல ஆண்டுகளாக ஆட்சி செய்யும் கட்சி எது?

சிங்கப்பூரின் நாடாளுமன்றம் எங்கே உள்ளது?

தமிழில் அறிவோம் - பொதுத் தேர்தல்

நாடாளுமன்றம் - Parliament

நாடாளுமன்ற உறுப்பினர் - Member of Parliament

கட்சி- Party

தொகுதி - Constituency

வாக்கு -Vote

வாக்களிப்பு நிலையம் -Voting centre

அரசாங்கம் - Government

மக்கள் ஆட்சி - Democracy

அமைச்சர் - Minister

பிரதிநிதி - Representative

குறிப்புச் சொற்கள்