வேலன் என்ற விவசாயி தனது வயலில் நெல்மணிகளை விதைக்கத் தொடங்கினார். ‘இந்த விதைகள் வளர்ந்து, அமோக விளைச்சலைத் தரும்,’ என்று மகிழ்ச்சியுடன் இருந்தார்.
சில நாள்கள் கழித்து, கயல் தனது தந்தை வேலனுடன் வயலுக்கு வந்தாள். மண்ணிலிருந்து மிகச் சிறிய பச்சை நிறத் தளிர்கள் எட்டிப் பார்த்தன. “அப்பா, பாருங்கள்! குட்டிச் செடிகள் வந்துவிட்டன!” என்று கயல் துள்ளிக் குதித்து மகிழ்ந்தாள்.
திடீரென்று வானம் இருண்டது. குளிர்ந்த காற்றுடன் மழைத்துளிகள் மண்ணில் விழுந்தன. வேலனும் கயலும் மழையில் நனைந்தபடி வயலில் மகிழ்ச்சியுடன் ஆடினார்கள். “மழை பெய்தால்தான் பயிர்கள் வளரும்,” என்று வேலன் கயலுக்கு மழையின் அவசியத்தைப் பற்றிக் கூறினார்.
கயல் அந்த அடர்த்தியான பயிர்களுக்கு நடுவே நின்றாள். பயிர்கள் இப்போது அவளது இடுப்பு வரை வளர்ந்திருந்தன. தென்றல் காற்றில் அவை நடனமாடுவதுபோல இருந்தன.
பல வாரங்கள் கடந்தன. கயல் மீண்டும் வயலுக்கு வந்தபோது, பச்சை நிறம் மறைந்து வயல் முழுவதும் பொன்னிறமாக ஜொலித்தது. “கயல், இதோ பார்! கதிர்கள் நன்கு முற்றிவிட்டன,” என்றார் வேலன்.
அறுவடை செய்யும் நாள் வந்தது. வேலன் ஒரு கூர்மையான அரிவாளை எடுத்துக்கொண்டு வயலில் இறங்கினார். அவர் ஒவ்வொரு கட்டாக நெற்கதிர்களை அறுவடை செய்து தரையில் அடுக்கினார்.
அறுவடை செய்த நெல்மணிகள் களத்திற்குக் கொண்டு வரப்பட்டு ஒரு சிறிய மலை போலக் குவிக்கப்பட்டன. குன்றுபோல் குவிந்து இருந்த நெல்மணியின் மேல் அமர்ந்து கயல் உற்சாகமாக விளையாடினாள்.
பொங்கல் திருநாள் வந்தது. வேலன் வீட்டின் முற்றத்தில் அடுப்பு மூட்டினார். கயல் ஒரு பெரிய மண்பானையை அழகான கோலங்களால் அலங்கரித்தாள். பிறகு, வேலன் உதவியுடன் பானையில் விளைந்த புது அரிசியைப் போட்டாள்.
தொடர்புடைய செய்திகள்
பானையில் இருந்த பால் நுரைத்து மேலே வந்தது. அப்போது கயலும் அவளது தாய் அமுதாவும், “பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” என்று உரக்கக் குரல் எழுப்பினர். பொங்கல் பானையிலிருந்து பால் வழிந்து ஓடியது.
பொங்கல் தயாரானதும், வேலன் ஒரு வாழை இலையில் பொங்கலை வைத்தார். சூரியனுக்கு நன்றி கூறிவிட்டு, வேலனும் கயலும் அந்த இனிப்பான பொங்கலைச் சுவைத்தனர்.
கயல் அந்தப் பொங்கல் நாளில் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டாள். நாம் உண்ணும் உணவு, கடையிலிருந்து வருவதில்லை; அது மண்ணையும் மழையையும் விவசாயியின் கடின உழைப்பையும் நம்பியே இருக்கிறது என்பதை அவள் புரிந்துகொண்டாள். ‘இனி உணவை ஒருபோதும் வீணாக்க மாட்டேன்,’ என்று கயல் மனதில் உறுதி எடுத்தாள். மகிழ்ச்சியோடும், இயற்கைக்கும் விவசாயிக்கும் நன்றி செலுத்தும் உணர்வோடும் அந்தப் பொங்கல் திருநாள் இனிதே நிறைவடைந்தது.

