பள்ளி விடுமுறைகளையொட்டி மார்ச் 15 முதல் 23 வரையிலும் செப்டம்பர் 6 முதல் 14 வரையிலும் செந்தோசாவுக்குள் இலவச நுழைவு.
செந்தோசாவில் எஸ்ஜி60ஐ ஒட்டி பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
செந்தோசா சென்சரிஸ்கேப் தன் முதல் ஆண்டு நிறைவில் புதிய மெருகூட்டப்பட்ட உண்மை (ஏஆர்/Augmented Reality) அனுபவத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
‘சென்செரி’ (Senseri) எனும் மயில்வடிவிலான ‘ஏஆர்’ கற்பனை உருவம் வானத்தில் பறப்பதை ‘இமேஜினைட்’ செயலி மூலம் கண்டுகளிக்கலாம். நீங்களும் ‘சென்செரி’யுடன் நின்று புகைப்படங்கள், காணொளிகள் எடுத்துக்கொள்ளலாம்!
செந்தோசாவில் நிறைய மயில்கள் இருப்பதால் அதையும் செந்தோசா தீவின் உணர்வையும் அடிப்படையாகக் கொண்டு ‘சென்செரி’ உருவாக்கப்பட்டுள்ளது. Sen என்பது செந்தோசாவையும் seri என்பது மலாய் மொழியில் ஒளிமயத்தையும் குறிக்கிறது.
இப்புதிய அனுபவம், அன்றாடம் இரவு 7.30 முதல் 9.15 மணி வரை சென்சரிஸ்கேப் வழங்கும் ‘இமேஜினைட்’ அனுபவத்தில் ஓர் அங்கமாகும்.
‘இமேஜினைட்’ இல் விதவிதமான ஒளிக் காட்சிகளும் மெருகூட்டப்பட்ட உண்மை அனுபவங்களும் உள்ளன. 350 மீட்டர் நடைபாதையான ‘சென்சரிஸ்கேப்’, ஐம்புலன்களையும் வியப்பில் ஆழ்த்தும் அனுபவங்களை வழங்குகிறது.
13 மீட்டர் உயர, 25 மீட்டர் அகலத்தில் மூன்று பெரிய கட்டமைப்புகளும் உள்ளன. அவற்றிலுள்ள அழகிய இயற்கை ஒளிக் காட்சிகள், பூங்காவனத்தில் இருப்பதுபோன்ற உணர்வை வழங்குகின்றன.
சென்ற ஆண்டு மார்ச் 14ஆம் தேதி சென்சரிஸ்கேப் திறந்ததிலிருந்து 5 மில்லியன் பேர் அதற்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘சென்செரி’யின் பின்னணி
சென்செரி சாதாரணப் பிறவியல்ல. அவள் செந்தோசா தீவைக் காப்பவள். இயற்கையால் உருவானவள்.
அவளுடைய இறகுகள் செந்தோசாவின் பூக்களின் மென்மையான இதழ்களினால் உருவானவை. இறக்கைகள் கடற்பவழங்களிலிருந்து தோன்றியவை.
தீவின் பழமை வாய்ந்த மரங்களின் ஆக வலுவான கிளைகளிலிருந்து செய்யப்பட்டது அவளுடைய அலகு. அவளுடைய கண்களில் பல நூற்றாண்டுகளின் ஞானம் தெரிகிறது.
ஆனால், சென்செரி தீவானவள் மரஞ்செடிகொடிகள், உயிரினங்களாலானவள் மட்டுமல்ல. காட்டுப்பகுதி நிறைந்த குன்றுகளின் மகிமையும் அவளிடத்தில் உள்ளது. அதனால் சென்செரியால் உயரப் பறக்கமுடிகின்றது. எத்தகைய சவால்களையும் சமாளிக்க முடிகின்றது.
சென்சரிஸ்கேப் இசை அனுபவங்கள்
‘சென்சரிஸ்கேப்’பில் பகலில் ஒலிக்கும் இதமான இசையை உருவாக்கியவர், புகழ்பெற்ற உள்ளூர் இசைக் கலைஞர் ஆகஸ்ட் லம்.
அந்த இசையின் பின்னணியை அவர் தமிழ் முரசுடன் பகிர்ந்தார்.
“கேட்பவர் மனதில் வெவ்வேறு உணர்ச்சிகளை வெளிக்கொணரும் வகையில் இசையை வழங்குவதே என் நோக்கம்.
“சென்சரிஸ்கேப்’பினுள் நுழையும்போது ஒரு புதிய உலகில் நுழைவதுபோல எனக்குத் தோன்றும். அவ்வாறு புதிய சூழலுக்குள் மக்களைக் கொண்டு செல்லும் வகையில் இசையமைத்துள்ளேன்.
“செந்தோசாவின் முக்கியக் கூறுகளான ‘கேபில் கார்’, ‘மோனோரெய்ல்’, ‘கேரிலன்’ (Carillon) ஆகியவற்றை மனதில் கொண்டும் சில இசைப்பகுதிகளை உருவாக்கியுள்ளேன்,” என்றார் ஆகஸ்ட் லம்.
அவர் வியாழக்கிழமை மார்ச் 13ஆம் தேதியன்று முதன்முறையாக ‘சென்சரிஸ்கேப்’பில் பொதுமக்களின் முன்னிலையில் தன் இசையைப் படைத்தார். இனிய இசையைக் கேட்டபடி மக்கள் பொழுதை இனிதாகக் கழித்தனர்.

