மாணவர்களே, நீங்கள் சிங்கப்பூரில் வசிப்பவர் என்றால் நிச்சயம் செந்தோசா தீவுக்குச் சென்றிருப்பீர்கள். ஆனால், இதே செந்தோசாவே உங்களிடம் வந்தால்?
கூடிய விரைவில் செந்தோசா டிரக் உங்கள் பள்ளிக்கு வர வாய்ப்புள்ளது! அதற்குள் நீங்கள் நுழைந்தால் செந்தோசா தீவுக்கே சென்றது போன்ற உணர்வு இருக்கும்.
செந்தோசாவில் நீங்கள் நேரடியாகக் காணும் விஷயங்களையும் தாண்டி, நீடித்த நிலைத்தன்மைசார்ந்த அம்சங்களும் பின்னணியில் உள்ளன.
இந்த டிரக்கில் நீங்கள் கற்கும் விஷயங்கள் செந்தோசா பற்றிய உங்கள் கண்ணோட்டத்தையே மாற்றும்.
செந்தோசாவில் இயங்கும் ‘லூஜ்’ (luge) எனப்படும் கேபிள் கார் போன்ற வாகனம் எரிசக்திப் பயன்பாடு இல்லாமல் புவியீர்ப்புச் சக்தியால் (gravity) மட்டுமே இயங்குகிறது என உங்களுக்குத் தெரியுமா?
செந்தோசாவில் எந்த வகையான போக்குவரத்து எடுத்தால் சுற்றுப்புறத்துக்குச் சிறந்தது? நடப்பதா? சைக்கிள் ஓட்டுவதா? அல்லது மின்சாரப் பேருந்து, டிராம்களில் செல்வதா?
‘இம்பையா’ (Imbiah) இயற்கை நடைபாதையில் நீங்கள் காணக்கூடிய மூன்று நண்பர்கள் யார்? அவை மனிதர்களல்ல! கையில் டார்ச் விளக்கை ஏந்தியபடி நீங்கள் தேடினால் அவற்றைக் கண்டுபிடிக்கலாம்!
இந்த டிரக்கில் நீங்கள் கற்கும் விஷயங்களைச் செந்தோசாவில் மட்டுமல்ல, உங்கள் சொந்த வீட்டிலும் நீங்கள் பயன்படுத்தலாம்.
தொடர்புடைய செய்திகள்
‘வீட்டில் எப்படி மின்சாரத்தைச் சேமிக்கலாம்? ஏன் சிங்கப்பூரிலேயே உற்பத்தியாகும் உணவையே இயன்றவரைச் சாப்பிட வேண்டும்? எந்த வகையான உணவுகள் சுற்றுப்புறத்துக்கு நல்லது?’ போன்ற கேள்விகளுக்கு நீங்கள் பதில்களைக் கண்டுபிடிப்பீர்கள்!
விளையாட்டு நடவடிக்கைகளை முடித்ததும் செந்தோசா பற்றிய கதைப் புத்தகத்தைப் பரிசாகப் பெறலாம்!
செந்தோசா டிரக் அடுத்த ஒன்றரை ஆண்டுகளாக உள்ளூர்த் தொடக்கப்பள்ளிகளை வலம்வரும்.
கார்ப்பரேஷன் தொடக்கப்பள்ளியுடன் செந்தோசா டிரக் சுற்றுலா துவக்கம்
செந்தோசா டிரக் தன் சுற்றுலாவின் முதல் நிறுத்துமிடமாக, கார்ப்பரேஷன் தொடக்கப்பள்ளிக்கு ஜூலை 16ஆம் தேதி சென்றது. கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ சிறப்பு வருகையளித்து மாணவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார்.
அமைச்சர் லீயும் மாணவர்களுடன் சேர்ந்து டிரக்கினுள் ஏறிக் கண்காட்சியைக் கண்டு ரசித்தார்.
பங்கேற்ற மாணவர்களில் ஒருவரான பவித்திரா ஐங்கரன், 12, “பழைய லூஜ் வண்டிகள், ‘காயாக்’ (kayak) படகுகளால் சென்சரிஸ்கேப் நடைபாதையின் ஒரு பகுதி உருவானது எனக் கற்றேன்! அதே வகையான நெகிழிப்பொருளை அழகிய கிண்ணங்களாகவும் சூரியனிடமிருந்து காக்கும் மூக்குக்கண்ணாடிகளாகவும் (sunglasses) செய்தார்கள் என அறிந்தேன்,” என்றார்.
செந்தோசா டிரக் அருகிலேயே மாணவர்களுக்கான நடவடிக்கைகளும் நடந்தன. “நான் பழைய பேனரை (banner) வெட்டி ஒரு சாவிக்கொத்தைச் செய்தேன். இதன்வழி பொருள்களை வீணாக்காமல் எப்படி மறுபயன்பாடு செய்யலாம் எனக் கற்றேன்,” என்றார் பவித்திரா.
கார்ப்பரேஷன் தொடக்கப்பள்ளியின் செயல்வழிக் கற்றல் திட்டம்வழி மாணவர்கள் தண்ணீர் சேமிப்பு, கடல்வாழ் இருப்பிடம் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, நிலப் பற்றாக்குறை, உணவுத் தயாரிப்பில் புத்தாக்கம் போன்றவை சார்ந்த திட்டங்களை அமைச்சர் லீயிடம் படைத்தனர்.
“தண்ணீர் பயன்படுத்தும்போது எவ்வளவு பணம் செலவாகிறது என்பதைக் காட்டும் கருவியைக் குழாயின் அருகிலேயே வைக்கப் பரிந்துரைத்தேன். அதைப் பார்க்கும்போது தண்ணீரைச் சேமிக்கத் தோன்றும்,” என்றார் ஹஃபிசுல்லா, 12.
“நாம் வீட்டில் இல்லாதபோது செடிகளுக்கு நீரைப் பாய்ச்ச ஆளில்லா வானூர்தியைப் பயன்படுத்தலாம் என்றேன். செடிக்குத் தண்ணீர் போதாதபோது வானூர்தி ஐந்து நிமிடங்களுக்குத் தண்ணீர்ப் பாய்ச்சும்,” என்றார் ஆஃபா கயாம், 12.
எட்டு வயது மண்டால் அனுராதா நீர்வாழ் உயிரினப் பாதுகாப்பு பற்றி பள்ளியில் கற்றிருந்தார். “எனக்கு நீர்க்குதிரை பிடிக்கும் என்பதால் அதுபற்றிய கவிதை எழுதினேன். நீர்க்குதிரை S வடிவில் நீரில் நகர்வதை எனக்குக் காணப் பிடிக்கும்,” என்றார் அனுராதா. அவருடைய கவிதையை அமைச்சர் லீயும் கண்டு மகிழ்ந்தார்.
உங்களுக்குத் தெரியுமா?
செந்தோசா தீவின் நீடித்த நிலைத்தன்மை அம்சங்களில் ஒன்றாக, ‘கூல் நோட்’ (Cool Node) எனப்படும் வெப்பத்தைக் குறைக்கும் திட்டமும் சிலோசோ கடற்கரையில் சோதிக்கப்படுகிறது.
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உட்பட சிறுவர்களுக்கான நீடித்த நிலைத்தன்மைக் கற்றல் பயணங்களும் செந்தோசாவில் நடைபெறுகின்றன.